Header Banner Advertisement

பொதுமக்கள் “அகிம்சை வழியில்” மெரீனாவில் போராட்டம் நடத்த நேர்மையான அதிகாரிகள் அனுமதிக்க பொன்னுசாமி வலியுறுத்தல்


Ponnusamy

print

சென்னை மெரீனாவில் “அகிம்சை வழியில்” பொதுமக்கள் போராட்டம் நடத்த நேர்மையான காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதியரசர்கள் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தி உள்ளார் .

இது குறித்து பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : –

நீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதாவின் தற்கொலை நமக்கு தற்போது உணர்த்தியிருப்பது “நீட்”டிற்கு மட்டுமல்ல கல்வி வியாபாரத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் ஆரம்பப்பாட சாலை முதல் கல்லூரிகள் வரை நடத்தும் அதன் உரிமையாளர்கள் கல்வி வள்ளல்கள் என்கிற பெயரில் அரசின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு நமது இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாக நமது உழைப்பை உறிஞ்சி பணக்காரர்களுக்கு மட்டுமே கல்வி என்கிற நிலையை உருவாக்கி வருகின்றனர்.

எனவே மக்கள் உயிரைக் கொல்லும் மதுவை அரசே விற்பனை செய்ய சட்டம் இயற்றி டாஸ்மாக் மூலம் மது விற்பனையை செய்து வரும் தமிழக அரசு ஆரம்பக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரையிலான அனைத்து கல்வி நிலையங்களையும் அரசுடமையாக்கிட அவசர சட்டம் இயற்றுவதோடு கிராமங்களில் இருந்து நகரங்கள் வரையிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக கல்வி கிடைப்பதை உறுதி செய்து மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாய் தமிழகம் திகழ ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தர வேண்டுமானால் அது இன்றைய இளைய சமுதாயத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

அதற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏதுமில்லா வகையில் மெரீனா முதல் அந்தந்த மாவட்ட தலை நகரங்கள் வரை காந்தி கண்ட அகிம்சை வழியில் இளைய சமுதாயம் ஒன்றுபட்டு உறுதியாக, உண்மையாக போராட மனசாட்சி உள்ள, நேர்மையான காவல்துறை அதிகாரிகளே, நீதியரசர்களே ஆதரவு கொடுங்கள். சட்டம் ஒழுங்கை காக்கிறோம் என்கிற பெயரில் அமைதியான முறையில் போராடுபவர்களைக் கூட அரசுக்கு ஆதரவாக இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவது வேதனையின் உச்சக்கட்டம்.

எனவே உங்கள் சட்டத்தின் இரும்புப் பிடியையும், கஞ்சி போட்டு விரைத்துக் கொண்டு நிற்கும் காக்கிச் சட்டையின் வீரியத்தையும் சற்றே தளர்த்துங்கள். ஏனெனில் இன்றைய இளைய சமுதாயம் போராட துடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்து தான் என்பதை இனியாவது உணருங்கள்.

அமைதியான முறையில், அகிம்சை வழியில், எந்த ஒரு அரசியல் தலையீடும் இன்றி நமது தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டிற்காக போராடிய நமது பிள்ளைகள், நமது உறவுகள் மீண்டும் மெரீனாவில் ஒன்று கூடட்டும்.

தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது போல் “நீட்”டை ஒழித்து, தமிழக அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்குவதை உறுதி செய்வோம். மதுவை விற்பனை செய்ய முடிந்த தமிழக அரசால் கல்வியை இலவசமாக வழங்க முடியாது போகுமானால் இப்படியொரு அரசு நமக்கு தேவையில்லை என்பதை அகிம்சை வழியால் நிருபித்துக் காட்டுவோம் என்று பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .