
மஹாராஷ்டிரா யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும்.
தேவையான பொருள்கள்:
சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.
உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில் அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும்.
கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.
இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.