Header Banner Advertisement

அச்சம் தவிர்.!


www.villangaseithi.com

print
ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார். அவர் அதைத் ‘தாவு’ என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார். ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது. அடுத்து இன்னொரு காலை வெட்டி விட்டு, ‘தாவு’ என்றவுடன், அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது. கடைசியாக நாலாவது காலையும் வெட்டிவிட்டு, ‘தாவு’ என்றார். நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர், தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார், ‘நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது’ என்று.!

இப்படித்தான் பிரச்சனையின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். வந்தும் இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி முடிவு போலதான் கூடன் குளம் அணுமின் நிலையப் பிரச்சனையும்.! உண்ணாநிலையில் தொடங்கி பல்வேறு வகையிலான போராட்டங்களை கையில் எடுத்து, தற்போதைய அணுமின் நிலைய விஞ்ஞானிகள் குடியிருப்பை முற்றுகையிடுவது என தொய்வில்லாமல் கூடன்குளம், இடிந்தகரை மற்றும் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள்.

ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தால் நொறுங்கிப் போய், அணுக்கதிர் வீச்சு ஆபத்தான அளவுக்கு பரவிக் கொண்டிருப்பதாக பரப்பப்பட்ட வேளையில் கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பும், உண்ணாநிலையும் தொடங்கியது, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் நாள். அன்றிலிருந்து கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது அல்ல… அல்ல… என திரும்பத் திரும்ப கூறி வருகிறது சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

அணுமின் உலை எதிர்ப்பு போராட்டம் 600 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஆனால், இவர்கள் நடத்தும் போராட்டம் நியாயம்தானா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. கூடன்குளத்தில் நிகழ்ந்துவரும் அணுமின் எதிர்ப்புப் போராட்டங்கள் அறிவியலுக்கு எதிரானதும், பழைய காற்காலத்திற்குப் பாதை சமைப்பதுமான நிகழ்வுகளாக உள்ளன.

அணுமின் எதிர்ப்பு என்று சாதாரணமாகத் தொடங்கிய போராட்டம், அணுஉலையை மூடு என்ற ஒற்றை கோரிக்கை மூர்க்கம் கொண்டுள்ளது. இதற்கான காரணமும் – விளக்கமும் கொடுப்பதற்கு முன், கூடன்குளம் அணுமின் நிலையம் பற்றிய அடிப்படை விசயங்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

1988 நவம்பரில் ரஷ்ய அதிபர் மிகையில் கோர்ப்பச்சேவ், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் கூடன்குளம் அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போனதால் இத்திட்டம் சில ஆண்டுகள் தாமதமானது. அணுமின் நிலையத்திற்கும், ஊழியர் குடியிருப்பிற்குமான இடம் என்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது கூடன்குளம் பகுதி மக்கள் முழு ஆதரவையும் நல்கினர். தொடர்ந்து கட்டம் கட்டமாக மக்களின் ஒத்துழைப்புடன் திட்டப் பணிகள் நடந்தேறி தற்போது, அணுமின் சோதனை ஓட்டம் முழு வெற்றி பெற்று நிற்கிறது.

அணுமின் நிலையம் இயங்குவதற் கும், மின் உற்பத்தி தொடங்குவதற்கு மான நாள் கிட்டத்தட்ட குறிக்கப்பட்டு விட்ட நிலையில், திடீரென எதிர்ப்புக் குலுங்கி நிற்கிறது. எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல்.? 1988 முதல் 2011 வரையில், ஏற்றக்குறைய கால் நூற்றாண்டு காலமாக இந்த உலைக்கு ஆதரவளித்தவர்கள் இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? வெண்ணெய் திரளும் போது தாழியை உடைத்தே தீருவேன் என்று முரண்டு பிடிப்பது ஏன்?

அணுமின் நிலையம் தீயது என்றால் அப்போதே கொன்று இருக்கலாமே? அதை விடுத்து தும்பை விட்டு வாலை பிடிப்பது ஏன்? காலம் கடந்த போராட்டம் கரை சேருமா? குழந்தை வேண்டாம் என்றால் முதலிரவன்றே ஆணுறையை அணிந்து கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல், பனிக் குடம் உடையும் நேரத்திலா குழந்தை வேண்டாம் என்று கூச்சலிடுவது? இது பேதமை அல்லவா?

