
சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர் With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 200 கிராம் பாக்கெட் 18 ரூபாய். Glycemic Index தொடர்புடைய ஒரு பதிவு.
Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும், இதில் 5 நிமிடங்கள் அடுப்பிலேயே கொதிக்கவைத்து நீரை வடிக்கவேண்டும் என்பது தவிர இரண்டுக்கும் தயாரிப்பில் அதிகம் வித்தியாசம் இல்லை.
எந்த சேவையாக இருந்தாலும், சேவை தயாரித்தபின் நமக்கு விருப்பமான வகையில் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, தயிர் சேவை போன்றவைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லாம் தயாராக இருந்தால் ஒரே பாக்கெட்டில் அரை மணி நேரத்தில் நான்கு வகை சேவைகளை குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க செய்துவிடலாம்.
எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தது, சேவையை எதனோடும் கலக்காமல் அப்படியே சுடச் சுட இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பச்சைத் தேங்காயெண்ணெய் மட்டும் கலந்து மோர்க் குழம்பு அல்லது காரம் சேர்த்த தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடுவது.