Header Banner Advertisement

ஆதிசங்கரரின் வாழ்க்கை சரித்திரம்


001

print

1.எட்டாம் நூற்றாண்டில் மிகவும் நலிவுற்றிருந்த சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக விஷ்ணு மற்றும் ப்ரஹ்மாவை முன்னிலையாக வைத்துக் கொண்டு தேவதைகள் மற்றும் ரிஷிகள் கயிலாயத்திற்குச் சென்று ஸ்ரீபரமேஸ்வரனைப் ப்ரார்த்தனை செய்தனர். பரமேஸ்வரன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுப் பூலோகத்தில் அவதாரம் செய்வதாக தெரிவித்தார். இது சங்கராசாரியாரின் அவதாரத்திற்கு மூல காரணமாயிற்று.

2.கேரளத்தில் பூர்ணா நதிக் கரையிலிருந்த காலடி என்ற அக்ரஹாரத்தில் இருந்த சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதி திருச்சூரின் வ்ருஷாசலேஸ்வரனிடம் சந்ததிக்காக வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

3.தர்மிஷ்டர்களான அந்தத் தம்பதியின் பக்திக்கு மகிழ்ந்த ஈஸ்வரன் கனவில் தரிசனம் அளித்து அவர்களை அனுக்ரஹித்தார்.

4.சிவனுடைய ஆசீர்வாதத்தால் பிறந்த குழந்தைக்குச் சிவகுரு தம்பதி சங்கரன் என்று நாம கரணம் செய்தார்கள்.

5.ஐந்தாவது வயதில் ஸ்ரீ சங்கரருக்கு உபநயன ஸம்ஸ்காரம் நடைபெற்றது.

6.உபநயனத்திற்குப் பிறகு பால சங்கரர் குருகுலவாஸம் செய்து கொண்டு பிக்ஷைக்காக வீடு வீடாகச் சென்று ப்ரஹ்மசர்ய வ்ரதத்தைக் கடைப்பிடித்தார்.

7.வடுவான ஸ்ரீ சங்கரரை கதன்வன் தர்சனம் செய்து தன் இலக்கிய ஏடுகளை அர்ப்பணித்தான்.

8.பூர்ணா நதிக்கு ஸ்நானத்திற்காகப் புறப்பட்டுச் சோர்வடைந்த தாயாரைப் பரிவுடன் ஸ்ரீ சங்கரர் தேற்றுகிறார்.

9.ஸ்ரீ சங்கரர் கடவுளைப் ப்ரார்த்தனை செய்து பூர்ணா நதி வீட்டிற்கு அருகில் ஓடுமாறு செய்து தாயின் தினசரி நதி ஸ்நானத்திற்கு அனுகூலத்தை ஏற்படுத்தினார்.

10.முதலை கால் பிடித்த காரணத்தைக் காட்டி ஸ்ரீ சங்கரர் தாயாரின் அனுமதியைப் பெற்று அவசர சந்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.

11.க்ரம சந்யாஸத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு ஸ்ரீ சங்கரர் தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.

12.நர்மதா நதிக் கரையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரின் சந்நிதியில் ஸ்ரீ சங்கரர் க்ரம சன்யாஸத்தை ஏற்றுக் கொண்டு வேதாந்த அத்யயனம் செய்தார்.

13.கரை புரண்டு ஓடத் தொடங்கிய நதியின் வெள்ளப் பெருக்கை ஸ்ரீசங்கரர் தன் கமண்டலத்தில் அடக்கினார்.

14.காசியில் சிஷ்யர் சநந்தனனுக்கு குரு ஸ்ரீ சங்கரருடைய க்ருபா கடாக்ஷம். ஸநந்தனர் ஆசார்யரை நினைத்துக் கொண்டு பொங்கி ஓடும் கங்கா நதியைக் கடக்கும் போது ஒவ்வோர் அடிக்கும் ஒவ்வொரு தாமரை தோன்றி ஆதாரமாகியது. சனந்தனர் நதியைக் கடந்து வந்தார். அன்று முதல் சனந்தனர் பத்மபாதர் என்றே அழைக்கப்பட்டார்.

