Header Banner Advertisement

அடடே! பெண் போலீசார் அதுக்கெல்லாம் லாயக்கு இல்லையா? ‘காக்கி வட்டாரத்தில் புயலாய் கிளம்பிய திடீர் சர்ச்சை’


no use sudden controversy whether not the female police khaki circles

print

தமிழக காவல்துறையில் பெண் காவல் ஆய்வாளர்களை, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் (உணவுப்பொருள் கடத்தலை தடுக்கும் பிரிவு) பிரிவில் நியமிப்பதில் காக்கிகள் வட்டாரத்தில் திடீரென்று இருவேறுபட்ட கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் 1992ம் ஆண்டில் முதன்முதலாக பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் வகையிலான, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, பலதார மணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

இந்திய அளவில், காவல்துறையில் 40 விழுக்காடு பெண் காவலர்கள் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. எனினும், தமிழக காவல்துறையில் ஆண், பெண் பாலின பாகுபாடு பிரச்னைகளும் உள்ளதாக கடும் சர்ச்சைகள் கிளம்பி இருக்கின்றன.

கடந்த 2004ம் ஆண்டு 185 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த மாதம் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றவர்களில் சிலருக்கு, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உத்தரவுதான் இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சைக்கு காரணம், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ராதாகிருஷ்ணன். “தமிழகத்தில் 1964ம் ஆண்டில் குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை ஒருபோதும் இந்தப் பிரிவில் பெண் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டதே இல்லை. அதனால், இப்போதும் அந்த பிரிவில் பெண் காவல் ஆய்வாளர்களை நியமிக்கக்கூடாது. பணி ஒதுக்கீடு உத்தரவை திரும்பப் பெற வேண்டும்,” தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதினார்.

உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் கூடுதல் ‘ரிஸ்க்’ இருப்பதால் அங்கெல்லாம் பெண் காவலர்கள் பணியாற்றுவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால்தான் டிஜிபி ராதாகிருஷ்ணன் இப்படி ஒரு வேண்டுகோளை முன்வைத்தார் என்றும் காவல்துறை மத்தியில் ஒரு பேச்சு இருக்கிறது.

இதுதொடர்பாக ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம், ‘இதற்குமுன்பு பெண் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, இப்போதும் அதே நடைமுறையை பின்பற்றுமாறு கூற முடியாது,’ என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுபற்றி பெண் காவல் ஆய்வாளர்கள், உயர் அதிகாரிகள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து, ‘புதிய அகராதி’ சிலரிடம் கருத்து கேட்டது.

மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் காவல்துறை பெண் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் ‘ரிஸ்க்’ இருக்கிறது என்று கருதினால், அதே ‘ரிஸ்க்’ சட்டம்-ஒழுங்கு பிரிவிலும்தான் இருக்கிறது. அதைவிட கடினமான பணிகளை எல்லாம் பெண் காவலர்கள் செய்து வருகின்றனர். உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றக் கூடாது என்று சொல்ல அவர்கள் யார்?. உடற்தகுதி, ‘ரிஸ்க்’ என்ற பெயரில் பெண் காவலர்களை நிராகரிப்பது நொண்டி சாக்கு. எங்களை எதற்காகவும் விலக்கத் தேவை இல்லை,” என்றார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் ஒருவர், “பெண் காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய் வாளர்கள் ஏற்கனவே மதுவிலக்கு, திருட்டு வி.சி.டி. தடுப்பு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றுவது ஒன்றும் கஷ்டமில்லை.

குற்ற நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள்தான் கஞ்சா, வி.சி.டி., சாராயம், அரிசி என வேறுபடுகிறதே தவிர குற்றவாளிகள் மாறுவதில்லை. சீருடை அணியும் போதே எதையும் சந்திக்கத் தயார் என்ற மனநிலையில்தான் பெண்கள் இத்துறையில் பணியாற்றுகின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது,” என்றார் நெத்தியடியாக.

ரயில்வே பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “அரிசி கடத்தல் குற்றவாளியை பெண் காவலர்களால் துரத்திப் பிடிக்க முடியுமா? என சந்தேகிக்க வேண்டாம். குற்ற வாளியைத் துரத்தில் பிடிப்பதெல்லாம் ஆண் காவலர்களின் வேலை. ஆனால், பெண் காவலர்களுக்கு இயல்பிலேயே நுண்ணுணர்வு அதிகம். அதை வைத்து, குற்றவாளியை நாங்கள் வலையில் வீழ்த்தி விடுவோம். துரத்திச்சென்று பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்போதும் இரவு ரோந்துப் பணியில் ஆண்களை விட, பெண் காவலர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். அவ்வளவு ஏன், காவல்துறை தனிப்பிரிவில்கூட பெண் காவலர்கள்தான் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அதனால் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிலும் பெண் காவல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். அங்கு பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுவதன் மூலம் காவல்துறையில் ஆண், பெண் பாலின பாகுபாடு உள்ளதைத்தான் காட்டுகிறது,” என்றார்.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் பேசினோம். அவரின் கருத்து, பெண் காவல் அதிகாரிகளிடம் இருந்து முற்றாக வேறுபடுகிறது.

“உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்பது, வெறுமனே ‘எப்ஐஆர்’ பதிவு செய்யும் பணி மட்டும் கிடையாது. போக்குக் காட்டும் குற்ற வாளிகளை துரத்திச்சென்று பிடிக்க வேண்டிய அபாயம் இருக்கிறது. அதிகளவில் இரவுப்பணியும் இருக்கும். உயிருக்கும் ஆபத்து இருக்கிறது.

பெரும்பாலும் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே உடல்தகுதி பழையபடி இருக்காது. முகாம்களுக்கு 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களைக்கூட வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். அதே நேரம், பெண் காவல் ஆய்வாளர்களின் அறிவு, ஆற்றலை ‘இன்வெஸ்டிகேஷன்’ பணிக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள காவல்துறை தயாராக இருக்கிறது.

இந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார், பெண் காவல் ஆய்வாளர்களை உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் நியமிக்க வேண்டாம் என்றார். அதுவும் வேண்டுகோளாகத்தான் வைத்திருக்கிறார்,” என்றார்.

இதுபற்றி ஓய்வுபெற்ற டிஜிபியும், தற்போது அதிமுக எம்எல்ஏவாகவும் உள்ள நட்ராஜிடம் கேட்டோம்.

“இப்போது, இந்திய ராணுவத்திலேயே பெண்கள் துப்பாக்கி ஏந்திச் செல்லும் காலம். பெண் கமாண்டோக்கள் இருக்கும்போது, பெண் காவல் ஆய்வாளர்களாலும் குற்றவாளிகளை துரத்திப் பிடிக்க முடியும். ஆண் காவல் அதிகாரிகள் மட்டும் குற்றவாளிகளை துரத்திச்சென்றா பிடிக்கின்றனர்?. பெண் காவலர்களால் எந்தப் பிரிவிலும் சிறப்பாக பணியாற்ற முடியும்,” என்றார்.

====================================================================================================================

 

 

COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் . 

புதிய அகராதி  மாத இதழ், சேலம்