Header Banner Advertisement

விறகு சுமந்த சிவன்


IMG_20141203_084022-1

print
 வரகுண பாண்டியன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது ஏமநாதன் என்கிற யாழ்ப்பாணன் வட இந்தியாவில் பல இசை ஆராதனைகளைச் செய்து ஏகப்பட்ட பரிசுகளை வென்று மதுரை வந்தடைந்தான். மன்னனின் சபை அடைந்ததும் இன்முகத்துடன் வரகுண பாண்டியன் வரவேற்றான். தன்னை வரவேற்ற வரகுணனை பலவாறு புகழ்ந்து பாடினான்.
பிறகு தனது யாழ் இசைக்கருவியை சுத்தமாகக் கூட்டி இன்னிசை பாடினான். கேட்டவர்கள் தங்களை மறந்தனர். இன்பம் கொண்ட வேந்தன் பரிசுகளை அள்ளி வழங்கினான். எல்லா மன்னர்களிடமும் பரிசு பெற்றுக் கொண்டே இருந்த ஏமநாதனுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாடலில் தன்னை மறக்கச் செய்த ஏமநாதனுக்கு தங்க நகைகளையும், பல பொருட்களையும், உணவுக்கு வேண்டிய நிலத்தையும், தங்கிக் கொள்ள பெரிய வீட்டையும் பரிசளித்தான் பாண்டியன். இத்தனையும் பெற்றுக்கொண்ட ஏமநாதனுக்கு கர்வம் தலைக்கேறியது. பாண்டியனின் பரிசில் அவன் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

“மன்னா! கலைகளில் சிறந்தது பாண்டியநாடு என்று சொல்கிறார்களே! இந்த பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டி போட்டு பாடக்கூடிய பாடகர்கள் யாராவது இருக்கிறார்களா..! அப்படியிருந்தால் என்னுடன் போட்டியிட்டு பாடச் சொல்லுங்கள். அவர் வெற்றி பெற்றால் நான் இதுவரை வாங்கிய அனைத்து பெருமைகளையும், பெற்ற பரிசுகளையும் பாண்டிய மன்னனிடம் ஒப்படைப்பேன். நான் வெற்றி பெற்று உங்கள் பாடகர் தோற்றால் இந்த பாண்டிய நாடே எனக்கு அடிமை என்று பட்டயம் எழுதித் தரவேண்டும். சரியா..!” என்று கர்வத்துடன் கேட்டான் ஏமநாதன்.

“ஏமநாதரே! உமது பாடல் கேட்டு, பரவசப்பட்டு மகிழ்ச்சியோடு இருக்கும் தருணத்தில் இப்படியொரு முடிவை அறிவிக்கிறீர்கள்! ஆனாலும் பாண்டிய நாடு இதற்கெல்லாம் சளைத்தது அல்ல! எல்லாவித கலை வித்தகர்களும் இங்குண்டு. இசையில் வல்லவராகிய பாணபத்திரர் உங்களுடன் போட்டியிடுவார்” என்று கூறி ஏமநாதனை அவனது தங்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன்.

பின் பாணபத்திரரை அழைத்து வரச் செய்தான். “பாணபத்திரரே! இசையில் சிறந்த ஏமநாதனோடு நீர் போட்டியிட்டு பாட முடியுமா?” என்று கேட்டான் மன்னன்.

“மன்னவரே! தங்கள் திருவுள்ள சித்தத்தின்படியும் சிவபெருமானின் அருள் வலிமையாலும் பாடும் வல்லமை பெறுவேன். மிகச்சிறப்பாக பாடி ஏமநாதனின் கர்வத்தையும் போக்குவேன். அவன் பெற்ற வெற்றி விருதுகளையெல்லாம் தட்டிப் பறிப்பேன்” என்று பாணபத்திரன் சூளுரைத்தான்.

மன்னன் மகிழ்ச்சி கொண்டான்.

“நல்லது. நீ நாளை அவனோடு போட்டியிட்டு பாட வேண்டும். இன்று அதற்கான சாதகம் செய்! இப்போது போகலாம்” என்று அனுப்பி வைத்தான்.

பாணபத்திரன் தனது வீடு நோக்கி நடந்தான்.

ஏமநாதனின் சிஷ்யர்கள் பலரும் நகரின் பல இடங்களுக்கு சென்று ஆங்காங்கே இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார்கள். அப்படியொரு இசை நிகழ்ச்சியை பாணபத்திரனும் கேட்டான். அந்த இசையைக் கேட்டு வியந்தான்.

‘ஓ! நாம் தவறு செய்து விட்டோமோ…! ஏமநாதனிடம் இசைக் கற்றுக் கொள்பவர்களே இப்படியானால், ஏமநாதன் எப்படி பாடுவானோ? நாளை நாம் பாடி அவன் வெற்றி பெற்றால் என்ன செய்வது? என்னால் இந்த பாண்டிய மண்ணுக்கு ஒரு கலங்கம் ஏற்படுவதை என் மனம் ஏற்கவில்லை நான் என்ன செய்வேன்?” என்று பலவாறு கவலைக் கொண்டான்.

நேராக திருக்கோவில் சென்றடைந்தான். சிவபெருமானை வணங்கினான். “இறைவனே! எம்பெருமானே! அடியேனுக்கு தாங்கள் திருவருள் புரிய வேண்டும். நாளை நடைபெறும் இசைப்போட்டியில் வெற்றியருள வேண்டும்!” என்று வேண்டினான். இறைவன் மீது தனது பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் வீடு நோக்கிச் சென்றான்.

பக்தனின் குறைகேட்டப் பின்னே பரம்பொருளால் சும்மா இருக்க முடியுமா? உடனே ஏமநாதனை மதுரையம்பதியை விட்டு விரட்ட முடிவு செய்தார். ஒரு விறகு வெட்டியாய் தன்னை மாற்றிக் கொண்டார். இடையில் கந்தைத் துணியை உடுத்திக் கொண்டார். வலது பக்கத்தில் கொடுவாளைச் சொருகிக் கொண்டார். பாதங்களில் தேய்ந்து போன பழைய செருப்புகளை அணிந்து கொண்டார். நைந்து போன பழைய உறையில் யாழை எடுத்து தோளில் தொங்கப் போட்டுக் கொண்டார்.

தலையில் விறகை சுமந்து கொண்டு வீதியில் நடந்தார். விறகின் விலையைக் கூறி சென்றார். விறகு விற்கும் வித்தகரைக் கண்டு பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. விலைக் கேட்ட பெண்களுக்கு கூடுதலாக விலையைச் சொன்னார். இதனைக் கேட்டு பெண்கள் விறகு வாங்காமல் திரும்பினர். பல தெருக்கள் கடந்தும் விறகு விற்பனையாகவில்லை.

களைப்படைந்த பெருமான் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார். தலையில் இருக்கும் விறகு சுமையை ஒரு ஓரமாக இறக்கி வைத்தார். திண்ணையில் இளைப்பாறினார். அப்போது இனிமையான பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலின் இனிமை வீட்டுக்குள் இருந்த ஏமநாதனையும் சென்றடைந்தது.

இசையின் நயம் கேட்டு இமைக்க மறந்தான். மனதை உருக்கும் இந்த கானத்தை இசைப்பது யாரோ என்று வெளியே வந்து பார்க்க வினைந்தான். அந்த வேளையில் பெருமான் பாடுவதை நிறுத்தினார். வெளியில் வந்த ஏமநாதன் விறகு வெட்டியைப் பார்த்து, ‘யாரப்பா நீ….!’ என்று கேட்டான்.

“சாமி! நான் யாழிசையில் சிறந்து விளங்கும் பாணபத்திரரின் அடிமை. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நானும் இசை கற்றுக் கொள்ள ஆவல் கொண்டேன். பாணபத்திரரைப் பார்த்து கேட்டேன். அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார். எனக்கு இசை மண்டையில் ஏறவில்லை. உனக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை. நீ எனக்கு மாணவனாகும் தகுதி படைத்தவன் இல்லை என்று கூறி விரட்டிவிட்டார். அதனால்தான் விறகு வெட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சிவபெருமான்.

“அப்படியா…! அப்பனே! நீ பாடிய பாடலை மீண்டும் ஒரு முறை பாடு கேட்போம்” என்றான் ஏமநாதன்.

இறைவன் தனது யாழை உறையில் இருந்து எடுத்தார். அதன் நரம்பை முடுக்கினார். சுருதி சேர்த்தார். விரலால் மீட்டினார். இனிமையான ராகங்களை இசைத்தார். யாவரும் மனம் லயித்துப் போகும் நல்லிசையை எழுப்பினார். இந்த இசையுடன் தனது குரலிசையையும் இணைத்து பாடினார். பாடலில் பல வகையான சிறப்புகள் மேலோங்கி விளங்கின. இசை தேவகானமாய் எங்கும் பரவியது.

