Header Banner Advertisement

நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவிலின் சிறப்புகள்


Nanguneri Vazhimmalai Perumal Temple Specials

print

கோவில் குறித்த வரலாறையும், பெருமைகளையும் அறியுமுன் கோவிலின் சிறப்புகளை அறியும் பட்சத்தில் அது நமக்கு கோவில் குறித்த தகவல்களை அறியும் ஆர்வம் ஏற்படும் என்பதால் முதலில் கோவிலின் சிறப்புகளைக் காண்போம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையுடையது.

ஸ்வயம் வ்யக்தேஷூ ஸர்வேஷூ தோதாத்ரி ஸ்தலம் ( சுயம்பு அதாவது மூலவர் மண்ணுக்கு அடியில் இருந்து வந்தவர்) என்ற பெருமையையும் தன்னகத்தே பெற்று பெருமையுடன் விளங்கக் கூடிய பெருமாள் கோவிலில் இதுவும் ஒன்று.

தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடித்த வண்ணத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூகோள வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசுவது போலவும், மேலும் சூரியன், சந்திரன், ப்ருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோரும் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.

மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இக்கோவில் கிமு 1ooo -ல் தோன்றி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

வைணவ ஸ்வயம் ஷேத்ரங்கள் என்ற பெருமையை இந்தியாவின் எட்டு தளங்கள் பெற்றுள்ளதை அறிந்து கொள்வோம்.

அவை ஸ்ரீரங்கம், திருப்பதி,புஷ்கரம், தோதாத்ரி (நான்குநேரி கோவில்), பத்ரிநாராயணா, நைமிசரண்யம், சாலிகிராமம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம்.

கோவில் உருவான கதையும் மூலவர் வரலாறும்:

காரி மன்னன் என்பவன் ஆழ்வார்திருநகரி என்னும் ஊரை ஆண்டு வந்தார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியுற்றிருந்தாலும் அவருக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் தீர்ந்தபாடில்லை. பரிகாரமாக நிறைய தான தர்மங்கள் பண்ணியும் பலன் ஏதுமில்லாமல் தம்பதிகள் தவித்து வந்தனர். அப்போது அந்தணர் ஒருவர் மன்னனைக் காண வந்தார். மன்னரிடம் அந்தணர், மன்னா… நான் தங்களுக்கு ஒரு உபாயம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன் என்றார். மன்னர், சுவாமி தயை கூர்ந்து கூறுங்கள். நிச்சயம் செவி மடுப்போம் என்று சொல்ல, அந்தணர் அச்செய்தியை எடுத்துரைத்தார். அது, மன்னா… தாங்கள் திருக்குறுங்குடியில் உள்ள திருமாலை வணங்கி வாருங்கள். உங்களின் குழந்தைப் பாக்கியம் கிடைக்க நல்லதோர் வழி பிறக்கும் என்றார்.

அந்தணர் கூற்றுப் படி மன்னரும் மகாராணியும் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயரை வழிபட்டு வந்தனர். அன்று இரவே மன்னரின் கனவில் அழகிய நம்பிராயர் தோற்றமளித்தார். காரி மன்னா… இங்கிருந்து கிழக்கு திசையில் செல்லுங்கள். அங்கு நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லும். அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தில் தோண்டினால் எனது தம்பி வானமாமலை தோற்றமளிப்பான். அவன் உனக்கு வேண்டியதை அருளுவான்.

அதன் படி அவ்விடத்தை மன்னர் வந்தடைந்தார். அந்த இடத்தை தோண்டியபோது குருதி பொத்துக் கொண்டு வந்தது. 18 மூலிகைகளைக் கொண்டு தடவிய பிறகே குருதி நின்றது. ஆகையால் தான் இக்கோவிலில் எண்ணைக்காப்பு என்ற வழிபாட்டு முறை தினந்தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. கோவிலை மேற்கொண்டு கட்டும் பணியை மன்னர் மேற்கொண்டார் என்பது சொல்லப்படுகிற வரலாறு.

