Header Banner Advertisement

அன்புள்ள அப்பா


hinduhighschool-srivi

print

அன்று என் தாத்தாவிற்கு நினைவு நாள். அம்மா தனது பென்ஷன் பணத்தில் தன் தாய்மாமனும், மாமனாருமான என் தாத்தாவுக்காக வாங்கி வரச்சொன்ன ஓமப்பொடியை தட்டில் எடுத்து வைத்து படையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தார். அப்பா தனது பென்ஷன் பணத்தில் வாங்கிய திருநெல்வேலி அல்வா, அண்ணன், அண்ணியார் அவர்களது பணத்தில் வாங்கிய பலகாரம், நானும் என் குடும்பமும், என் தங்கையும் அவளது குடும்பமும் வாங்கி வைத்த பலகாரங்களெல்லாம் வித,விதமாக படையலில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர அவருக்கு பிடித்தமான காரச்சேவு, வெஜிடபிள் பிரியாணி, கூட்டு, பொரியல், அவியல், வறுவல், வடை, பாயாசம் என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் இருந்தது.

அன்று அவரது நினைவு நாளென்றதால் அனைவருமே அவரைப் பற்றியேதான் பேசிப் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

தாத்தா ஒரு தையல்காரர். அவ்வப்போது மெஷினில் ஏறி தைப்பது மட்டுமல்லாமல், காலையிலிருந்து இரவு வரைக்கும் குனிந்த தலை நிமிராமல் கத்திரி பிடித்து அளவெடுத்த துணிகளை வெட்டி வேலையாட்களுக்கு தைக்கக் கொடுக்கும் முதலாளி. ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான வீதியான பெரியகடை வீதியில் சுபாஷ் டெய்லர்ஸ் என்ற அந்த எட்டாம் நம்பர் கடையில்தான் அவரது ராஜாங்கம் கோலோச்சியது.

இடைவிடாது உற்று, உற்றுப் பார்த்து துணிகளை வெட்டிக் குவித்து அவர் தேடிய காசில்தான் அப்பாவுக்கு ஆங்கில டியூஷனும், ஹாக்கி விளையாட்டில் பேரும், புகழும் கிடைத்ததாக அப்பாவே அடிக்கடி சொல்லுவார்.

ஒரு தலைமுறையின் முன்னேற்றம் அவர்களது முன்னோர்களின் இடைவிடாத தவமென்றால் அது மிகையில்லை.

”அதென்ன பாக்கியம்… தாத்தா பேரு என்னன்னு கேட்டா நீ உன்னோட பாட்டி பேரைச் சொல்லுறே…”

– அறிவு வளர்ச்சியற்ற ஆசிரியரொருவர் வகுப்பறையில் என்னை அப்படிக் கேட்டு  நையாண்டி செய்தபோது அத்தனை மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சிரித்தார்கள்.

”அவரோட பேரு பாக்கியம் பிள்ளை…”

”அந்த அம்மாவோட பிள்ளையா…”

-அந்த முட்டாள் மறுபடி நையாண்டி செய்ய, மறுபடியும் மாணவர்கள் அனைவரும் ‘கொள்’ளென்று சிரித்தார்கள்.

சரியாக ஒரு வருடம்தான் அந்த பள்ளியில் நான் படித்தேன். என் தாத்தா பெயரைச் சொல்லி கிண்டல் செய்ததொரு மாணவனின் மண்டையை உடைத்து, அதற்கு என்னைத் தண்டிக்க வந்த அந்த முட்டாள் அசிரியனையும் கெட்டவார்த்தையில் திட்டியதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

இப்படிப்பட்ட மனநலம் குன்றியவர்களோடு சேர்ந்து படித்து இவன் என்ன கற்றுக்கொள்ளப் போகிறானென்று அப்பாதான் எனக்கு ஆறுதலாக பேசினார்.

நதிகள் சேருமிடம் உவர்ப்பாகிக் கரைமோதும் கடலாகினும், சங்கமம் அவசியம். பரந்து விரிந்து பார்ப்பவர் பிரமிக்கும் சமுத்திரமாக வளர்ந்து சாதிக்கவே இவ்வாழ்க்கை.

