Header Banner Advertisement

வாங்க ரஜினி…! வாங்க “போருக்குத் தயாராகிவிட்ட ரசிகர்கள்”


come Rajni fans prepared for war

print

 

‘போருக்குத் தயாராக இருங்கள்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னாலும் சொன்னார், அவருடைய அரசியல் நுழைவு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதான உற்சாகத்தில் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். தேர்தலைத்தான் அவர் போர் என்ற குறியீட்டின் மூலம் சொல்லி இருக்கிறார். அதேநேரம், அவரை மையப்படுத்திய அக்கப்போர்களும் றெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கி விட்டன.

ரசிகர்களுடான புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பேசிய ரஜினி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரைப் பற்றி மட்டும் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

இவர்களில் மு.க.ஸ்டாலினைத் தவிர்த்து, மற்றவர்களைக் குறிப்பிட்டதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் ரஜினிகாந்த், இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் அங்கு செல்லக்கூடாது என திருமாவளவன், சீமான் ஆகியோர் வெளிப்படையாகவே ரஜினியை விமர்சித்து இருந்தார்கள். ‘பாபா’ படத்தின் போதிருந்தே பா.ம.க.வுக்கும் ரஜினிக்குமான உரசல் ஊர் அறிந்தது.

இதையெல்லாம் மனதில் வைத்தே அவர்களை பகிரங்கமாக ரஜினி பாராட்டிப் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அன்றைய தினத்தில் இருந்தே ரஜினியின் அரசியல் ஆசைக்கு வேட்டு வைக்கும் விதமாக, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு எதிராக கடுமையாகவே சாட்டையை சுழற்றி வருகிறார்.

‘தமிழர்களை தமிழனே ஆள வேண்டும்’ என்று மேடைக்கு மேடை கனல் தெறிக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்கூட இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார். ஆனால், மாற்று அரசியலை முன்னெடுத்து வரும் திருமாவளவன் மட்டும் ரஜினிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். மு.க.ஸ்டாலினும் ரஜினியை வரவேற்றுள்ளார்.

நாம் ரஜினி ரசிகர்கள் சிலரிடமும், ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம். பொதுவாகவே அவர்கள் சீமானின் இன, மொழி ரீதியான கருத்துக்களுக்கு அதிருப்தியையே தெரிவிக்கின்றனர்.

“தமிழகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினத்தவரான அப்துல்கலாமை, நாம் ஜனாதிபதியாக்கி அழகு பார்த்திருக்கிறோம். மொழி, இனம் என்று பாகுபாடு பார்த்திருந்தால் நமக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்காது,” என்கிறார் ஒரு ரஜினி ரசிகர்.

இன்னொரு ரசிகரோ, “தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுமே மக்களை ஏராளமாக சுரண்டி கொழுத்துவிட்டன. அக்கட்சிகளில் ஒன்றுக்கு இப்போது ஆளுமைமிக்க தலைமை இல்லை. மற்றொரு தலைவர், மூப்பின் காரணமாக அரசியலில் இல்லை. எஞ்சியிருப்பவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையும் கிடையாது.

சீமான் சொல்வதுபோல் தமிழர்களை தமிழனே ஆள வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அது பிரிவினைக்குதான் வழிவகுக்கும். அவர் சில நல்ல கொள்கைகளை முன்வைக்கிறார். ஒருவேளை சீமானை முதல்வராகத் தேர்ந்தெடுத்தால் நடுவண் அரசுடன் எப்போதும் சண்டைக்கோழியாகத்தான் இருப் பார். மாநில நலன்கள் பறிபோகும். மற்ற சில தலைவர்கள் சாதி ரீதியில் செயல்படுவதால் அவர்களை ஒரு போதும் நாம் ஏற்பதற்கில்லை,” என்கிறார்.

சரி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை ஆதரிக்கலாமே என்று கேட்டதற்கு, “தமிழகத்தில் மாற்று அரசியல் பேசும் தலைவர்கள் ஏன் நல்லக்கண்ணுவை இதுவரை முதல்வர் பதவிக்கான பொது வேட்பாளராக முன்மொழியவில்லை?. அவருக்கான அரசியல் அதிகாரத்தை இதுவரை இடதுசாரி இயக்கங்களே பெற்றுத்தராதது ஏன்?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்.

