Header Banner Advertisement

கேமரா கவிதை – சித்திரை திருவிழா – மீனாட்சி திருக்கல்யாணம்


3

print
தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது.

நண்பர் குணா அமுதனின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் கவிதை. அந்த கவிதையை கொண்டு படங்களுடன் கூடிய சிறிய திருவிழா பதிவு இது.

சித்திரை திருவிழாவின் முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் இங்கே படங்களுடன்.

கொடியேற்றம்

திருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக உணர்த்துவதே கொடியேற்றத்தின் நோக்கமாகும். உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் ஆயத்தமாக இருப்பதையும் கொடியேற்றம் அறிவிக்கிறது.

முதல் நாள்
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம் 

சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம்

சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு…

யானை முகன் முன்னே போக…

காமதேனு பின் தொடர்கிறாள்!

சிறுமிகளின் கோலாட்டம்..

இசைப் பாடலுடன் இளம் பெண்கள்…

இது பெண்களின் தாண்டியா…

கள்ளர் வேடமிட்ட பக்தர்கள்

சிம்ம வாகனத்தில் மீனாட்சி

கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை

நோக்கம்
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.

இரண்டாம் நாள்
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்

மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா

கரகாட்டம்..

கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண்

அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா..

சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம்

தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர்

சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது

நோக்கம்
ஐந்து பூதங்களையும் மனிதன் அடக்கி வாழ்வில் முத்தி பெற வேண்டும் என்பதற்காக அய்யன் பூத வாகனத்திலும், நீரும் பாலும் கலந்திருந்தாலும் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல் நல்லதும் கேட்டதும் கலந்திருக்கும் இந்த உலகில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வருவதாக ஐதீகம்.

மூன்றாம் நாள்
ராவண கைலாச பர்வதம் – கேட்டதை தரும் காமதேனு

சப்பர உலா!

புறப்பாடு

ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்..

காமதேனு வாகனத்தில் மீனாட்சி

இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா…

நான்காம் நாள்
தங்கப் பல்லக்கில் பவனி

நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்..

வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சி

தங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ….

தங்கப்பல்லக்கு உலா… மக்கள் வெள்ளத்தில் !

உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை.

நோக்கம்

இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..

ஐந்தாம் நாள்
குதிரை வாகனம்

சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாக கொண்ட வேடர் பரிலீலை நடைபெறுகிறது.

மீனாட்சியும், சொக்கரும் குதிரை வாகனத்தில் வீதி உலா..

கம்பீரமான தங்க குதிரை

மதுரையின் அரசி.

தாயை கண்ட மகிழ்ச்சி மழலையிடம்…

மக்கள் வெள்ளத்தை கடக்கும் மகேசன்..

நோக்கம்
அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதுதான் இதன் தத்துவம்.

ஆறாம் நாள்
ரிஷப வாகனம்

ஆறாம் நாள் வீதி உலா கோலாட்டத்துடன் ஆரம்பம்..

ஆன்மிகத்தை வளர்த்தவர்கள்

தர்மம் என்ற அறத்தினை நான்கு கால்களாகக் கொண்டு, எவ்வித மாசுமற்ற வெள்ளை நிறமுடைய ரிஷப வாகனத்தில் சொக்கர் – மீனாட்சி மாசி வீதி உலா…

சிவனாக சிறுவன்

வாள் பிடித்த சிறுவன்

கடவுளர்கள் வேடத்தில் சிறுமிகள்

நோக்கம்
ரிஷபம் என்பது காளையை குறிக்கும். அது தர்மத்தின் வாகனம் என்பது நம்பிக்கை. காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமை தாங்கும் காளை போல தன்னம்பிக்கை, மனிதர்களுக்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறைவனின் நாமத்தையும், கண்கள் நல்ல காட்சியையும் கண்டு உணர்தலே இந்த வாகன உலாவின் பொருள்.