உற்சவர்:

இக்கோவிலின் உற்சவராக தெய்வநாயகன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவரமங்கை தாயார் வட வேங்கடத்தில் வீற்றிருந்தார். வெங்கடேசப் பெருமாளுக்கு திருமண உற்சவம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, ஸ்ரீ ராமானுஜ ஜீயரின் கனவில் ஸ்ரீவரமங்கைக் காட்சி அளித்து, தான் இறைவனைக் கைபிடித்து விட்டதாகத் தெரிவித்தார். ஆகையால் தான் இங்கு வானமாமலைப் பெருமாள் தெய்வ நாயகனாக காட்சி அளித்தார். அதன் படியே இங்கு தெய்வநாயகனுக்கும் ஸ்ரீவரமங்கைக்கும் திருமண உத்சவம் நடக்கின்றது.

நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்ததால் இவ்வூருக்கு நான்குநேரி என்ற பெயர் வந்தது.
கோயிலின் அமைப்பு:

கோவிலின் முகப்பில் ஏழு அடுக்குகளைக் கொண்ட கோபுரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரம்
என இரு பிரகாரங்களை உள்ளடிக்கி உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. சற்று உள்ளே சென்றவுடன் கொடிமரம் உள்ளது. உள் பிரகாரத்தில் ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஆழ்வார்கள், கருடன், உடையவர், பிள்ளை யோகாச்சாரியார், வேணு கோபாலன், லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி வராகர்,விஷ்வக் சேனர், மற்றும் சில தனி தெய்வங்கள் சன்னதி அமைந்துள்ளது.

வெளிபிரகாரத்தில் தான் எண்ணெய்க்கிணறு உள்ளது. தினந்தோறும் எண்ணெய்காப்பு (அபிஷேகம்) செய்கிற எண்ணெய்யை இக்கினற்றில்தான் சேமித்து வைப்பார்கள். இந்த எண்ணெய், சர்வரோக நிவாரணியாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வது வழக்கம். எண்ணெய்க் கிணறு அருகில் அகத்தியர் சிலை உள்ளது.

சிறப்பு பூஜைகளும் திருவிழா நாட்களும்:

பங்குனித் திருவிழாவும் சித்திரைத் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழாவைப் பொறுத்தவரையில் பத்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்களின் பங்கிற்கு மண்டகப் படி நடைபெறும். பத்தாவது நாள் தேர் வலம் வரும். மடத்தின் மூலமாக, பங்குனித் திருவிழா நடைபெறுகிறது.

தை அமாவாசை அன்றுதான் ஒரு கோட்டை( 3 கொப்பரை) எண்ணெய்க் காப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்குத் தான் வைணவ பக்தகோடிகளும், நான்குநேரியைச் சுற்றி உள்ள அனைத்துக் கிராம மக்களும் காண வருகிறார்கள். தை அமாவாசை அன்று கோவிலில் கூட்டம் சொல்லி மாளாத அளவிற்கு இருக்கும். அன்று இரவுதான் கருட சேவை நடைபெறும். கருட சேவை அன்று வான வேடிக்கை பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அமாவாசைக்கு அடுத்தநாளில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

துளசி, துளசி தீர்த்தம், தோசை, பொங்கல், பால், அதிரசம், வடை, புளியோதரை ஆகியன பிரசாதமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று ஜீராணம்(பால் சாதம்) பிரசாதமாக வழங்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்தான் நான்குநேரி உள்ளது. நெல்லையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி பேருந்தில் நான்குநேரி மார்க்கம் என்று செல்லும் பேருந்தில் செல்லுங்கள்.
நெல்லையில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நாகர்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது.

சுற்றுலாப் பேருந்தில் வருபவர்கள் கோவிலின் பின்புறத்திலும் சுற்றுப் புறங்களிலும் , பேருந்தை நிறுத்தும் வசதி (நிறைய இடம்) உள்ளது.

கோவிலுக்கு இடப்பக்கத்தில் மிகப் பெரிய குளம் ஒன்று உள்ளது.

கோவிலுக்கு எதிராக இருபுறங்களிலும் வீடுகள் ஒன்றைஒன்று ஒட்டிய வண்ணம் மிகப் பெரிய வீதி உள்ளது.

COURTESY & SOURCE : கயிலை கண்ணன் வெங்கட்ராமன்