பா.ம.க. எதிர்ப்புக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். ஏற்கனவே விஜயகாந்தின் அரசியல் வருகையால், வட மாவட்டங்களில் தங்களுக்கான வாக்கு வங்கியை பெருமளவு பரிகொடுத்தது அக்கட்சி. வரும் காலங்களில் ரஜினி மூலமாக இன்னும் பலத்த அடியை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.

தே.மு.தி.க. கட்சியால்தான் கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. அந்த நினைவுகள் வந்துபோவதால்தான் அ.தி.மு.க.வும் ரஜினியை எதிர்க்கத் துணிந்துள்ளது.

ரஜினி, ஒரு நடிகர். கன்னடர். இதைத்தாண்டி அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கு எதிர்ப்பு கோஷ்டியினரிடம் வலுவான வாதங்கள் இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டம், ஜல்லிக்கட்டு, மீத்தேன், நீட் தேர்வு, காவிரி பிரச்னையில் மவுனம் சாதித்தது ஏன் எனக்கேட்கிறார்கள்.

இன்னும் சிலர் அவருடைய சொந்த வாழ்க்கையையும் அநாகரீகமாக விமர்சிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிராக திட்டமிட்டு சிலர் இதுபோன்ற தகவல்களை பரப்புகின்றனர். அத்தகைய விமர்சனங்கள், தமிழர்கள் ஏன் இப்படி தரம் தாழ்ந்து சிந்திக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா போன்றோர் பொது வாழ்வில் சந்திக்காத அவமானங்களே இல்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தாலொழிய, அரசியல் போர்க்களத்தில் வாள் சுழற்ற முடியாது என்ற பக்குவம் இந்நேரம் ரஜினிக்கும் வந்திருக்க வேண்டும்.

புகழ், செல்வாக்கு தாண்டி, உச்சக்கட்ட சகிப்புத்தன்மையே பொதுவாழ்வின் அடிப்படை தகுதி ஆகிவிட்டது.

நதிநீர் அரசியலை மையப்படுத்தி கன்னடர், தெலுங்கர், மலையாளிகள்போல் தமிழர்கள் காட்டுமிராண்டித்தனங்களை கட்டவிழ்ப்பதில்லை. திராவிட மொழிக்குடும்பங்களின் தாய்வீடு தமிழ் மொழிதானே. எத்தனை கோபம் இருந்தாலும் எந்தப் பிள்ளையையும் கொன்றுவிட எந்த தாய்தான் சிந்திப்பாள்?. அந்த உளவியல்தான் நம் அண்டை மாநிலத்தவர்களின் மீதான தமிழர்களின் அமைதிக்குக் காரணமாக இருக்க முடியும் என்பது என் கருத்து. அதனால்தான் வந்தாரை வாழ வைக்கும் பூமியாக இந்த மண் இருந்து வருகிறது.

நதிநீர் அரசியலோடு ரஜினியை தொடர்புபடுத்திப் பேச வேண்டிய அவசியமும், கட்டாயமும் இப்போது எழத்தேவை இல்லை. அவர் கட்சி தொடங்க வேண்டும், கொள்கைகளை வரையறுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும். இப்படி அடுக்கடுக்கான படிநிலைகளைக் கடக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!

அதற்குள்ளாகவே அவருடைய வீட்டின் முன் உருவபொம்மை எரிப்பில் ஈடுபடுவதும், மொழி-இன அரசியல் பேசுவதும் எதற்காக?

“தலைவரைப் பற்றி பேசினால் தாங்களும் பிரபலம் அடையலாம் என்பதால் வீ¦ரலட்சுமி போன்றவர்கள் உருவபொம்மை எரிப்பில் ஈடுபடுகின்றனர். இதெல்லாமே விளம்பரம் தேடும் முயற்சி. உள்ளூர பலருக்கு பயம் வந்துவிட்டது. யார் தலைவரை எதிர்த்தாலும் ரசிகர் மன்றம் சார்பில் நாங்களும் கண்டனம் தெரிவிப்போம். கண்டிப்பாக, அவருக்கு சாதகமான அரசியல் அலைதான் உள்ளது. குறிப்பாக பெண்களின் ஓட்டெல்லாம் தலைவருக்குதான். அவர் கோடு போட்டால் ரோடு போடுவதுதான் எங்கள் வேலை,” என்கிறார் சேலம் குகை அய்யப்பன்.

