
சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம். ஒருசமயம் அவர் திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தார். சிவனையே நண்பராகப் பெற்றிருந்த அவர் இங்கு அவரிடம் பொன் வேண்டி பதிகம் பாடினார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக இருந்தார்.
பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும் பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன் முடிப்பை பரிசாகத் தந்தார். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே அவர் பொன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் சுந்தரரிடம், பொன்னை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தை கேட்டனர். அவர் “பொன் சுத்தமானதுதானா!,’ என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர்களில் ஒருவர் சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி, அதனை உரைத்துக் காட்டி தரமானதுதான் என்று உறுதி கூறினார். உடனிருந்தவரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் மறைந்து விட்டனர். வியந்த சுந்தரர் சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்ணு எனவும் உணர்த்தினார். “மாற்றுரைவரதர்’ என்ற பெயரும் பெற்றார்.