இந்த தேவகானம் ஏமநாதனின் உடலிலும் புகுந்து கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மனதை மதி மயங்க வைத்தது. ஆச்சரியம் கொண்ட ஏமநாதன் வியப்பு விலகாமலே “இது…! நான் இதுவரை கேட்டறியாத இசை. இது சாதாரண மனிதனின் இசையில்லை. எல்லாம் வல்ல இறைவனின் இசையாகவே பார்க்கிறேன். இது மிகப்பெரிய ஆச்சரியம்! பாணபத்திரரால் ஒதுக்கி விரட்டப்பட்ட ஒருவனிடமே இப்படியொரு கானம் என்றால், பாணபத்திரரின் இசை…! யப்பா…! நினைத்துப் பார்க்கவே மனம் கலங்குகிறது” என கூறிய ஏமநாதன் மிகுந்த கவலைக் கொண்டான். இனியும் மதுரையில் இருக்க அவன் தயாராக இல்லை. தனது சிஷ்யர்களைப் பார்த்தான். அவர்களும் நிலைக்குலைந்து போனார்கள்.

தனது பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் கிடந்த இடத்திலேயே விட்டுவிட்டு இரவோடு இரவாக தனது சிஷ்யர்களுடன் ஊரைவிட்டு காலிசெய்து ஓடினான். இரவு நேரம் என்பதால் ஏமநாதன் ஊரைவிட்டுச் சென்றது யாருக்கும் தெரியாது.

அன்றிரவு பாணபத்திரருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் சோமசுந்தரப் பொருமான் தோன்றினார்.

“பாணபத்திரா! நீ என்னிடம் என்ன வேண்டினாயோ அது நிறைவேறியது. உனது வேண்டுகோளை ஏற்ற யாம் விறகு வெட்டியாய் வேடம் கொண்டோம். ஏதநாதனைக் கண்டோம். எம்மை பாணபத்திரனது அடிமை என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம். சாதாரிப் பண்ணில் அமைந்த பாடலைப் பாடினோம். பயந்து போன ஏமநாதன் நகரை விட்டே ஓடக் கண்டோம். உன்னைக் காத்தோம்!” என்று கூறினார்.

கனவு கண்ட பாணபத்திரன் நடந்தது தெய்வச் செயலோ! என்று உள்ளம் பதறி விழித்துக் கொண்டான். அவனது உடல் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது.

பக்தி பெருக்கெடுக்க கண்களில் கண்ணீர் கொட்டியது. நெக்குருகிப் போன நெஞ்சோடு விடிவதற்குள் திருக்கோயில் சென்றான் பாணபத்திரன். சோமசுந்தரப் பெருமானை மனமுருக வணங்கினான்.

“எம் பெருமானே! எனது வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவனே! நான் என்ன பாவம் செய்தேன்? என்பொருட்டு தாங்கள் விறகு சுமக்க வேண்டுமா? மாபெரும் உலக மகா சக்தியை சாதாரண மனிதனாக்கி விட்டேனே! மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பாவத்தை செய்துவிட்டேனே! நான் என்ன செய்வேன் என் தேவனே! அபசாரம் செய்த என்னை மன்னித்தருள வேண்டும் எம்பெருமானே!” என்று பலவாறு இறங்கி வணங்கி வலம் வந்து வணங்கினான்.

அதன்பின் அரசனான வரகுண பாண்டியனை சென்று பார்த்து வணங்கினான். பாணபத்திரரைப் பார்த்ததும் பாண்டியன் ஏமநாதனை அழைத்துவர காவலர்களை அனுப்பிவைத்தான். பல இடத்திலும் தேடினர். ஏமநாதனை எங்கும் காணோம்.

காவலர்கள் ஏமநாதனை தேடுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அறிந்தனர். அவர்களில் சிலர், “காவலர்களே!” ஏமநாதன் நேற்று மாலை வரை இங்குதான் இருந்தான். மாலை வேளையில் ஒரு விறகு வெட்டி வந்தான். தன்னை பாணபத்திரனின் அடிமை என்றான். பின் இனிதான கீதம் இசைத்தான். அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் இரவோடு இரவாக ஓடிச் சென்றுவிட்டான்” என்று கூறினர். இந்த செய்தியினை காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தார்கள்.

மன்னனும் வியப்படைந்தான். “ஏன்? ஏமநாதன் ஓடினான்?” என்று பாணபத்திரனிடம் மன்னன் கேட்டான். அதற்கு பாணபத்திரன் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.

