Header Banner Advertisement

 கொக்கென நினைத்தாயோ கொங்கணவா..!


02tvpt-pilgrims1_880900g

print
‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!’ என்று உடலின் நிலையாமையை பற்றி சித்தர்கள் நிறைய சித்தாங்களை பாடல்களாக பாடியுள்ளனர். அதற்கேற்ப சித்தர்கள் அடிக்கடி ஒரு உடலுக்குள் இருந்து மற்றொரு உடலுக்குள் கூடுவிட்டுகூடு பாய்ந்து விடுவார்கள். அப்படி மாறும் பொழுது தங்கள் உடல் அழியாமல் காக்கும் நெறியும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

காயசித்தி, வாதசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என அனைத்து சித்திகளும் கைவரப்பெற்றவர் கொங்கணவர். கொங்குநாட்டு கோவில் வாசலில் வயிற்றுப்பிழைப்புக்காக, இரும்பை உருக்கி அதில் பாத்திரம் செய்து வியாபாரம் நடத்திய பெற்றோர்கள் கொடுத்துச்சென்ற உடல் அல்ல கொங்கணவரின் உடல்.

பெற்றோர்கள் செய்து வந்த அதே தொழிலைத்தான் கொங்கணவரும் செய்தார். ஆரம்பத்தில் வறுமை வாட்டியெடுத்தாலும், பின்னாளில் மாடமாளிகையில் சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வாழ்ந்தார்.
சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் எப்போதும் தொண்டூழியம் செய்து வந்தார். இவரை நாடி வரும் சித்தர்கள், இவரது முற்பிறவி நோக்கம் ஈடேற ஞானப்பாலை புகட்டினர்.

ஒருநாள் கொங்கணவர் சன்னியாசியாகி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அடர்ந்த காடுகளையும், மலைகளையும் கடந்தார். கற்பக மூலிகைகளை கண்டார். சித்தர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. அது பல வெளிச்ச எல்லைகளை காட்டியது. இப்படி காடுகளில் அறிய மூலிகைகளை தேடிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நிறைய அழுகுரல்கள் கேட்டன. பளிங்கர் இன இளைஞன் ஒருவன் இறந்து போயிருந்தான். அந்த துக்கம் தாளாமல் உற்றார் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த துயர சம்பவம் கொங்கணவரை வாட்டியெடுத்தது. அவர்கள் துயர்போக என்ன செய்யலாம்என்று நினைத்தார்.

கொங்கணவருக்குத்தான் கூடுவிட்டு கூடுபாயும் கலை கைவந்ததாயிற்றே!. பளிங்கர் இளைஞன் மீது பாவப்பட்ட கொங்கணவர் மறைவான ஒரு இடத்திற்கு சென்று தனது உடலை துறந்துவிட்டு அந்த இளைஞனின் உடலுக்குள் புகுந்து கொண்டார். சுற்றிலும் சுற்றத்தார் அழுதுகொண்டிருக்க, துயிலில் இருந்து எழுபவன் போல் அந்த இளைஞன் உயிர்பெற்று எழுந்தான். அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.

கூட்டமும் கலைந்தது. அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். அப்போது அங்கு கொங்கணவ சித்தரின் உயிரற்ற உடல் மறைவான இடத்தில் இருப்பதை பார்த்துவிட்டனர். உயிரில்லா உடலை அப்படியே விட்டுப் போகும் பழக்கம் பளிங்கர்களுக்கு கிடையாது. அதனால் ஆங்காங்கே சிதறிக் கிடந்த மரப்பட்டைகளை ஒன்றாக சேர்த்து உடலை எரித்து சாம்பலாக்கினர்.
சித்தருக்கு எந்த சரீரமும் சொந்தமில்லை தான். உயிர்வாழ ஒரு கூடு வேண்டும். அப்படி ஒரு கூடாகத்தான் பளிங்கர் இளைஞனின் உடல் கொங்கணவ சித்தருக்கு கிடைத்தது.

கொங்கணவ சித்தர் காடுமலைகளில் அலைந்துதிரிந்து அரிய மூலிகைகளை அனைத்தையும் தெரிந்து கொண்டார். காயசித்திகளையும், மகாசித்தர் போகர், அகத்தியர் என்று பல சித்தர்களையும் சந்தித்து ஞானம் பெற்றார். ஆனந்த புனலில் மூழ்கியபடி நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது பார்த்து வானத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கொங்கணவரின் கண் இமையில் எச்சமிட்டது. சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்த கொக்கு எரிந்து சாம்பலானது.

பொதுவாக சித்தர்கள் நிஷ்ட நிலைக்கு சென்றால் ஆகாரம் இல்லாமல் நீண்டகாலம் இருப்பார்கள். கொங்கணவரும் நீண்டநாட்களாக ஆகாரம் இன்றி இருந்தார். கொக்கு நிஷ்டையை கலைத்ததால் சித்தருக்கு பசியெடுத்தது. ஒரு வீட்டுக்கு முன் நின்று உணவு கேட்டார்.

அந்த வீட்டுப்பெண் கொங்கணவரை கண்டுகொள்ளவே இல்லை. தனது கணவரின் பாதங்களை நீரால் கழுவி உடைகளை களைந்து உணவருந்த தலைவாழை இலைபோட்டு தண்ணீர் தெளித்து பதார்த்தங்களை பரிமாறினாள்.