உலகில் நல்லது, கெட்டதென்று அனைத்துமே நமது தேடுதலுக்கும், தேர்வுக்குமான பொருள்தானே.

நான் இன்று சந்தித்த இந்த கசப்பான சம்பவங்களை என்றோ என் தகப்பனாரும் சந்தித்து சகித்துக் கொண்டு வாழ்ந்திருப்பார்தானே… அதனால்தானே அவர் இன்று ஒரு பணிஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி….

இது நெடு நாட்களின் பிறகு இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.

இப்போது நான் வசிக்கும் சென்னை போன்ற நகரத்திலுள்ள பெரிய பள்ளிகளில் பெற்றவர்கள் படித்திருந்தால்தான் பிள்ளைகளுக்கு ‘சீட்’ கொடுக்கிறார்கள். படித்த பெற்றோர்கள்தான் பிள்ளைக்கு நல்ல அறிவைத் தரமுடியுமென்ற பள்ளி நிர்வாகத்தின் கருத்தினடிப்படையிலேயே இது நடக்கிறது. ஆமென்று வெளியில் சொல்லிக்கொள்ள பயந்தாலும் அது ஓரளவுக்கு உண்மைதானென்பது எனது கருத்தென்றும் நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்.

அப்படிப்பட்ட சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை பெரிய அளவில் உருவாக்கி தங்களது பள்ளிக்கு எளிதாக பெயர் வாங்கி விடமுடியுமென்றே பள்ளி நிர்வாகமும் இப்படி நினைக்கிறார்கள்.

அதை கருத்தில் கொண்டே “எப்படிப்பா… எந்நேரமும் துணிகளை வெட்டிக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு பிள்ளையாகப் பிறந்து நீங்க இந்த அளவுக்கு அச்சீவ் பண்ணினீங்க…”, என நான் அன்று கேட்டபோதுதான் அப்பா அதை சொன்னார்.

எனது தாத்தாவை வெறும் தையல்காரர் தானே என்று மட்டும் நினைத்து நான் இந்த கேள்வியை அவரிடம் கேட்கவில்லை.

அவர் எங்கள் தாத்தா… அவரை நான் அப்படி லேசாக நினைத்து விடுவேனா.

எனக்குத் தெரியும், அந்த தகப்பனின் பொறுப்புதான் எங்களுக்கு இன்று இந்த சொகுசான வாழ்க்கையை கொடுத்திருக்கின்றதென்று…. இந்த கவுரவத்தையும், அந்தஸ்தையும் அள்ளித் தந்திருக்கின்றதென்று….

ஆனால் வீடு விட்டால் தையல்கடை…. கடையிலிருந்து வந்தால் வீடு என வாழ்ந்த அவர் எப்படி என் தகப்பனாரின் வெற்றிக்கு பின்புலமாக இருந்தாரென அறிந்து கொள்ளும் ஆவலில்தான் அந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். அதற்குத்தான் அவர் அந்த சம்பவத்தை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார் –

”ராஜபாளையம் ஸ்கூல் கிரவுண்டில் அன்று எங்களுக்கு மேட்ச்…”

”ம்ம்…”

”பல பள்ளிகளிலிருந்து ஹாக்கிப் போட்டியில் பங்கு கொள்ள பசங்க வந்திருந்தாங்க…”

”……  …..  ……”

”ரொம்ப நாளா விண் பண்ணமுடியாத அந்த கோப்பையை இந்த வருடமாவது அடிக்கணும்னு ரொம்ப வெறியோட இருந்தேன்…”

”ம்ம்…”

”ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்துக்கு பஸ்ல போயி கிரவுண்டுக்குள்ள போனதும் எனக்கு இருப்பு கொள்ளலை. ஒவ்வொரு ஸ்கூல் பசங்களும் மோட்டா, மோட்டாவா இருந்தானுங்க…