ஏழாம் நாள்
யாழி, நந்தி வாகனம்

அம்மனை தரிசிக்க அம்மன் வேடத்தில் ஒரு சிறுமி

உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடும் சிறுமியர்

பக்த்தர்களின் நேர்த்திக்கடன்

முன்னே செல்லும் யானை

யாழி மற்றும் நந்தி வாகனத்தில் பவனி

காவடி சுழற்றும் பக்த்தர்

நந்தி வாகனம்

யாழி வாகனம்

யாழிமீது அன்னை மீனாட்சி

சொக்கரும் மீனாட்சியும்

நோக்கம்
அன்னை மீனாட்சி பவனி வரும் யாழி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம். ஆணவம் கொண்ட மனிதன் அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே நோக்கம்.

எட்டாம் நாள்
ஊடல் உற்சவம் – மீனாட்சி பட்டாபிஷேகம்

ஊடல் உற்சவம்

மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும். அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும். மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கீரிடத்திற்கும் அபிஷேகம் நடைபெறும்.

கழுத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்களின் மலரான வேப்பம்பூவை சிறப்பிக்கும் வகையில் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்படும். இன்றிலிருந்து சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். மதுரையின் அரசி.

பட்டாபிஷேகம் முடிந்ததும் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் மதுரைக்கரசி.

ஒன்பதாம் நாள்
திக் விஜயம் – இந்திர வாகன விமானம்

மீனாட்சியம்மன் இந்திர விமானத்தில் திக் விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த நாலாபுறம் படையெடுத்துச் செல்வது போல், பட்டாபிஷேகம் நடந்த மறுநாள் மீனாட்சி அம்மன் இனி இங்கு தன்னுடைய ஆட்சி என்பதை பக்தர்களுக்கு அறிவிக்கவே இந்த பவனி.

திக்விஜயம் தொடக்கம்

பாலகர்களின் போர்

அம்பு எய்த படுகிறது

வில் விடுபடுகிறது

மீனாட்சி திக்விஜயம் என்பது எட்டு திக்கும் உள்ள பாலகர்கள் எட்டு பேரையும் வெற்றி கொள்ளும் நிகழ்ச்சி. அதன்படி கீழமாசி வீதியில் இந்திரனையும், விளக்குத்தூண் அருகில் அக்னியையும், தெற்குமாசி வீதியில் எமனையும், தெற்குமாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியும், மேலமாசி வீதியில் வருணனையும், மேலமாசி வீதி – வடக்கு மாசி வீதி சந்திப்பில் வாயுவையும், வடக்குமாசி வீதியில் குபேரனையும், வடக்குமாசி வீதி – கிழக்குமாசி சந்திப்பில் ஈசானையும் வெற்றி கொண்டப் பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.

இறுதியாக சொக்கநாதர் போருக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனாட்சி நாணம் கொள்கிறாள். உடனே அவரின் மூன்றாவது மார்பகம் மறைந்து போக ஸ்ரீ ரெங்கச்சந்திரத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருக்கல்யாண விருந்து ஏற்பாடு

சமையலில் உதவும் பக்த்தர்கள்

விடிய விடிய விருந்து தயாராகிறது

பத்தாம் நாள்
திருக்கல்யாணம் – பூப்பல்லக்கு உலா

உலகை வென்ற மீனாட்சி அம்மன் இறுதியாய் இறைவனையும் வென்றாள்.அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குலசேகரப் பட்டர் வழிவந்த சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரரகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு மாலை மாற்றி கொண்டபின் மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் ப்ரியா விடை அம்மனுக்கு பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறுகிறது.

படம்: பரத் கார்லோஸ்
படம்: காளிமுத்து
படம்: காளிமுத்து
படம்: பரத் கார்லோஸ்
படம்: பரத் கார்லோஸ்
படம்: பரத் கார்லோஸ்

பூப்பல்லக்கில் அன்னை மீனாட்சி

கடந்த வருட பூப்பல்லக்கில் நான் எடுத்த படங்கள். கடைசி மூன்று படங்களில் பூப்பல்லக்கை காணலாம்.

COURTESY & SOURCE : படங்கள்

 குணா அமுதன், காளிமுத்து, பரத் கார்லோஸ், எஸ்.பி.செந்தில்குமார்.