
ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத் தொடங்குகிறது. இது லேசான தொடர் மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில் விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும் பெண்ணுக்கு இனிமையான குரலும் தோன்றுகிறது. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மைபோய் கரகரப்பு சேர்ந்துவிடுகிறது.
குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த குரல் நாண்கள் சப்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும் அதிர்கிறது. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது.
எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைப் பிடித்தலும் தொண்டை குரல் நாணை நேரடியாக பாதிக்கும் காரணிகள் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப் பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக வைத்திருப்பவர்களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இவற்றை கடைப்பிடித்து நாமும் நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோம்.