…. ஆனா வெற்றிங்கறது உடம்பு பெரிசாயிருந்துட்டா மட்டும் கிடைச்சுடாது. மனசுல சாதிக்கணும்னு எண்ணம் வேணும்… அது இருந்தாத்தான் பலம் கிடைக்கும். அதுதான் நமக்கு ஜெயம் கொடுக்கும்னு தெரிஞ்சிருக்கணும்…”

”……  …..  ……”

”ஒரு மணி நேரம் நடக்கும் அந்த போட்டிக்கு நடுவே பத்து நிமிடம் ப்ரேக்… மொத்தம் நூற்றி ஐம்பது யார்ட் நீளமுள்ள அந்த கோர்ட்டில் சென்டர் லைனில் நடு நாயகமாக நிற்பவன்தான் சென்டர் ஃபார்வேர்ட்.. அவனுக்கு வலதும், இடதுமாக நிற்பவர்கள் லெஃப்ட் இன், ரைட் இன்… மொத்த டீமுக்கு முக்கியமான ஆள் சென்டர் ஃபார்வர்ட்தான். பதினோரு பேர் கொண்ட அந்த டீமுக்கு நான்தான் சென்டர் ஃபார்வேர்ட்… வளைந்து தரையில் காத்துக் கிடந்த என் மட்டையின் மூக்கில் இன்று அத்தனை பந்துகளையும் நான்தான் முதலில் கவ்விப் பிடிக்கவேண்டும்… அதை சளைக்காமல் வேட்டையாடி பால்க்லைனுக்குள் போடவேண்டும்…”

”ரொம்ப டென்ஷனாயிருந்திருக்குமே…”

”அதான் கிடையாது… நமது இலக்கு நமக்கு அந்த மனோபாவத்தை கொடுக்கவே கூடாது. அது நமக்காகவே காத்துக் கிடப்பதாக நம்பவேண்டும் தன்னம்பிக்கையோடு பூந்து துவம்சம் பண்னணும்… ஈஷிப்பா… எல்லாமே சுலபம்தான்,,, பயப்படவே கூடாது… அட்டெண்ட் பண்னணும்… தப்பாயிட்டா அதையே பாடமா எடுத்துக்கிட்டு அடுத்து முயற்சி பண்னணும்… கொஞ்சம் சோர்ந்துட்டாலும்… டென்ஷனாயிட்டாலும்… அந்த பதட்டமே உன்னை கவுத்துடும். இது விளையாட்டில மட்டுமில்லை… வாழ்க்கையிலும்தான்.”

அப்பா ரொம்பவும் சர்வசாதாரணமாக வாழ்க்கையின் தத்துவத்தை சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். எந்த ஒரு விஷயத்துக்கும் மலைக்கவே கூடாது. தொட்டுவிட முடியாத தூரமாகினும் முடியுமென்று நினைத்ததால்தானே உந்துசக்தியின் உதவியோடு மனிதன் நிலவில் கால் வைத்தான். கடந்து செல்ல முடியாத ராட்சத அலைக்கரங்களுக்கு பயப்படாது சிந்தித்ததால்தானே மனிதன் கப்பலைக் கூட கண்டுபிடித்தான்.

நம்மால் எதுதான் முடியாது.

”அப்புறம் என்னாச்சு… அதைச் சொல்லுங்க…”, என்றேன்.

”எதைப் பற்றியும் கவலைப்படாமல் களம் இறங்கினேன். ஃபர்ஸ்ட் ஆஃபில் முப்பதே நிமிடத்தில் மூன்று கோல்கள் போட்டேன்.”

”ப்பா… நிஜமாவா…”

அப்பா மெலிதாக சிரித்தார். பின், ”கடுமையான போட்டிக்குப் பின்னாலே  நான் போட்ட அந்த மூனு கோல்ல எங்க ஸ்கூலுக்கு அந்த கப்பு கிடைச்சது…” என்றார்.