15.ஸ்ரீ சங்கரர் வாராணஸியில் இருக்கும் பொழுது பரமேஸ்வரன் சண்டாளனின் ரூபத்தில் வழியில் குறுக்கிட்ட போது உண்மையை அறிந்த ஸ்ரீ சங்கரர் மனீஷா பஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

16.ஸ்ரீ சங்கரரின் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களைப் பார்த்து முழுமையாக மகிழ்வுற்ற ஸ்ரீ வேதவ்யாஸர் ஸ்ரீ சங்கரரை அனுக்ரஹித்தார்.

17.ஆச்சார்யாருக்குச் செய்த அபராதத்திற்குப் ப்ராயச்சித்தமாக துஷாக்னியில் (எரியும் உமியில்) எரிந்து கொண்டிருந்த குமாரில பட்டரை ஸ்ரீ சங்கரர் சந்தித்தார்.

18.குமாரிலபட்டரின் சிஷ்யரும் கர்ம வீரருமான மண்டனமிச்ர (விஸ்வரூப)ருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும் வாதமேற்பட்டு அந்த வாதத்தில் சங்கரர் வெற்றியடைந்தார்.

19.வாதத்தின் நியமப்படி மண்டனமிச்ரர் ஸ்ரீ சங்கரரிடமிருந்து சந்யாஸத்தை ஏற்றுக் கொண்டு சுரேச்வரர் என்ற பெயரை அடைந்தார்.

20.பத்மபாதரின் வேண்டுதலால் ஆனந்தமடைந்த நரசிம்ம சுவாமி சிம்ம ரூபத்தில் வந்து, தலை வெட்டுவதற்கு வந்த காபாலிகனை சம்ஹாரம் செய்து ஸ்ரீ சங்கரரைக் காப்பாற்றினார்.

21.யாத்திரை சமயத்தில் ஸ்ரீ சங்கரர் கொல்லூர் மூகாம்பிகை கோவில் அருகில் இருக்கும் ஸ்ரீ பலி கிராமத்தில் ஊமையாயிருந்த பாலகனைச் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, அவன் பரமாத்ம தத்துவத்தை உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக் கனி போல் தெள்ளத் தெளிவாகச் சொன்னதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து ஹஸ்தாமலகர் என்ற யோகப் பட்டத்தினால் சந்யாஸாஸ்ரமத்தை அனுக்ரஹித்தார்.

22.ஸ்ரீ சங்கரர் கிரி என்ற சிஷ்யனின் சேவைக்கு மகிழ்ச்சியடைந்து முழுமையாக அனுக்ரஹித்தார். தோடக விருத்தத்தின் பத்யங்களால் ஆச்சார்யரை ஸ்துதி செய்த சிஷ்யன் கிரிக்குத் தோடகர் என்ற பெயருடன் சந்யாஸத்தைக் கொடுத்தார்.

23.சிருங்கேரியில் கடும் வெயிலில் ப்ரசவ வேதனையால் தவித்துக் கொண்டிருந்த தவளை ஒன்றிற்கு அதன் இயற்கை எதிரியான பாம்பு தன் படத்தால் நிழலைக் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சியைப் பார்த்த ஸ்ரீ சங்கரர் அங்கே தம்முடைய முதன் முதலான பீடத்தை (தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடம்) நிறுவினார்.

24.மரணப்படுக்கையிலிருந்த தன் தாயாரை ஸ்ரீ சங்கரர் விஷ்ணு பதத்தை அடையச் செய்தார்.

25.சுதன்வராஜன் தன்னுடைய இலக்கிய ஏடுகள் தீயில் எரிந்தன என்று ஸ்ரீ சங்கரரிடம் அறிவித்துக் கொண்ட பொழுது தன்னுடைய அற்புதமான நினைவாற்றலால் சிறு வயதில் கேட்ட அந்த இலக்கியங்களை முன்பு இருந்தவாறு சுதன்வ ராஜனுக்குச் சொல்லி அவனை அனுக்ரஹித்தார்.

26.ஸ்ரீ சங்கரர் காஷ்மீரத்தில் ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார்.

27.தன்னுடைய அவதாரத்தின் கடமைகள் முடிந்த பிறகு ஸ்ரீ சங்கரர் இமயமலையில் கேதாரத்தில் சிஷ்யர்களுக்கு இறுதியாகக் காட்சி அளித்து மறைந்தார்.

COURTESY & SOURCE :   அம்மன் தரிசனம் (ஆன்மிக இதழ்)