
உன்னோடு ஐவர் ஆனோம்! என்று ராமபிரானால் சகோதரனாக ஏற்கப்பட்ட பெருமைக்கு உரியவன், குகன். எளிமையான இறைபக்தியுடன் திகழ்ந்த குகன், பரசுராமர், ஸ்ரீராமர் போன்ற அவதார மூர்த்திகளுக்கு நேரடியாகவே திருவடி பூஜைகளைச் செய்யவும் பாக்கியம் பெற்றவர். குகன் காவிரிக் கரையில் கங்கை தீர்த்தம் கொண்டு ராமச்சந்திரனின் திருப்பாதம் அவரது திருவடிகளில் தனது கரத்தால் நேரடியாக இட்டு பாத பூஜை செய்வித்தான். ஸ்ரீராமர் குகனைக் கட்டித் தழுவினார். அப்போது ராமரின் மரவுரிகளுள் ஒன்று ஆற்றில் நழுவியது.
அதனை எடுத்து வர குகன் சட்டென்று விரைந்தபோது ஸ்ரீராமர், அடியேனுடைய சத்தியப் பிரமாணப் பீதாம்பரமாகவே இந்த குகச் செல்வம் இருக்கையில் இன்னொரு ஆடை எதற்கு? எனக் கூறிச் சிரித்தாராம் ராமபிரான். ராமாயணத்தில் எத்தனையோ புனைக்கதைகள் இடைசெருகலாக இருப்பதுபோல் இத்தலத்தின் புராணமும் புதுமையாக இருக்கிறது.
மகா பிரளயத்திற்கு முன் சர்வேஸ்வரன் ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தார். சிருஷ்டிக்காக அவர் விழித்தெழ வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சர்வேஸ்வரனோ ஞான யோகத்தால் இருந்ததால் அவரது யோக நிலையை எப்படிக் கலைப்பது என யோசித்தார்கள் தேவர்கள். யாவரும் திருமாலை வேண்டினர். உடனே, மத்ஸ்ய அவதார மூர்த்தியாக சாந்த குணங்களுடன் தங்கக் கவசம் போல் ஒளி விடும் பெருமாள் தோன்றினார்.
அவர் அருகே காமதேனு தன் நான்கு புதல்வியருடன் வந்து நின்றது. அடுத்து சகல விதமான அலங்காரங்களுடன் கல்யாண சுந்தரியாய் அம்பிகை தோன்றினாள். பின் அம்பிகை தனது மெல்லிய குரலில் கூ…கூ.. என வேத நாதங்களை ஓதிட, இறைவன் ஞான யோகத்திலிருந்து மீண்டார். சிருஷ்டி பரிபாலனத்திற்கு பிரம்மாவுக்குத் துணை புரிந்தார். கல்யாண சுந்தரியான அம்பிகை, கூ…கூ…. என வேத நாதங்களை ஓதியதால். இத்தலம் கூகூர் எனப் பெயர் பெற்றது.