இவர் ‘சிவாஜி’ பட ரசிகர்மன்ற பொறுப் பாளர்களுள் ஒருவராக இருந்தார். மேலும் அவர், ரஜினியை கன்னடர் என பிரித்துப் பேசுவதையும் எதிர்க்கிறார். சிலர் பொறாமை காரணமாக, அரசியலில் முகவரி இல்லாமல் போய்விடுவோம் என்ற பயத்தில் பிரிவினையுடன் பேசுவதாகவும் சொல்கிறார்.

ரஜினி ரசிகர்மன்ற பட்டதாரிகள் பேரவை மாநிலத் தலைவர் ஸ்ரீனிவாசபெருமாள், “தலைவர் அரசியலுக்கு வந்தால் பொதுமக்கள் மட்டுமின்றி இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும். ரஜினி, எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து வெற்றி பெறுவார். தலைவர் வீட்டு முன்பு அவருடைய உருவபொம்மை எரித்த அமைப்பை தடை செய்வதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு புகார் அளித்திருக்கி றோம்.

சம்பாதிக்க நினைப்பவர்கள் என் பின்னால் வர வேண்டாம் என்று ரஜினி வெளிப்படையாகவே சொல்லிவி ட்டார். அதே சிந்தனையை வலியுறுத்தும் பொதுவு டமைவாதிகள் அவர் பின்னால் ஏன் அணிதிரளக் கூடாது?,” என்றார்.

ரஜினியின் ரசிகர்களாக வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் அஜீத், விஜய், ராகவேந்திரா லாரன்ஸ், விஷால் போன்றவர்கள் மட்டுமின்றி அவரின் உற்ற நண்பரான கமலின் ரசிகர்களும்கூட ரஜினிக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கக்கூடும்.

ஏற்கனவே மாநிலம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அவரின் ரசிகர் மன்றங்கள், அவருக்கான அரசியல் கிளைகளாகவும் மாற வாய்ப்பு இருக்கின்றன. இதெல்லாமே அவர் தனிக்கட்சி தொடங்கினால்தான் பலமே தவிர, மாறாக அவர் ஏதேனும் ஒரு தேசிய / மாநில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலோ அல்லது இணைந்து கொண்டாலோ பிறகு தே.மு.தி.க. வுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவுதான் ஏற்படும்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தில் கதையின் நாயகி பேசுவதாக ஒரு வசனம் வரும்.

“எனக்கு ரஜினிதான் ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்துல அவர் அப்பாவிபோல அடி வாங்கிட்டு இருப்பாரு. அப்புறம் எல்லாரையும் போட்டு புரட்டி எடுத்துடுவாரு. ஏன்னா அவர்தான் பெரிய பாட்ஷா!”.

வெள்ளித்திரையினூடாக இன்னொரு ஆதர்ஷ தலைவனை எதிர்நோக்கி இருக்கிறது தமிழகம்.

//டெயில் பீஸ்//

“தமிழர்களே ஏற்றுக்கொள்ளாத தமிழர்கள்தான் ரஜினியை எதிர்க்கின்றனர்”

ரஜினிக்கு சில கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் பழனிவேல்:

“அந்தந்த மாநில மொழிக்காரர்கள்தான் அந்தந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்படவில்லை. மக்கள் செல்வாக்கு உள்ள யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று சொன்ன முதல் தமிழர் ரஜினிதான். ஆனால் யாரும் அந்தத் திட்டத்தை முன்னெடுக்கவில்லை.

இங்கு அவரை எதிர்ப்பவர்கள் அனைவருமே செல்லாக்காசுகள்தான். தமிழர்களே ஏற்றுக்கொள்ளாத தமிழர்கள்தான் இப்போது ரஜினியை எதிர்க்கின்றனர். தலைமை, எங்களை ‘அமைதி காக்கவும்’ என்று சொல்லி இருக்கிறது. அதனால்தான் தலைவர் உருவபொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களைப் பார்த்த பின்னரும் அமைதியாக இருக்கிறோம்.
தலைவர் நிச்சயம் தனிக்கட்சிதான் தொடங்குவார்.

அவர் அரசியலுக்கு வந்தால் பெண்களின் ஆதரவும் பெருமளவு உண்டு. தமிழ்நாடு, மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது. பொருத்தமான நேரத்தில் தலைவர் பொருத்தமான முடிவை எடுத்திருக்கிறார்”.

====================================================================================================================

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .

புதிய அகராதி மாத இதழ், சேலம்