“இது இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அற்புதமே! இசை வேந்தனே! இறைவனே உனக்காக ஏவல்புரிந்தார் என்றால் நாங்கள் எல்லோருமே உமது ஏவலர்கள்தான், நாங்கள் உமது அடிமை, இன்று முதல் நீங்கள் சோமசுந்தர பெருமானைப் பாடுவதை கடமையாக கொள்ள வேண்டுகிறோம்” என்று வேண்டினான்.

பாணபத்திரனும் சோமசுந்தரரை நினைத்து பாடல்களை பாடி வாழ்ந்து வந்தார்.

இறைவன் விறகு வெட்டியாய் வந்து ஏமநாதனை வெற்றிக் கொண்டதில் இருந்து பாணபத்திரன் எந்நேரமும் சோமசுந்தரப் பெருமானின் சன்னதியிலே கிடந்து பக்திரசம் சொட்ட சொட்ட தெய்வீகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான்.

அரசவையில் பாடி போது கூட அரசனின் வெகுமதிகள் பரிசுகள் என்று தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனால் வறுமை ஆட்கொள்ளவில்லை.

ஆனால் இறைவனின் திருவடியை மட்டுமே பாடிக்கொண்டு வேறு எந்த வேலையும் செய்யாததால் பாணபத்திரனின் குடும்பம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இதைக் கண்ட சோமசுந்தரரால் சிவனே என்று இருக்கு முடியவில்லை. பக்தனின் ஏழ்மையைப் போக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் வல்ல இறைவன் பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து செல்வத்தை எடுத்து பாணபத்திரன் முன் வைக்கத் தொடங்கினார். தினமும் பொற்காசுகள், மணிகள், நகைகள், தங்கத்தால் ஆன ஆடைகள் சாமரங்களில் இருந்த பொற்பிடிகள், ஆசனத்தில் உள்ள பொன்தகடுகள் என்று பலப் பொருட்களை பாணபத்திரன் பெற்றுவந்தான்.

இப்படி நடைபெறுவது இறைவனாகிய கள்வனுக்கும் பக்தனாகிய பாணபத்திரனுக்கும் மட்டுமே தெரியும். இந்தப் பொருட்களையெல்லாம் உருக்கி, உருமாற்றி விற்றுவந்தான். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தன்னைத் தேடி வரும் யாசகர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்துவந்தான்.

நாள் தவறாமல் ஏதேனும் ஒரு செல்வம் கொடுத்து வந்த சிவபெருமான் சில நாட்கள் சென்றப் பின் எந்த பொருளும்தராமல் இருந்துவிட்டார். பாணபத்திரனும் தினமும் கோயில் சென்று இறைவனை உள்ளம் உருக வணங்கினான். வெறுங்கையோடு திரும்பி வந்தான். மீண்டும் பாணபத்திரன் வாழ்வில் வறுமை வந்து அண்டிக்கொண்டது. பசி நோய் வாட்டி எடுத்தது. பசியோடே ஒரு இரவு தூங்கிப் போனான். அப்போது கனவு ஒன்று வந்தது.

கனவில் இறைவன் சோமசுந்தரர் தோன்றினார். “பாணபத்திரனே! உன் நிலைமை எனக்கு கவலையளிக்கிறது. இத்தனைக் காலமும் உனக்காக பாண்டியனின் பொக்கிஷத்தில் இருந்து சிறிது சிறிதாக பொருட்களை கவர்ந்து கொடுத்துவிட்டோம். பாண்டியனும் எனது தீவிர பக்தன். அவனது பொக்கிஷத்தைக் காலியாக்குவதும் தர்மமில்லை. தொடர்ந்து பொக்கிஷத்தில் பொருள் குறையும் போது பாண்டியனுக்குச் சந்தேகம் ஏற்படும். களவு போன விஷயம் தெரியவந்தால் குற்றமற்ற காவலாளிகளுக்கும் கொடுமையான தண்டனைக் கிடைக்கும். இதெல்லாம் நடக்க வேண்டாமே என்றுதான் உனக்குப் பொருள் தருவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் உன் நிலையும் எனக்கு கவலையளிக்கிறது. அதனால் நான் உனக்கு ஒரு திருஓலைத் தருகிறேன். அதை நீ எனது பக்தனான சேரமானிடம் கொண்டுசெல். அவன் உனக்கு உதவி புரிவான்” என்று கூறி மறைந்தார்.