பசியுடன் வாசலில் காத்திருந்த கொங்கணவ சித்தர் அத்தனை காட்சிகளையும் பார்த்து பொறுமை இழந்தார். ஆனாலும் அந்த பெண்மணி கண்டுகொள்ளவே இல்லை. கணவனுக்கு உணவு பரிமாறி தாகம் தீர்த்து கைகழுவ உதவி செய்து தாம்பூலம் மடித்து கொடுத்து கணவனை ஓய்வெடுக்க செய்தார்.

வீடுகளில் பத்துபாத்திரம் தேய்க்கும் ஒரு சாதாரண மானுடப்பெண் ஒரு கவளம் சோற்றுக்காக இத்தனை நேரம் காத்திருக்க வைத்துவிட்டாளே என்று கோபம் பொங்க, கண்கள் சிவக்க முறைத்துபார்த்தார்.

‘என்ன கொங்கணவா.. என்னை கொக்கென்று நினைத்தாயா?’ என்று அவரது கோபத்தை கண்டுகொள்ளாமல் அந்த பெண் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத கொங்கணவர் அதிர்ந்து போய்விட்டார். ஞானிகளுக்கு மட்டும் தான் இது சாத்தியம். நொடிப்பொழுதில் மனதில் தோன்றும். இதை ‘பிராதிபா’ என்பார்கள். மனம் தூய நிலையிலும் சாத்வீகமும் நிறைந்த ஞானிகளுக்கே இது கைகூடுகிறது. தூயமனம் ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த ஒளியின் வெளிச்சத்தினால் ஞானிகள் உலகில் நிகழும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து வெளிப்படுத்தவும் முடிகிறது.

ஆனால் சாதாரண மானிட பெண்ணான இவளால் இது எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்தில் தான் இருக்கிறது என்றாலும் நமக்கே தெரியாத ஆழ்கடல் ரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இந்த பூமியில் சாதாரண பெண்ணிடம் கூட அதீத சித்து இருப்தைக்கண்டு வெட்கமுற்ற கொங்கணவர் அந்த இடத்தை விட்டே அகன்றார். மனம் நொந்து போனார். தனது தவ வலிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்என்று நினைத்தார்.

அதற்காக ஒரு இடம் தேடி கானகத்தில் அலைந்தார். அப்போது ஜோதி சொரூபமாக கவுதம மகரிஷி ஒரு சமாதியில் இருந்து வெளிப்பட்டார். அவரை வணங்கிய கொங்கணவர், தன்னைப்பற்றிய எல்லா விபரங்களையும் கூறி முடித்தார்.

‘சுவாமி, நான் இன்னும் அதிகமான தவ வலிமையும் சித்தியும் அடைய வேண்டும், அதற்கு தாங்கள் தான் அருள வேண்டும்’ என்றார்.

‘நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில் நான் என்ற முனைப்புதான் முன்னதாக நிற்கும். ஆன்மா முன்னே நிற்க பிரம்மம் பின்னே நிற்கும். பின்னதில் பிரம்மம் முன்னே நிற்க ஆன்மா பின்னே நிற்கும். நீ இன்னும் உயர் சித்தி பெற சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடம் இதுதான்’ என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், கவுதம மகரிஷி.

கொங்கணவர் பள்ளமாக இருந்த அந்த இடத்தில் இறங்கினார். மழை பொழிந்தது-. பூமி மூடிக்கொண்டது. துக்கம் இல்லாத ஒளிமயமான மனநிலை மனதை உறுதிப்படுத்தியது. ஒன்றையே மனம் நினைத்து அதிலே நிலைத்திருப்பது தான் சமாதி நிலை. 12 ஆண்டுகள் தொடர்ந்து சமாதி நிலையில் இருந்தார், கொங்கணவர்.

பற்றற்ற சித்தருக்கும் சித்துகள் மீதான ஆசை பற்றற்று போகவில்லை. சமாதி நிலையில் இருந்து திரும்பிய கொங்கணவர், மேலும் உயர்ந்த நிலையை அடைய வரங்கள் பெறுவதற்காக யாகங்களை தொடங்கினார். இது கவுதம மகரிஷிக்கு கோபத்தை வரவழைத்தது.

அவர், கொங்கணவரிடம், ‘சித்தர்கள் வாழ்க்கை வேறு, முனிவர்கள் வாழ்க்கை வேறு. சித்தர்கள் எப்போதும் முனிவர்கள் ஆவதில்லை. சாபங்களும், வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உண்டு. உனது அதீத ஆசைக்கு பிரதிபலன் எனது சாபம் தான். இதோ பிடி சாபத்தை’ என்று கூறி சாபமிட்டார்.

‘சுவாமி என்னை மன்னியுங்கள்! சாபம் என்று ஒன்று உண்டெனில் விமோசனமும் உண்டல்லவா… அதற்கு வழி சொல்லுங்கள்’ என்றார். அதற்கு அவர் நீ தில்லை வனத்துக்கு சென்று தாயாரை துதித்தால், சாபவிமோசனம் பெறுவாய் என்றார். தில்லை வனத்தில் தாயாரை துதித்தபோது பராசர முனிவர் அங்கு வந்தார். தமது ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்து கொங்கணவருக்கு சாபவிமோசனம் கொடுத்தார். முனிவர்களைப்போல் யாகங்கள் வளாப்பதற்கும் வரம் தந்தார். கொங்கணவரும் யாகம் செய்ய தொடங்கினார், அந்த யாகத்திற்கு கவுதம மகரிஷி நேரில் வந்து ஆசிர்வதித்தார்.