Header Banner Advertisement

கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!


3

print
நடுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள்.

மனித உடலில் வேறு எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை.

ஆனால், பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பிறக்கும் வரைதான் அது முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்னையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.

இந்த பெருமையான கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை என்கிறார் கர்ப்பப்பை அகற்றப்பட்ட 200 பெண்களை ஆய்வு செய்த அமிர்தம்.

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது ஆய்வு பட்டத்துக்காக இந்த சப்ஜெட்டை கையில் எடுத்தார், அமிர்தம். அப்போதுதான் கர்ப்பப்பையை இழந்த பெண்களின் துயரம் அவருக்கு புரிந்தது.

அன்று முதல் தேவையில்லாமல் கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் அறியாமையை போக்குவதையே தனது நோக்கமாகக் கொண்டார். இதற்காக கிராமங்கள் தோறும் முகாம்களை அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரை சந்தித்த போது…

“இன்று ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம்.

கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000-ல் இருந்து 50,000 வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். காரணம் அவர்களில் 65 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பையை அகற்றப்படமலேயே சரி செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் என்பதுதான்.

கர்ப்பப்பையை எடுத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (உதாரணமாக கர்ப்பப்பை புற்றுநோயை சொல்லலாம்) இல்லையென்றால் எடுக்கக் கூடாது. நிறைய பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்றவற்றிற்கு கூட எடுத்துவிடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்..! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்பார்கள். எவ்வளவு கொடுமை! பெண்களுக்கு அவ்வளவு இம்சையையா கொடுக்கிறது உயிரை உருவாக்கும் புனிதமான அந்த கர்ப்பப்பை.

ஒருபோதும் இல்லை. மாறாக, கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவிதத்தினர் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகிறது. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.” என்கிறார் அமிர்தம்.

இதை ஆமோதிக்கும் விதமாக ஒத்தக்கடையை சேர்ந்த லிங்குசாமியும் அவரது மனைவி அழகுராணியும் தொடர்கிறார்கள்.

“உண்மைதான், என்னுடைய அம்மா, இரண்டு அக்காக்கள் என்று மூன்று பேருமே கர்ப்பப்பையை எடுத்தவர்கள் தான். அதனால் அவர்கள் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். கர்ப்பப்பை இருந்த போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும் துள்ளலும் எடுத்த பின் அவர்களிடம் சுத்தமாக காணாமல் போய் விட்டது. எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்தும் குணமாகவில்லை.

அவர்களால் தண்ணீர் குடத்தை தூக்க முடியாது. கொஞ்சம் தூரம் கூட நடக்க முடியாது. எதிப்பு சக்தியும் குறைந்தது. எப்போதும் நோயோடு வாழ்பவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

இதையெல்லாம் நேரடியாக பார்த்ததால்தான் என் மனைவிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அதை தவிர்த்தேன். மாற்று மருத்துவத்திற்கு மாறினேன். இன்று என் மனைவி கர்ப்பப்பையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்.” என்று கூறுகிறார்.

லிங்குசாமியின் மனைவி அழகுராணியிடம் பேசிய போது, “எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த சில நாட்களிலேயே என்னுடைய ஃபெலோபியன் டியூப்பில் கட்டி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆபரேஷன் மூலம் அதை சரி செய்தோம்.

மறுபடியும் அடுத்த பக்கத்தில் இருக்கும் மற்றொரு டியூப்பில் கட்டி இருப்பதாக சொன்னார்கள். இந்த கட்டி தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு தீர்வு, கர்ப்பப்பையை எடுத்துவிடுவதுதான் என்றும் சொன்னார்கள்.

கர்ப்பப்பையை எடுத்துவிட்டு தினம் தினம் செத்துப் பிழைக்கும் எனது மாமியார் மற்றும் மதினிமார்களின் அனுபவங்களை கேட்டபின் எனது கர்ப்பப்பையை இழக்க நான் விரும்பவில்லை. எனது கணவருக்கும் அதில் உடன்பாடில்லை.

அதனால் கட்டியை கரைக்க தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டேன். எந்தப் பலனும் இல்லை. வயிறு ஊத்தம் கொடுத்தது. கை, கால்களில் எல்லாம் தாங்க முடியாத வலி இருந்து கொண்டே இருந்தது. பீரியட்ஸும் சரியாக இல்லை. பசி எடுக்கவில்லை.

யாரைப் பார்த்தாலும் எரிச்சலும் கோபமும் வந்தது. அப்போதுதான் ஆங்கில மருத்துவத்தில் இருந்து விலகி வந்தோம். மாற்று மருத்துவத்தில் இதற்கான தீர்வு இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அக்குபங்க்சர் மருத்துவம் எடுத்துக் கொண்டேன். பூரணமாக குணமானது.

இப்போது ஐந்து வருடம் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லா தொந்தரவுகளும் சரியாகிவிட்டது. கட்டியும் கரைந்து விட்டது. என் கர்ப்பப்பையை இழக்காமலே என் ஆரோக்கியத்தை மீட்டுவிட்டேன்.” என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அழகுராணி.

“அவசரப்பட்டு எடுத்திருந்தால் அழகுராணியும் ஒரு நிரந்தர நோயாளியாக மாறியிருப்பார். எங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களிடம் உயிருக்கு ஆபத்து இருக்கும் பெண்களை தவிர மற்ற பெண்களை சித்தா, அக்குபங்க்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க சொன்னோம். நல்ல பலன் கிடைத்தது. இப்போது அனைவருமே நன்றாக இருக்கிறார்கள்.

கர்ப்பப்பை பாதிப்புகளில் சில வெறும் கால்சியம் மாத்திரைக்கு கூட சரியாகிவிடும் தன்மை கொண்டது. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு பல மருத்துவர்கள் ஒன்றும் இல்லாத காரணத்துக்கு கூட கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள்.

ஒரு சாதாரண புடவை எடுப்பதற்கே ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், தங்கள் உடலின் ஒரு பகுதியான பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் நல்லது.” என்று தீர்க்கமாக சொல்லி முடிக்கிறார், அமிர்தம்.

குழந்தையைப் பெற்றுத் தருவதோடு கர்ப்பப்பையின் வேலை முடிந்துவிடுவதில்லை. பெண்மையை வளப்படுத்துவதிலும் அது முக்கியப் பங்கு வகுக்கிறது. அதை பெண்கள் புரிந்து கொண்டு, பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.