பாணபத்திரனும் திடுக்கிட்டு எழுந்தான். எழுந்தவன் அருகே ஓலைச்சுருள் இருப்பதைப் பார்த்தான். இறைவனின் கடிதம், ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் ஓட… மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். அந்த ஓலையை ஒரு பட்டாடையில் பத்திரமாக முடிந்துக் கொண்டான்.

இறைவனின் திருவடியை மனதில் நினைத்து வணங்கினான். நேராக திருக்கோயில் சென்றான். சோமசுந்தரப் பெருமானை வணங்கி விடைபெற்றான். மதுரையில் இருந்து மேற்கு நோக்கிப் பயணப்பட்டான். பலவிதமான நிலங்களைக் கடந்து, வளமான மலை நாடான சேர நாட்டை அடைந்தான். மலை நாட்டின் வளமையும் இயற்கையும் மனதை மயக்கியது. நடந்து வந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.

மலைநாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படுகிற திருவஞ்சைக்களம் போய் சேர்ந்தான். அங்கு தர்மத்தின் தேவதை ஆட்சி செய்தாள். லட்சுமி தேவி திருநடனம் புரிந்தாள். வீரத்தின் உறைவிடமான துர்காதேவி நன்னடம் புரிந்தாள். வடமொழியிலும் தென் மொழியிலும் சிறந்து விளங்கிய இடம் அது. சிறப்புகள் நிறைந்த அந்த ஊரில் இருந்த ஒரு தண்ணீர்ப்பந்தலில் பாணபத்திரன் தங்கினான்.

அதே வேளையில் சேரநாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். “சேர மண்ணை ஆண்டு வரும் மன்னனே! யாம் மதுரையைச் சேர்ந்த சித்தராவோம். என் பக்தன் ஒருவன் உன் உதவி நாடி உன்தேசம் வந்து சேர்ந்துள்ளான். அவனை யாமே இங்கு அனுப்பி வைத்தோம். அவனிடம் யாம் கொடுத்தனுப்பிய திருஓலையும் உள்ளது. அவனுக்கு அரிய பொருளைக் கொடுத்து விரைவாக அனுப்பி வைப்பாயாக…. அந்த பக்தனின் பெயர் பாணபத்திரன் என்பதை நினைவில் கொள்!” என்று கூறியதும் கனவில் இருந்து மறைந்தார்.

சேரமான் பெருமான் வியப்புற்று விழித்தெழுந்தான். தன் மனமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமான் தன் கனவில் வந்தது சேரமன்னனுக்கு குதூகலத்தை தந்தது. இந்த மகிழ்ச்சிக் கனவை உடனே தனது அமைச்சர்களிடம் பகிர்ந்துக் கொண்டான்.

“அமைச்சர் பெருமக்களே! என் கனவில் நம்மை காக்கும் எம் பெருமான் தோன்றினார். பெருமானின் திருமுகம் பெற்ற பாணபத்திரன் என்ற பக்தர் என்னை நாடி வந்துள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். எங்கிருந்தாலும் உடனே தெரிவியுங்கள். எம் இறைவனின் உத்தரவை நான் நிறைவேற்ற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

அமைச்சர்கள் மன்னின் ஆணையை ஏற்றுக் கொண்டு, உடனடியாக சேவகர்களுக்கு கட்டளையிட்டனர். சேவகர்களும் நான்கு திசைகளிலும் பாணபத்திரனைத் தேடிச் சென்றனர். பல இடங்களிலும் தேடியப் பின் இறுதியாக தண்ணீர்ப்பந்தலில் தங்கியிருப்பதைக் கண்டனர். உடனே வேகமாக சென்று அரசனிடம் தகவல் சொல்லினர்.

பாணபத்திரனின் இருப்பிடம் தெரிந்த மன்னன் மகிழ்ச்சிக் கொண்டான். தனது பரிவாரங்களை தயார் செய்தான். ஒரு சக்கரவர்த்தியை குறுநில மன்னன் எப்படி அடிபணிந்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பானோ அதே போல் பாணபத்திரனை அழைத்துவர சேரமான் மாபெரும் ஏற்பாடுகளை செய்திருந்தான். தனக்கென சொக்கநாதர் இட்ட கட்டளையல்லவா அது.