”இன்டர்வெல்லுக்கு அப்புறமா அடுத்த முப்பது நிமிஷத்துல அவங்க ட்ரை பண்ணலையா…”

”ஃபர்ஸ்ட் ஆஃபிலேயே மூனு கோல்ங்கறது பெரிய விஷயம்தான். அதை பீட் பண்றது நடக்கிற காரியமான்னு எதிர் டீம் மிரண்டு போயிருக்கணும்… அந்த பயமே அவங்களை செயலிழக்க வைத்திருக்கும். அதான் சொன்னேன், இலக்கைப் பார்த்து பயப்படவோ, டென்ஷனாகவோ கூடாது… நடக்கறது நடக்கட்டும்னு தைரியமா இறங்கணும்னு… அப்போதான் ஜெயிக்க முடியும். பயந்தவனுக்கு வெற்றி கிடைக்காது…”, என்றார்.

எனக்கு மிக பெருமையாக இருந்தது. ”ம்ம்… சூப்பர்… அப்புறம் என்னாச்சு…”,என்றேன்.

”எங்க பள்ளியைச் சேர்ந்த பசங்களெல்லாம் என்னை தோள்ல தூக்கி வச்சுக்கிட்டு ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டு வரை கொண்டு வந்து ஊருக்கு வண்டியேற்றி அழைத்து வந்தாங்க….”

”ம்ம்…”

”எங்க அப்பா இதை ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில வெச்சுப் பார்த்ததா அம்மாகிட்ட வந்து சொல்லி பூரிச்சுப் போனாராம்…”

“அவரு எங்க பார்த்திருக்கப் போறாரு… அவருக்குத்தான் வீடு விட்டா கடை… கடை விட்டா வீடுன்னுதானே வாழ்க்கை ஓடுச்சு….அவரோட கஸ்டமருங்க யாராவது பார்த்துருப்பாங்களா இருக்கும்…”

”நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா அது பொய்யில்லைன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்…”

”எப்படி?…”

”இதே போல நம்மூரு சி.எம்.எஸ் ஸ்கூல் கிரவுண்டில ஒரு மேட்ச் நடந்தது. நம்ம வீட்டுலேர்ந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சி.எம்.எஸ் ஸ்கூல் கிரவுண்டு. அப்போவெல்லாம் பஸ்ஸூ வசதி கிடையாது… . காலையில என் ஃப்ரெண்ட்ஸுங்களோட சைக்கிள்ல  நம்ம ஹிண்ட் ஹை ஸ்கூல்லேர்ந்து அங்கே போயிட்டேன்.”

”ம்ம்…”

”மேட்சுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. நான் கிரவுண்டுக்குள்ளே நுழைந்ததும் எங்க ஸ்கூல் பசங்க மட்டுமில்லாம, ராஜபாளையம் ஸ்கூல் பசங்களும் எனக்கு ரொம்ப ஆரவாரமா சீட்டியடிச்சு வெல்கம் கொடுத்தாங்க…”

”நியாயம்தானே…”

”எனக்கு அப்படியே சிலிர்த்துப்போச்சு… இத்தனை பேரு மனசுல நின்னுட்டோமேன்னு சந்தோஷமா இருந்துச்சு.”

”ஆமாமா இருக்கும்… இருக்கும்… நல்லா இருக்கும்… ஆளுகளை எப்படி மயக்குறதுன்னு இவருக்கு சொல்லியா கொடுக்கணும்… டீச்சர் ட்ரெய்னிங் காலேஜுல என் காலுக்கு மேட்சா செருப்பு வாங்கிட்டு வந்து கொடுத்து என்னை கவுத்துனவர்தானே இவரு… இவருக்கா தெரியாது… யாரை எப்படி அடிக்கணும்னு…”

– அடுப்படியிலிருந்து என் அம்மாவின் குரல் கேட்டது.

என் அண்ணியாரும், எனது தங்கையும் ஒன்றாகச் சேர்ந்து களுக்! கென்று சிரித்தார்கள்.

”ம்…ம்… போதும்… போதும்… உன் வேலையைப் பாரு…”, என்று லேசாக அதட்டினார் அப்பா.

– உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

”சரி, நீங்க மேலே சொல்லுங்க…” என்றதும்,

”ஃபர்ஸ்ட் ஆஃபில சரியாக இருபத்தைந்தாவது நிமிடத்தில் என் டீமிலேர்ந்த ஒரு ஃபாலோவர் செய்த தப்புல எதிர் டீம் அந்த கோலை அதிர்ஷ்டவசமா போட்டாங்க…”, என்று சற்றே தேங்கி நின்றார்.

