Header Banner Advertisement

குடியரசு தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து


new-year-greetings

print

ஆங்கிலப் புத்தாண்டு  பிறந்துள்ளதையொட்டி குடியரசு தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி :-

‘மகத்துவம் மிக்க நமது நாட்டுக்கு இந்த புத்தாண்டு வளமும், வளர்ச்சியும் அளிக்கட்டும்’ .

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில், சிறப்பான இந்தியா என்ற நமது கனவை இணைந்து கட்டி எழுப்ப அழைப்பு விடுத்துள்ள குடியரசு தலைவர், அழகான நமது நாட்டை மாசில்லாமல் தூய்மையாக வைக்க உறுதி ஏற்குமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி :-

2017ம் ஆண்டு அனைவருக்கும் வாழ்த்துகளுடன் துவங்கட்டும் என்றும், புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியத்துடன் வாழவும் தனது வாழத்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் :-

புத்தாண்டின் புதிய துவக்கத்தில் பழையதில் இருந்து பாடம் கற்று, வருங்காலத்திற்காக சிறப்பாகத் திட்டமிட்டு நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு செல்வோம். இந்த புதிய வருடத்தை திறந்த இதயத்தோடும், மனத்தோடும் ஏற்றுக்கொண்டு சுமுகமான இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் :-

புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளுரைத்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்ட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்கிட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அம்மா அவர்கள் வகுத்த எண்ணற்ற திட்டங்களை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸ் :-

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2017-ஆம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் :-

நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2017 வருடப்புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம், சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ :-

கடந்து, 2017 இல் உலகம் அடியெடுத்து வைக்கிறது. வேகமாக ஊடுருவி வருகின்ற மேல்நாட்டு கலாச்சாரத்தால் தமிழ்ப் பண்பாட்டுத் தளம் சிதைந்து வருகிற அவலம் மிகவும் கவலை தருகிறது. உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளைப் பாதுகாக்க இப்புத்தாண்டு நாளில் உறுதிகொள்வோம்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :-

அனைத்து துன்பங்களும் அகன்று, அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் :-

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய, மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக 2017 ஆம் ஆண்டு பிறக்க வேண்டும். நல்லதே நடக்கும் நலமுடனே வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு, வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாக இறைவனை வேண்டி, நாட்டு மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் மருத்துவருமான அன்புமணி :-

புத்தாண்டு என்பது புதிய வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்தித் தருவது ஆகும். புத்தாண்டு என்பது தலா 24 மணி நேரம் கொண்ட 365 நாட்களை நமக்கு இலவசமாக வழங்குகிறது. காலம் தரும் இந்தக் கொடையை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தனி மனித வாழ்க்கையிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் புதிய உயரத்தை எட்டி சாதனைகளை படைக்க முடியும். 2017-ஆம் ஆண்டை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஆண்டாகவும் மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த புத்தாண்டு நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

2016-ம் ஆண்டில் சோதனைகளையும், சாதனைகளாக்கி, 2017-ம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய வருடத்தில் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு பரிசாக “ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி” வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.