ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுரை


001

print

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம் என்று மாவட்ட தமிழக வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல் சாகுபடி குறித்து பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-
நெல் சாகுபடி விவசாயத்தில் மகசூலை பெருக்குவதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தினை விட, ரசாயன உரங்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. ஒரு பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் இன்றியமையாதவையாகும்.

தழைச்சத்து பயிருக்கு வளர்ச்சியையும், மணிச்சத்து பயிருக்கு வேர்வளர்ச்சி, பூ மற்றும் மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து பயிருக்கு தண்டுகளின் உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் பூச்சி, நோய் எதிர்ப்புத் தன்மையையும் வழங்குகின்றது. வீரிய ஒட்டு உயர் விளைச்சல் ரகங்கள் அதிகளவில் உபயோகிக்கப்படும் தற்போதைய சூழ்நிலையில் ரசாயன உரங்களின் தேவையும் அதிகமாக உள்ளது.

தழைச்சத்துகளை மட்டும் அதிக அளவில் உபயோகிப்பதனால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்ற ரசாயன உரங்களை விட விலை குறைவாக உள்ளதால் யூரியா உரம் விவசாயிகளால் பயிரின் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பது வழக்கத்தில் உள்ளது.

மேலும் மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவல்ல ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதும் குறைவாக உள்ளது. பயிருக்குத் தேவையான சத்துக்களை அளிக்கும் உரங்கள் சமச்சீர் அளவில் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு சத்துக்களை மட்டும் வழங்கும் உரங்களை இடுவதால் பூச்சி நோய் தாக்குதலால் பயிரின் ஆரோக்கியம் கெடுகிறது.

சாம்பல் சத்தினை தரும் பொட்டாஷ் உரத்தின் விலை அதிகம் என்ற நிலையில் பொட்டாஷ் மற்றும் பொட்டாஷ் கலந்த கூட்டு உரங்களை அடியுரமாக இடும் வழக்கம் பல விவசாயிகளால் கடைபிடிக்கப்படுவதில்லை.

நெற்பயரின் சீரான வளர்ச்சிக்கும், பூச்சி நோய்க்கும் எதிர்ப்புத்தன்மையினை அளித்தும், வறட்சியினை தாங்கும் சக்தியினை அளித்தும், பதர் ஆகாமல் நிறைந்த நெல்மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து கொண்ட பொட்டாஷ் அடியுரமாகவும் முதல் மேலுரமாக யூரியாவுடன் பொட்டாஷ் கலந்தும் இட வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிடில் 3 சத்துக்களையும் கொண்ட 15:15:15, 16:16:16 ஆகிய கூட்டு உரங்களை உபயோகிக்க வேண்டும்.

இதன் ஒவ்வொரு குருணையிலும் மூன்று விதமான சத்துக்களும் சீரான அளவில் இருப்பதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள் குறைபாடு இல்லாமல் கிடைக்கும். மேலும் ரசாயன உரங்கள் பயிருக்கு அளிப்பது மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும் பயிர் தேவையின் அடிப்படையிலும் அமைய வேண்டும் என்று பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.