சேரமான் பெரும் ஆர்பரிப்புடன் பாணபத்திரன் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். பாணபத்திரனைக் கண்டதும் தனது தலைக்கு மேல் கைகூப்பி வணங்கிய மன்னன் ஆனந்த தாண்டவம் ஆடினான். பாணபத்திரனும் பரவசப்பட்டான். இறைவன் மன்னனுக்கு எழுதிக் கொடுத்த திருமுக ஓலையை சேரமானிடம் கொடுத்தான். ஓலையை வாங்கும் போதே கைகள் நடுங்கின. கண்களில் கண்ணீர் பெருகின. திருமுக ஓலையை கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இறைவன் எழுதிக் கொடுத்த பாசுரத்தைப் பலமுறைப் படித்துப் பார்த்தான். புளகாங்கிதம் அடைந்தான். எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனந்த கடலில் மூழ்கினான்.

தெய்வத் திருஓலையை தங்கத்தால் செய்த ஆசனத்தில் வைத்தான். அந்த ஆசனத்தை யானை மீது ஏற்றினான். தங்க ஆசனம் தாங்கி வந்த யானையையும் பாணபத்திரனையும் வழி முழுவதும் மலர்கள் தூவி பாதம் மண்ணில்படாமல் நடக்க வைத்து, தக்க மரியாதையுடன் அழைத்து வந்து அரண்மனை சேர்ந்தான்.

அரண்மனை சேர்ந்த பாணபத்திரனை அரண்மனை நந்தவனத்தில் நீராடச் செய்தனர் சேவைப் பெண்கள். நீராடிய பாணபத்திரனுக்கு புத்தம் புது ஆடைகளை அணிவித்தனர். பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து மகிழ்ந்தான் சேரவேந்தன். சோமசுந்தரப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரத்தில் ஒரு வரி “மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்ற கட்டளையை நன்றாக மனதில் பதித்துக் கொண்டான் மன்னன்.

அதனால் நேரம் கடத்த விரும்பவில்லை சேரன். பாணபத்திரனை தனது பொக்கிஷ சாலை முழுவதும் இறைந்து கிடந்தது. பிரமாண்டமாக காட்சிதந்த பொக்கிஷ சாலையில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருந்தது. பொக்கிஷ சாலையின் மையத்தில் பாணபத்திரனை நிற்க வைத்தான் சேரமாவேந்தன்.

“என் உள்ளம் நிறைந்திருக்கும் இறைவனின் நேசம் பெற்ற சிவநேசரே! இங்குள்ள செல்வங்கள் எல்லாம் உமதே! உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள்! தடையேதும் இல்லை.” மனம் நிறைந்த மகிழ்வோடு கூறினான் சேரன்.

“மன்னவா! தாங்கள் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியை நான் அறிந்தேன்! நான் யாசகம் பெற வந்தவன். எனக்கு நீங்கள் பொருளைக் கொடுப்பதுதான் முறை. தாங்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் செல்வமே எனக்குப் போதும்!” பாணபத்திரன் பணிவுடன் கூறினான்.

“எல்லா செல்வமும் அவனுக்குரியது. அவனே கட்டளையிட்டபின் மறுப்பதற்கு நான் யார்? அவன் உலகை ஆள்பவன். நானோ அவன் இட்டப்பிச்சையால் ஒரு சிறுபகுதியை ஆட்சி செய்பவன். அதனால் தங்களுக்கு தேவையான செல்வத்தை தாங்கள் எடுத்துக் கொண்டால்தான் என் மனம் மகிழும்” மீண்டும் சேரன் வற்புறுத்தினான்.

“தாங்கள் தருவதே எனக்குப் போதும்” என்று பாணபத்திரனும் பிடிவாதம் பிடிக்க… சேரன் ஏராளமான செல்வங்களை வாரிக் கொடுத்தான். அவ்வளவு செல்வத்தையும் பாணபத்திரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாணபத்திரன் தனக்கு வேண்டிய அளவு பொன் அணிகள், காசுகள், ஆடைகள், யானை, குதிரை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டான். சேரமான் பெருமானும் நெடுந்தொலைவு பாணபத்திரனுடனே வந்து தனது நாட்டின் எல்லையில் வழியனுப்பிவைத்தான்.

வறுமையில் வாடிய கலைஞனாக சேரநாடு சென்ற பாணபத்திரன் செல்வம் நிறைந்த குபேரனாக திரும்பி வந்தான். மதுரை மாநகர் வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக திருக்கோவில் சென்று சோமசுந்தரப் பெருமானை தரிசனம் செய்து வணங்கினான். பின்னர் பொருள் வேண்டுவோருக்கு உதவி செய்து தருமங்கள் புரிந்து சிறப்போடு வாழ்ந்தான்.