
அகில உலகங்களிலும் உள்ள எல்லா ஒலிகளும், சொற்களும், ஸ்வரங்களும் பரம்பொருளான சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியவை. பூலோக மக்கள் அறிந்தது ஏழு ஸ்வரங்களை மட்டும்தான். இந்த ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு பல ராகங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று.
இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. இசையால் உடலும் நலம் பெறும்; மனதுக்கும் அமைதி கிட்டும். தங்கள் ஸ்வரங்களில்தான் உலகமே அற்புதமான இசையால் நிறைந்திருக்கிறது. இறைவன்கூட இராவணன் வாசித்த சாம கானத்தில் மனதைப் பறி கொடுத்தவர்தானே! அப்படியிருக்க நாம்தான் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற ஆணவத்தால் இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள் இசையால் யாரையும் கவர முடியாது.
ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். கலைவாணியிடம் சாபம் பெற்ற சப்தஸ்வர தேவதைகள் ஊமையாகிப் போயின. தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் மௌனமாக பிராயச்சித்தம் பெற மன்றாடின. அகில உலக நாதனான சிவபெருமான் அவர்களுக்கு சாபவிமோசனம் அருள மனம் கொண்டார்.
பூலோகம் சென்று, தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சிராப்பள்ளி மலை உச்சியில் அமர்ந்திருக்கும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு வலம் வந்து, ஏழு ஸ்வரங்களுக்கும் அதிபதியாக இருந்த நீங்கள் கிரிவலம் வரும் பாதையில் ஏழாவதாக ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அங்கிருந்து மீண்டும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள் என்று அருளினார்.
இறைவன் அருளியதுபோல், மலைக்கோட்டையின் வடக்குப் பகுதியில், உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்கும் வகையில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி ஏழு ஸ்வரங்களும் சாபவிமோசனம் பெற்றன. சிவபெருமானின் கட்டளைப்படி சப்த ஸ்வர தேவதைகள் கிரிவலப் பாதையில் ஏழாவது விநாயகராக இவரை ஸ்தாபிதம் செய்ததால் இந்த விநாயகர் ஆலயம் ஏழைப் பிள்ளையார்- சப்தபுரீஸ்வரர் கோவில் என்று பெயர் பெற்றது.