Header Banner Advertisement

அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில் (ஓமாந்தூர்) தல வரலாறு


NEWS  PHOTO

print

காராளன் என்ற பத்து வயது சிறுவன் கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள ஜெம்பு ஏரி பகுதியில் (தற்போதைய புளியஞ்சோலை) 800 ஆண்டுகளுக்கு முன் பெற்றோருடன் வசித்து வந்தான். இவனது தொழில் மாடு மேய்ப்பது. அப்போது, கொல்லிமலையிலுள்ள பெரியண்ண சுவாமியை மலையாள மக்கள் பூஜித்து வந்தனர்.

அவர்கள் விசேஷமாகச் செய்யும் பூஜைகளில் குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை. மலையாள பூஜாரியார் மகனும், காராளனும் நண்பர்கள். ஒருமுறை காராளன், பூஜையைக் காண விருப்பம் தெரிவித்தான்.

யாரும் அறியாமல் பரண் அமைத்து அவர்கள் பூஜையை பார்த்தனர். அப்போது அருள் வந்த மலையாள பூஜாரி, நம்முடைய தெய்வீக அந்தரங்கங்களை அந்நியன் ஒருவன் பார்த்து அறிந்து கொண்டான். அவனை வெட்டுங்கள், என உத்தரவிட்டார். காராளன் பிடிபட்டு தண்டனையை மறுநாள் காலை நிறைவேற்றுவதற்காக ஓரிடத்தில் சிறை வைக்கப்பட்டான். அவன் பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மனின் பக்தன். தனது நிலை குறித்து சுவாமியிடம் வேண்டினான். இரவில் தன்னை மறந்து உறங்கும்போது, கனவில் வந்த பெரியண்ண சுவாமி, இங்கிருந்து தப்பி இரவோடு, இரவாக உன் மாடுகளுடன் தென்திசை சென்றுவிடு, ஒவ்வொரு இரவும் தங்கி, பின் தொடர்ந்து பயணம் செய். எந்த இடத்தை விட்டு மாடுகள் போகாமல் சுற்றி வருகிறதோ, அங்கு நான் கோயில் கொள்வேன்.

அந்த இடத்தில் நீயும் உன் சந்ததியினரும் எனக்கு கோயில் கட்டி பூஜை செய்ய வேண்டும், என்று கூறி மறைந்தார். அதன்படி காராளன் அங்கிருந்து தப்பி தன் பெற்றோருடன் ஒரு குன்னிமரத் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே மாடுகள் சுற்றி சுற்றி வந்தன.

அப்போது பேரிரைச்சலுடன் சுழற்காற்று வீசியது. மாடுகள் கதறின. காராளன் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டான். அன்னகாமாட்சி அம்மனும், மாசி பெரியண்ண சுவாமியும் அசரீரியாக, நாங்கள் இங்கே தங்கியுள்ளோம், நீங்களும் இங்கேயே பாதுகாப்பாக தங்கி கொள்ளலாம், என்று கூறியதை தொடர்ந்து காராளன் அங்கு தங்கினான். தொடர்ந்து அப்பகுதியில் கோயில் கட்டப்பட்டது. துரையூர் ஜமீன்தார் மண்டபங்களை கட்டினர். அவர்கள் தங்கிய இடமே ஓமாந்தூர்.

 தலச் சிறப்பு

 அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு.

 பக்தர்கள் கல்வி அறிவு பெறவும், திக்கு வாய் மற்றும் நோய்கள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.