திடீரென முளைத்த இந்த ஆரவாரமான அணுமின் எதிர்ப்பின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அறிவியலின் வறுமையும், சுயநலத்தின் முழுமையும் வெளிப்படும். அணுமின் எதிர்ப்பு என்ற நஞ்சு கூடன்குளம் மக்களின் மூளையில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்பது சாதாரண மக்களுக்கும் புலனாகும். இது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம்.

கூடன்குளம் அணுமின் நிலையம் இந்த மாதத்தில் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். முதல் யூனிட் தன் உற்பத்தியை தொடங்கி, அடுத்த 6 மாதங்களுக்குள் 2 ஆவது யூனிட் தன் உற்பத்தியை தொடங்கிவிடும் என்கிறார்கள். ஒவ்வொரு யூனிட்டும் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

இதுமட்டுமன்றி, கூடன்குளத்தில் மேலும் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 3 மற்றும் 4வது யூனிட்களை தொடங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு ஒப்புதல் தந்துவிட்டதாக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். முதல் 2 யூனிட்டும் ரூ.13 ஆயிரத்து 172 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவிடும் என்கிறார்கள். இதனை அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார். ஆக, மின்சார உற்பத்திக்கான இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். இத்தனை நாட்கள் வெவ்வேறு விதமான ஐயப்பாடுகளை கேள்விக் கணைகளாக கேட்டு வந்த உதயகுமார் குழுவினர், தற்போது சோதனை ஓட்டம் குறித்து சந்தேகம் கொள்கிறார்கள்.

மக்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் செய்வது எந்த வகையில் நியாயம்? சோதனை ஓட்டத்தின் போது டயர்களை எரிப்பது போன்ற துர்நாற்றம் வந்தது. காதை பிளக்கும் இரைச்சல் சத்தம் கேட்டது. தரமற்ற ரஷிய உதிரி பாகங்களைக்கொண்டு, கூடன்குளம் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான புகார்களை கூறுகிறார் உதயகுமார். இவை எல்லா வற்றையும் மறுத்தும், சோதனை ஓட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அணுமின் நிலையம் கூறியுள்ளது. ஆனாலும், இதையே திரும்பத் திரும்ப கூறிவருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

அடுத்ததாக ரஷிய நாட்டில் உள்ள ஜியோபொடால்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டுதான் கூடன்குளத்தில் அணுஉலை அமைத்தார்கள். அந்நிறுவனம் போலியான அணுமின் நிலைய கட்டுமான உதிரி பாகங்களை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு சப்ளை செய்ததாக புகார் உள்ளதாக கூறுகிறார்கள். இதுகுறித்தும், அணுஉலையில் தற்போது மாற்றங்கள் செய்திருப்பதாகவும் வெளிவரும் தவகல்களுக்கும் அணுமின் நிலையத்தினர் பதில் அளித்திருந்திருந்தும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

கூடன்குளம் உலைகள் VVER அல்லது WWER எனப்படும் ரஷ்யத் தொழில்நுட்பத்தால் ஆனவை. WWER என்ற ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் water-water energy (power) reactor என்று பொருள்படும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் VVER உலைகள் இயங்கி வருகின்றன. உலகம் தழுவிய அணுமின் நிலையத் தொழில்நுட்பத்தில் இதுதான் உயர்ந்தது. உச்சகட்டப் பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணுமின் உலைகள், கனடாவின் காண்டு உலைகள், ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகியவற்றை எல்லாம் விட ரஷ்யாவின் VVER உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை என்பது உலகறிந்த உண்மை.

கூடன்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையை சேர்ந்த VVER உலைகள் PWR (Pressurised Water Reactor) எனப்படும் அழுத்தமுறு இயல்நீர் உலைகள் ஆகும். இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். சாதாரணத் தண்ணீரே மட்டுப்படுத்தி (Moderator) ஆகவும், குளிர்விப்பி (Coolant) ஆகவும் செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் (Heavy Water) பயன் படுத்தப்படவில்லை. ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில், அணுஉலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும்.

இதற்காக, எதிர்மறை வெற்றிட குணகம் (Negative void Coefficient); எதிர்மறை ஆற்றல் குணகம் (Negative Power Coefficient) ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு காற்று மண்டலத்தில் கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

எரிபொருள் உள்ள அணுஉலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப் படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல், பலாப்பழத்தில் கனத்த முள் தோலுக்கு அடியில் சுளைகள் இருப்பது போல் யுரேனியம் எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற் காகவே இந்த ஏற்பாடு.

மேலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டு மொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டுள்ளது. அணுமின் உலையும், அதை சார்ந்த கட்டுமானங் களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில்தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால், அலைகள் தொட முடியாத உயரத்தில்தான் உலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, பூகம்பம் வர வாய்ப்புள்ள இடத்தில் கூடன்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

பூகம்ப அதிர்வுகள் அந்தப் பகுதியில் ஏற்பட்டு இருக்கின்றன என்று கூறப்படுகிறது. முற்றிலும் இந்த கூற்று நிராகரிக்கப்படக் கூடியது. ஏனெனில், பூகம்ப பகுதி என்று சொல்லப்படுகிற Earth quake Zone 2ல் வருகிறது கூடன்குளம். இதுவரை உலக வரலாற்றில் Earthquake Zone 4க்கும், அதற்கும் மேம்பட்ட பூகம்பப் பகுதிகளில்தான் பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவு கோலில் 6க்கும் அதற்கு மேலும் வந்து அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

Earthquake Zone 2ல் பூகம்பம் வந்து அதனால், பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கான வரலாறு இல்லை. 6 ரிக்டர் அளவு மற்றும் அதிகப்படியான (0.15g Acceleration) வரை உள்ள பூகம்பத்தையே தாங்கும் வலிமையுடன் கூடன்குளம் அணுமின் நிலையக் கட்டமைப்பு அமைந்து உள்ளது. நிலநடுக்க நடுவத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தையும், 1,800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையத் தையும் ஒன்றாக கருத முடியாது என அணுசக்தி கழகம் தெரிவித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்பாக்கம், தாராப்பூர் அணுமின் நிலையங்களால் மீனவர்களின் மீன்பிடிப்பு பாதிக்கப்படவில்லை என்று வல்லுநர் குழு சொல்வதையும் அவர்கள் காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல், அணுஉலையால் பாதிப்பு பாதிப்பு என்று கூறி மக்களை திரும்பத் திரும்ப குட்டையை குழப்பி வருகிறார்கள்.

‘பெரிய உண்மைகளை மறைக்க, பெரிய பொய்யை பரப்புரை செய்ய வேண்டும். அதனை சிறிய பொய்யில் இருந்து தொடங்க வேண்டும். அப்போது உண்மையை மறந்து மக்கள் பொய்யை நம்பி விடுவார்கள்’ என்ற கொடுங்கோலன் ஹிட்லரின் வாக்கை மந்திரமாக எடுத்து, தற்போது அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் கூடன்குளம் அணுமின் நிலையம் மீது கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. ஏறக்குறைய 20 மாதங்களாக இப்படி பொய் பரப்புரையை மேற்கொண்டு, கூடன்குளம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி, மற்றவர்களை குழப்புவதை வேலையாக வைத்திருக்கிறது அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

விபத்துக்குள்ளான செர்னோபில் ரக அணுமின் உலைகள்தான் கூடன்குளத்திலும் உள்ளது என்ற அணுமின் எதிர்ப்பாளர்களின் கூற்று தவறாகும். செர்னோபில் உலைகள் RBMK வகை. கூடன் குளம் உலைகள் VVER வகை. தொழில்நுட்ப ரீதியாக இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. அதேபோல் ஜப்பான் புகுஷிமா டெயிச்சி அணுமின் நிலையம், முதல் தலைமுறையை சேர்ந்த 40 ஆண்டு காலப் பழமை வாய்ந்தது. பூகம்பம் அடிக்கடி ஏற்படும் ஜப்பானில், சுனாமியும் சேர்ந்து வந்ததால், 8 மணி நேரத்திற்குள் மாற்று மின்சக்தியை கொடுக்க முடியவில்லை.

அதாவது, சுனாமியினால் ஏற்பட்ட குழப்பத்தால், போக்குவரத்துத் தடையின் காரணமாக அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கொடுக்க இயலாத சூழ்நிலையினால் அந்த விபத்து ஏற்பட்டது. அதனாலும் யாரும் உயிரிழக்கவில்லை. கதிர் வீச்சால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது ஆதராங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனோடு மூன்றாம் தலைமுறையை சேர்ந்த கூடன்குளம் அணுமின் நிலையத்தையும் ஒப்பீடு செய்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அறிவியலுக்கு ஒவ்வாதது.