
‘மகாத்மா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவரும் ‘கேசரி’ என்ற மகாராஷ்டிரப் பத்திரிகையையும் ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை யையும் ‘கீதாரகசியம’ என்ற நூலை மராட்டிய மொழியில் எழுதியவரும் ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பாரதம் விடுதலை அடைந்த பிறகு நீங்கள் என்ன பொறுப்பை எடுத்துக் கொள்வீர்கள்? உள்துறையா? என்று கேள்வி கேட்டபோது இந்த அரசியலே எனக்குப் பிடிக்காது; பாரதம் விடுதலை அடைந்த பிறகு கால்குலஸ் பற்றி ஒரு கணிதப் புத்தகம் எழுத நேரத்தை ஒதுக்குவேன் என்றார்.
1952-ல் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி காலமானபோது நோபல் பரிசு பெற்றவரும் அணுகுண்டைக் கண்டுபிடித்த பிரசித்தபெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஜனாதிபதியாகப் பதவியேற்க அழைத்த போது ‘நான் பௌதிக உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். மனிதர்களை ஆட்சி செய்ய விரும்பவில்லை’ என்றார். சிறுவயதில் வறுமையும் கடனும் வாட்டியெடுக்க பத்திரிகை ஆசிரியராகி விடாப்பிடியாக படித்தும் எழுதியும் பிற்காலத்தில் அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை எழுத்தாளராகப் புகழ்பெற்றவர் மார்க் ட்வைன்.
அரசியல் சுழியில் சிக்கிக் கொள்ளாமல் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ இருந்திருந்தால் நிறைந்த மனநிம்மதியுடன் வாழ்ந்திருப்பேன் என்றார் மைசூர் புலி திப்புசுல்தான். தாம் ஆண்ட 7 ஆண்டுகளில் பெரும் பகுதியை போர்க்களத்திலேயே கழித்த இவர், இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். அறிஞர்களுக்கு ஊக்கமளித்து ஏராளமான நூல்களை இயற்றச் செய்தார். மிக உயர்ந்த கவர்னர் ஜெனரல் பதவியை வகித்த ராஜாஜி நான் செய்த பணிகளில் சிறந்ததாக நான் கருதுவது ராமாயணத்தையும் பாரதத்தையும் காந்திஜிக்கு அறிமுகப்படுத்தியதைதான் என்றார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி ஆய்வு நூலகத்தை ஏற்படுத்தி மகிழ்ந்தவர் முதல்வர் கருணாநிதி. இவர்கள் எல்லாம் படிப்பதையே விரும்பியவர்கள். ஆதலால் படிப்பதை நாமும் பழக்கிக் கொள்வோம்.