பட்டுப்புழு வளர்ப்புக்கு நிகழாண்டில் 700 ஏக்கரில் மல்பரி நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்


002

print

நாமக்கல் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்புக்கு நிகழாண்டில் 700 ஏக்கர் அளவுக்கு புதிதாக மல்பரி வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : –

நாமக்கல் மாவட்டத்தில் இரு சுழற்சியின பட்டுப்புழுக்களை, இனப்பண்புகளைப் பராமரித்து விதைக்கூடுகள் உற்பத்தி செய்வதற்கென கொல்லிமலை செம்மேட்டில் 13.10 ஏக்கர் பரப்பில் பி-1 விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பண்ணைக்கு நீர் ஆதாரத்தை மேம்படுத்த ரூ.1.19 லட்சம் மதிப்பீட்டில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணையில் விதைக்கூடு உற்பத்தி செய்வதுடன் மல்பரி நாற்று உற்பத்தி செய்து தனியார் விவசாயிகளுக்கு புதிய நடவிற்கு விற்பனை செய்து வருகின்றது. மேலும் நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கொல்லிமலை ஆகிய பகுதிகளில் மல்பரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட தொழில்நுட்ப சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பட்டு உற்பத்தி தொழிலின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 1,179 விவசாயிகள் 1,811 ஏக்கர் பரப்பளவில் மல்பரி பயிர் சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தித்தொழிலை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் விளைச்சல் ரக மல்பரி 925 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்தமைக்காக 644 விவசாயிகளுக்கு ரூ.75.12 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 203.20 ஏக்கரில் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துள்ள 124 விவசாயிகளுக்கு ரூ.46.07 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்தல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு குடில் கூரை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 148 விவசாயிகளுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள 226 விவசாயிகளுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

600 விவசாயிகளுக்கு ரூ.2.02 லட்சம் புழு வளர்ப்பு காப்பீடு மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பில் உடல் நலக்காப்பீடு என 2,791 பயனாளிகளுக்கு 90 சதவீத மற்றும் 100 சதவீத நிதியுதவியில் காப்பீட்டு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கண்டுணர்வு சுற்றுலாவும், சிறிய அளவிலான 6 இளம் புழு வளர்ப்பு மையங்கள் நிறுவிய 7 விவசாயிகளுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவியும், பெரிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்த விவசாயிகளுக்கு ரூ.4.20 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.

250 பட்டு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. 102 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கு ரூ.7.39 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 2015-16 ஆம் நிதியாண்டில் 477.50 மெட்ரிக் டன் பட்டுப்புழு உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 399.60 மெட்ரிக் டன் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு நிகழாண்டு வெண்பட்டு உற்பத்தியில் இந்தியாவிலே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட நாமக்கல் மாவட்டம் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியுள்ளது.

இந்த நிதியாண்டில் (2016-17) சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் புதிய மல்பரி நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டு விவசாயிகளில் 70 சதவிகிதத்திற்கு மேல் அயலின பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர் என்று ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.