
முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று ஆணவமும், அவர்களது மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர்.
சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.
மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர்.
சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன்.
சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.