Header Banner Advertisement

“விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!”


VILLANGASEITHI

print

ஸ்ரீசரணர்கள் காஞ்சி வியாஸச்ராந்தலேயேச்வரர் ஆலயத்தில் தரிசனம் கொடுத்து வந்த காலம். ஒருநாள் உணர்ச்சிப் பெருக்கை உடலெல்லாம் தேக்கிய ஓர் ஆந்திர தம்பதி ஒரு பெண் குழந்தையுடன் வந்தார்கள். தம்பதியில் ஸதியாக இருந்த பெண்மணி புகழ்பெற்ற பத்திரிகையாளரான ‘ஆந்திரப்ரபா’ ஆசிரியரும், காந்திஜியிடம்’நெருக்கம்’என்று சொல்லுமளவுக்குப் பழக்கம் கொண்டவருமான நீலம் ராஜு வேங்கடசேஷய்யாவின் மகளார்.. தேர்ந்த காந்தியவாதியாக இருந்த நீலம் ராஜு பின்னாளில் பெரியவாளின்பரம பக்தரானார்.

அவர் குடும்பம் முழுதும் பெரியவாள் பக்தியில் மூழ்கித் திளைத்தது. அன்று அந்த அம்மணியும் அவரது பதியும் திருச்சந்நிதியில் தங்கள் உணர்ச்சியை,அதற்குக் காரணமான நிகழ்ச்சியை உரையாக்கிக் கொட்டினர். அவர்கள் வசித்தது லண்டனில். அங்கிருந்து அவர்கள் வேறேதோ தேசத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பெரியதொரு கோளாறு ஏற்பட்டது. ‘ஸேஃப் லாண்டிங்’குக்கு வாய்ப்பேயில்லை என்பது போன்ற ஆபத்து நிலை என்று விமான ஓட்டிகள் அறிவித்து விட்டனர்.

பிரயாணிகளின் மனநிலையைச் சொல்ல வேண்டுமா?. இத் தம்பதியின் மனம் பெரியவாளிடந்தான் ஓடி, அதைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்து ஆபத்து நிவாரணம் கோரியது. அவர்களுக்கு மஹானின் காப்பில் இருந்த நம்பிக்கையுறுதி காரணமாக, அஞ்சிக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கும், தங்களது இந்திய தேசத்திலுள்ள ‘ஸேஜ் ஆஃப் காஞ்சி’யைத் தெய்வத்தின் அவதாரமாகவே வர்ணித்து,ஆபத்பாந்தவரான அவரை வேண்டினால் விபத்து ஓடிப் போய்விடும் என்று தைரியமூட்டினர்.

உயிராபத்து என்றால் உய்வுக்கு எதைத்தான் பிடித்துக் கொள்ள மாட்டார்கள்? விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது! சிறிதுபோதில் அதுவரை விமான இயக்குனர்களின் முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காத கருவிகள் அதிசயமாக ஒத்துழைக்கலாயின! ‘மிராகிள்’ என்று அவர்கள் வியக்குமாறு விபத்து விலகி விமானம் சொஸ்தமாக நிலத்தில் இறங்கியது!

சக பயணிகள் யாவரும் தம்பதியரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர்.தம்பதியர் பெரியவாளுக்குக் கடிதம் எழுதினாலோ,அல்லது அடுத்தமுறை அவரைக் காணும் போதோ தங்கள் எல்லாருடைய இதயபூர்வமான நன்றி நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். தம்பதியோ உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்; உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்;அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர்.

 

கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.