இங்கிலாந்து ‘லெவன்’ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ‘ஏ’ அணி தோல்வி


xi-tournament-india-a-failure

print

இங்கிலாந்து ‘லெவன்’ அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேயில் வரும் 15ல் நடக்கவுள்ளது. இத்தொடருக்கு முன், இங்கிலாந்து அணி, இந்தியா ‘ஏ’ அணியுடன் இரண்டு ஒருநாள் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. முதல் பயிற்சி போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து லெவன் அணி கேப்டன் இயான் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இது, இந்திய அணியை தோனி வழிநடத்தும் கடைசி போட்டியாக அமைந்தது.

இந்திய ஏ அணிக்கு ஷிகர் தவான், மன்தீப் சிங் ஜோடி துவக்கம் தந்தது. மன்தீப் சிங் (8) ஏமாற்றினார். பின் இணைந்த தவான், ராயுடு ஜோடி சிறப்பாக செயல்பட்டது. அரை சதம் கடந்த தவான் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயல்பட்ட ராயுடு சதம் விளாசினார். இவர் (100) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.

தன் பங்கிற்கு யுவராஜ் (56) அரை சதம் கடந்தார். சாம்சன் டக்-அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை கேப்டன் தோனி வெளுத்து வாங்கினார். வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்த இவர் அரை சதம் விளாசினார். முடிவில், இந்திய ‘ஏ’ அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. தோனி (68), ஹர்திக் பாண்ட்யா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து ‘லெவன்’ அணிக்கு ஜேசன் ராய், ஹேல்ஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. குல்தீப் பந்தில் ஹேல்ஸ் (40) சிக்கினார். ஜேசன் ராய் (62) அரை சதம் கடந்தார். கேப்டன் மார்கன் (3) ஏமாற்றினார். பட்லர் 46 ரன்கள் விளாசினார். மொயீன் அலி டக்-அவுட்டானார்.

பின் இணைந்த பில்லிங்ஸ், டாவ்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பவுண்டரிகளாக அடித்த பில்லிங்ஸ் அரை சதம் கடக்க, வெற்றி உறுதியானது. டாவ்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா பந்தில் பில்லிங்ஸ் (93) ஆட்டமிழந்தார். இருப்பினும், வோக்ஸ் இரண்டு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து ‘லெவன்’ அணி 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோக்ஸ் (11), ரஷித் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.