Header Banner Advertisement

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது’ : மயிலாடுதுறை தனிமாவட்டமாக வேண்டியதன் அவசியம் இதுதான்!


www.villangaseithi.com

print
மயூரம் என்ற வடமொழி சொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா? இதனால்தான் ”ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்று மாயவரம் என்றழைக்கப்படும் என்று மயிலாடுதுறைப் பற்றி பெருமையாக கூறுவார்கள். ஆனால், தற்போது இந்த நகரின் நிலைமை என்ன?
”ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது” என்று கிண்டலாகப்‌ பேசுமளவிற்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை நகரம் எப்படியிருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கிறது, எந்தவித வளர்ச்சியும் இல்லாமல்.5 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது:பாழ்பட்டுப் போயிருக்கும் காவிரியாறு, இட நெருக்கடியில் சிக்கித் திணறும் 50 ஆண்டுகால பேருந்து நிலையம், வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை, குண்டும் குழியுமான சாலைகள், பொதுக் கழிப்பிடம்கூட இல்லாத அவல நிலை போன்றவற்றைதான் எப்போதும் பார்க்க நேரிடுகிறது. சிறு நகரங்களெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், மயிலாடுதுறை மட்டும் அப்படியே இருக்க காரணம், இந்த நகரின் மீது பற்றும், அக்கறையும் இல்லாததுதான். அது அரசியல்வாதியாகட்டும். பொது மக்களாகட்டும். இதில் அனைவருக்குமே பங்குண்டு.

5 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட புராதன நகரம் மயிலாடுதுறை என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஆன்மீக தலங்கள் மற்றும் நவக்கிரக கோயில்கள், புகழ்பெற்ற காவிரிக் கரைக்கு எழுந்தருளும் பஞ்ச மூர்த்திகள் விழா, இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்றான இராமகாதையை தமிழ்மொழியில் வடித்த கம்பர் வாழ்ந்த நகரம் என்ற பெருமைகளை உள்ளடக்கியது. இதுதவிர, உ.வே.சா சாமிநாத அய்யர், மாயூரம் வேதந‌யகம் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் வாழ்ந்த மண் இந்த மாயூரம்.

மயிலாடுதுறை என்றால் அந்த நகர் மட்டும் அல்ல. அந்த நகர்தான் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரப் பகுதியாகும். அது கல்வி, வேலை, தொழில், வணிகம் என பல்வேறு வகையிலும் மக்களோடு மக்களுக்காக தொடர்புடைய நகரமாகும். ஆனால், இந்த மக்களுக்கு என்று முறையான பேருந்து வசதிகளோ, வந்து செல்வதற்கு உரிய சாலை வசதிகளோ கிடையாது. இதையெல்லாம் ஒரு கொடுமை, மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் முழுவதையும் அவர் செலவழிக்க வேண்டும். ஒரு யூனியன் பிரதேச மாநிலத்திற்க‌ உள்ளே சென்றுதான் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வழியாக) ஆட்சியரை சந்திக்க வேண்டும். இதுவே நாகப்பட்டினத்தின் கடைகோடியாக இருக்கும் கொள்ளிடம் கரையில் இருந்து ஒருவர் நாகப்பட்டினம் சென்று வந்தால், அவரது அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதிவிடலாம்.

கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறையின் வளர்ச்சிதான் மற்ற கிராமங்களின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது‌. அதனால்தான் என்னவோ, மயிலாடுதுறையை சுற்றியிருக்கும் கிராமங்கள் இன்னும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாத நிலையில் இருக்கிறது. அதனால்தான், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் காது கொடுத்து கேட்பார்தான் யாரும் இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் வேளையில் ஒரு அரசியல்வாதி கூட வாய்மொழியாக கூட மயிலாடுதுறைய‌ மாவட்டமாக மாற்றுகிறோம், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கிறோம் என்று கூறுவதற்கு மனம் வரவில்லை. ஏன் அண்மையில் ‘நமக்கு நாமே’ பயணம் மேற்கொண்ட தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், மயிலாதுறை பகுதிக்கும் வந்து சென்றார். ஆனால், ஒரு பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை பற்றி பேசாமலே கடந்து சென்றிருக்கிறார் என்றால், பின்னர் எதற்கு நமக்கு நாமே? இப்படியே தட்டிக் கழித்து தட்டிக் கழித்து மயிலாடுதுறை மக்களின் ‌உரிமைகளை, நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். இதனால், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற மக்கள் எல்லோரும் தற்போது, தன்னெழுச்சியாக ‘மாயூர யுத்தம்’ செய்து உரிமையை பெற்றிட உறுதியேற்றிருக்கிறார்கள்.

விழிப்புணர்வும், எழிச்சியும் வேண்டும்

மயிலாடுதுறைக்கு என்று என்னென்ன வேண்டும் என்பதை மக்கள்தான் உணர வேண்டும். மயிலாடுதுறை தனி மாவட்டம், ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற செய்தல், ஆன்மீக சுற்றுலா நகரமாக அறிவித்தல், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்தல், அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டச் சாலை பணிகளை விரைந்து முடித்தல், மயிலாடுதுறை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் (அப்போதுதான், ஷேல் எரிவாயு, மீத்தேன் வாயு எடுப்பதை தடுக்கலாம்), ரயில் நிலையத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், கம்பரின் புகழை ஓங்கச் செய்தல், மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் எழுப்புதல் என மயிலாடுதுறையின் தேவை அதிகம். இதையெல்லாம், மக்கள் உணர வேண்டும். எல்லாவற்றையும் நிறைவேற்ற அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் அழுத்தம் தர வேண்டும். ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தமட்டும் நமக்காகவும், நம் மண்ணுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். இதை உடனே செய்ய வேண்டும்.

 

இதற்கு தனித்த குரல் போதாது. அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி பேச வேண்டும். அப்போதுதான் நம் உரிமையை பெற முடியும். அவர் செய்வார், இவர் செய்வார் என்று இத்தனை காலம் மாறி மாறி வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்கள் நம் மண்ணுக்கும், நமது உரிமைக்கும் செய்தது என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை. எனவே நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை மயிலாடுதுறை மண்ணின் மைந்தர்கள் உணர வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்குமா?

அனைத்துக் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கனவே தொகுதிக்கு வலம் வந்துவிட்ட‌போன ஸ்டாலின், மயிலாடுதுறை பகுதி மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத நிலையில், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தமிழகத்தின் 33வது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவிப்போம் என்று வெளியிட வேண்டும். இதேபோல், அ.தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி, பா‌ம.க என அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை இடம் பெற செய்து, ஆட்சிக்கு வந்தவுடன் உடினடியாக செய்து தருகிறோம் என்று  உறுதியளிக்க வேண்டும். இதுதான் தற்போதையை நிலையில் மயிலாடுதுறை மக்கள் வைக்கும் உடனடி கோரிக்கை. ஊருக்கு நல்லது செய்வோமே!

 எனது இந்த கட்டுரை விகடன் இணையளத்திலும்  வெளிவந்தது
– ஜி.எஸ் பாலமுருகன் –