
விச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள். மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை பெரும் யுத்தம் புரியும் அளவிற்கு வளர்ந்தது. போரில் குபேரனின் அனைத்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.
மனம் உடைந்த குபேரன், மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. மகாவிஷ்ணு, தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்த ராவணனை யுத்தத்தில் வீழ்த்துவார். அப்போது, உன்னிடமிருந்து பறிபோன புஷ்பகவிமானமும் உனது செல்வமும் உன்னை அடையும் என்றது அக்குரல். பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஓர் ஆலயம் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். முடிவில் இறைவன் அருளால், அவரது வாக்குப்படியே இழந்த தன் பெருமைகளையும் பொருளையும் மீண்டும் பெற்றான்.
அதிசயத்தின் அடிப்படையில்: ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 16 தளங்கள் வரை இருப்பது அதிசயம்!
விஞ்ஞானம் அடிப்படையில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர். சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.
இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசிப்பதால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், செல்வ வளம் பெருகும், உடல் நலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.