”அய்யய்யோ… அப்புறம்… “

”அடுத்த ஐந்து நிமிடத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் முடிஞ்சுடுச்சு…”

”ம்ம்…”

– எனக்கு அடுத்து என்ன நடந்திருக்குமெனத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலானது.

அவர் உடனே சொல்லவில்லை. மேசையிலிருந்த த்ண்ணீரை எடுத்து மெதுவாகக் குடித்தார். அவர் ஏதோ உணர்ச்சி வயப்பட்டிருந்தாரென்று மட்டும் தெரிந்தது. ஆனால் என்ன நினைத்திருப்பார்…. எதைப்பற்றி நினைத்திருப்பாரென்றுதான் தெரியவில்லை…

”செகண்ட் ஆஃபில் நான் எதிர்பார்த்தது போலவே எங்கள் டீம் கொஞ்சம் டென்ஷனாகிப் போனார்கள். ஆனால் நான் பதறவில்லை… பேக் லைனிலிருந்த பந்தை கவ்விக் கொண்ட என் மட்டையை மிக கவனமாக கையாண்டு பந்தை எங்கள் டீமில் யாரிடமும் தராமல் வெகு வேகமாக பால்க்லாப்பை நோக்கி கொண்டு சென்றேன்…”

– எனக்கு நிஜமாகவே இருப்பு கொள்ளவில்லை. இருக்கையின் நுனிக்கு வந்தேன், என்னையறியாமல்.

”சரியாக பால்க்லாப்பில் பந்தைப் போடும்போதுதான் அவரை கவனித்தேன்.”

”யாரு…”

”எங்க அப்பா… உங்க தாத்தா…”

”அப்புறம்…”

”எங்க அப்பா எப்பவும் கதர்ல அரைக்கை சட்டையும்,வேஷ்டியும்தான் அணிவார். கட்டுன வேட்டியை ஒருநாள் கூட தூக்கி மடிச்சுக் கட்ட மாட்டார். கீழே இறக்கி விட்டு அதன் ஒரு முனையை மட்டும் கையால் தூக்கிப் பிடித்திருப்பார். மேட்ச் நடக்கும் அந்த கிரவுண்டுக்கு வெளியே வேலியோரமாக ஒருகையால் வேட்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு, மறுகையால் மோவாய் கட்டையை தடவிக்கொண்டு என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.”

”வாவ்…”

”அதைப் பாத்ததும் எனக்கே ஒரு நிமிஷம் ஆடிப்போயிடுச்சு… அந்த கேப்புல எதிர் டீமிலேருந்த ஒரு ப்ளேயர் படார்னு என் மட்டையிலிருந்து பந்தைப் பிடுங்கிட்டான்… எங்க டீமில எல்லாருமே ஷாக்காகிட்டாங்க…”

”… …. ….”

”ஆனா கொஞ்ச நேரம்தான்… சுதாரிச்சுக்கிட்டு அந்த பாலை விரட்டினேன் பாரு… நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியாது….எங்க அப்பா என் மேட்ச்சைப் பார்க்க வந்திருக்கிறார்ங்கற அந்த வெறியில் மடேர்.. மடேர்ன்னு அடுத்தடுத்ததா தொடர்ந்து மூனு கோல் போட்டேன்….அதுவும் வெறும் பதினைந்து நிமிட இடைவெளியிலே….”

”அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா……. சூப்பர்……”

”அப்போ எங்க அப்பாவை நீ பார்த்திருக்கணுமே… அப்படி ஒரு சந்தோஷத்தில் அடக்கமுடியாத ஆனந்தத்தில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தார்….”, என்றார் அப்பா மிகவும் நெகிழ்ந்து போய்.

”வீட்டுல வந்து, என்னப்பா வேலையை விட்டுட்டு புதுசா மேட்ச் பார்க்க வந்துட்டீங்க…ன்னு கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா…”

”என்ன சொன்னார்…?”

”அட போப்பா…  நீ விளையாடற எல்லா ஆட்டத்தையும் நான் வந்து பார்த்திருக்கேன்ப்பா… என்றார்…”

”… …. ….”

”சி.எம்.எஸ் ஸ்கூலு அஞ்சு கிலோமீட்டர் தூரம்ப்பா. யார் கூடயாவது சைக்கிள்ல வந்தீங்களா என்றேன்….”

”ம்ம்…”

”அதற்கு அவர், இல்லைப்பா நடந்துதான் வந்தேனென்றார்….” எனச் சொல்லிவிட்டு ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டவராய் சட்டென்று தலையை குனிந்து கொண்டார்.

தன் தந்தை தன்மீது வைத்திருந்த அக்கறையை  நினைவுகூர்ந்து இந்த வயதிலும் உருகும் என் தந்தையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அத்தோடு அன்று சி.எம்.எஸ் ஸ்கூல் கிரவுண்டில் எங்கள் தாத்தா என்ன விதமான மன நிலையில், எப்படிப்பட்ட ஆனந்தத்தில் இருந்திருப்பாரென்றும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் இப்போது ஒரு தகப்பன்தானே.

அப்பா மேலும் சொல்ல ஆரம்பித்தார் –

”ஒரு குழந்தையோட முன்னேற்றத்தை அவர்களைச் சூழ்ந்த சமூகம்  நிர்ணயிக்குதுப்பா… உண்மைதான்…. ஆனா எப்படிப்பட்ட சமூகத்தோட பழகணும், யார், யார்கிட்டேயிருந்து என்னென்ன  நல்ல விஷயங்கள் கிடைக்குமுன்னு தெரிஞ்சு பெத்தவங்கதான் அந்த குழந்தைய கையைப் பிடிச்சு கூட்டிக் கொண்டு போய் அங்கே விடணும்… அதை தன்னோட பிள்ளைங்க நல்லா கத்துக்கிறாங்களான்னு தூரமா நின்னு கவனிச்சுக்கிட்டேயிருக்கணும். அதை எங்க அப்பாவும், அம்மாவும் நல்லா பண்ணினதாலதான் நான் இந்த அளவுக்கு ஜெயிச்சுருக்கேன். புரிஞ்சதா”, என்றார்.

”ம்ம்…”, என்றேன் நான்.

அப்பா நெடு நேரத்துக்கு அந்த நினைவுகளிலிருந்து வெளி வரவில்லையென தோன்றியது. அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே ஆணி அடித்தது போல அமர்ந்து தாத்தாவைப் பற்றிய நினைவுகளிலேயே இருந்தார். அது எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் புரிந்திருக்க வேண்டும். யாரும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரத்தில் அப்பாவை அவரது ஐம்பது வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்கு கொண்டு சென்றதில் வீடே அமைதியானது..

தன் குழந்தைகளை அவையத்துள் முந்தியிருக்கச் செய்து வெற்றி கண்ட தகப்பனின் அந்த களிப்பில் கிடைத்த உற்சாகத்தை அனுபவித்த எந்தப் பிள்ளைதான் ‘அச்சீவ்’ பண்ணாது போய்விடும்?. அதனால்தான் என் தகப்பனாரும் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். தந்தையின் நினைவில் அவர் இன்னும் சிறிதுநேரம் அப்படியே இருக்கட்டும். ’இவன் தந்தை எந்நோற்றான் கொல்’ லென மகன் தந்தைக்கு ஆற்றும் கடமையாக வள்ளுவர் சொன்னதை ஒரு பிள்ளையும் உணர்ந்திருக்க வேண்டும்தானே. அக்கடமையை செவ்வனே செய்த என் தகப்பனார் இன்று ஒருநாள் முழுவதும் கூட தன் தந்தையின் நினைவுகளிலேயே இருக்கட்டும்.

குறிப்பு 🙂 தந்தையர் தினத்துக்கான பதிவு இது. வில்லங்கச் செய்தியில் மட்டுமே வெளியிடும் கதை இது.