இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.
ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.
உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு.
ஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது.
2008 தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு.
இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.