Header Banner Advertisement

ஆழ்வார்கள் பன்னிருவர்: ஓர் அறிமுகம்


001

print

1. பொய்கையாழ்வார்

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும்

பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்.

 

அவதரித்த ஊர்:  திருவெஃகா (காஞ்சிபுரம்)

மாதம்:  ஐப்பசி

நட்சத்திரம்:  திருவோணம்

அம்சம்:  பாஞ்சஜன்யம் (சங்கு)

அருளிச் செய்த பிரபந்தம்:  முதல் திருவந்தாதி

 

***

2.  பூதத்தாழ்வார்

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்

வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை  – மண்ணியில் நீர்

தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்

ஓங்குமுறையூர் பாணனூர்.

.

அவதரித்த ஊர் : திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்: அவிட்டம்

அம்சம்: கதாயுதம்

அருளிச் செய்த பிரபந்தம்: இரண்டாம் திருவந்தாதி.

***

3.  பேயாழ்வார்

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்

என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து.

 

அவதரித்த ஊர்:  திருமயிலை (மயிலாப்பூர்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்:  சதயம்

அம்சம்: நந்தகம் (வாள்)

அருளிச் செய்த பிரபந்தம்: மூன்றாம் திருவந்தாதி.

***

4. திருமழிசையாழ்வார்

தையில் மகம் இன்று தாரணியீர்! ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்  – துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமழிசை

மாதம்: தை

நட்சத்திரம்: மகம்

அம்சம்: ஸ்ரீசக்ரம்

அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி,  திருச்சந்த விருத்தம்.

 ***

5.  நம்மாழ்வார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்  – சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

 

அவதரித்த ஊர்:  திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

மாதம்: வைகாசி

நட்சத்திரம்:  விசாகம்

அம்சம்:  சேனை முதலியார்

அருளிச் செய்த பிரபந்தங்கள்:   திருவிருத்தம்,  திருவாசிரியம்,  பெரிய திருவந்தாதி,  திருவாய்மொழி.

 ***

6.  மதுரகவியாழ்வார் :

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த

சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்

உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.

 

அவதரித்த ஊர்:  திருக்கோளூர்

மாதம்:  சித்திரை

நட்சத்திரம்:  சித்திரை

அம்சம்:  குமுத, வைநதேயம்

அருளிச் செய்த பிரபந்தம்:  கண்ணிநுண்சிறுத்தாம்பு.

***

7.  குலசேகராழ்வார்

மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்

தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில்  – பேசுகின்றேன்

கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்

நல்லவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருவஞ்சிக்களம்

மாதம்:  மாசி

நட்சத்திரம்:  புனர்ப்பூசம்

அம்சம்: கௌஸ்துபம்

அருளிச் செய்த பிரபந்தம்: பெருமாள் திருமொழி.

***

8.  பெரியாழ்வார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !

இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன்  – நன்றிபுனை

பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த

நல் ஆனியில் சோதி நாள்.

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆனி

நட்சத்திரம்: சுவாதி

அம்சம்: கருடன்

அருளிச் செய்த பிரபந்தம்:  பெரியாழ்வார் திருமொழி.

***

9. ஆண்டாள்

இன்றோ திருவாடிப் பூரம்  எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத

வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆடி

நட்சத்திரம்: பூரம்

அம்சம்: பூதேவி

அருளிச் செய்த பிரபந்தங்கள் :  திருப்பாவை,  நாச்சியார் திருமொழி.

***

 10.  தொண்டரடிப்பொடியாழ்வார்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமண்டங்குடி

மாதம்:  மார்கழி

நட்சத்திரம்:  கேட்டை

அம்சம்:  வநமாலா.

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.

***

11.  திருப்பாணாழ்வார்

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால்  – ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  உறையூர்

மாதம்:  கார்த்திகை

நட்சத்திரம்:  ரோஹிணி

அம்சம்:  ஸ்ரீவத்ஸம்

அருளிச் செய்த பிரபந்தம்:  அமலனாதிபிரான்.

***

12. திருமங்கையாழ்வார்

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் – ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.

 

அவதரித்த ஊர்:  திருவாலி திருநகரி

மாதம்: கார்த்திகை

நட்சத்திரம்: கார்த்திகை

அம்சம்: சாரங்கம் (வில்)

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,  சிறிய திருமடல்,  பெரிய திருமடல்,  திருவெழுகூற்றிருக்கை.

***

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?

அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்

பேதை மனமே ! உண்டோ பேசு.

.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.