
தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990-களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் என்ற நாடுகள் தேசிய இன விடுதலைக்குச் சான்றாய் நின்றன.இன்றும் நடைபெறுகிற காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழம் போன்ற இவற்றுக்குள் கூர்மை பெற்று முன்னணியில் இருக்கும் போராட்டம் ஈழப் போராட்டம்.
கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948-இனஅழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது.,
நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அறவழிப் பாதையில் இருக்கிறபோது உலகில் யாரும் கவனம் கொள்வதில்லை ஆயுதப் போராட்ட வடிவெடுக் கையில் மாத்திரமே சர்வதேச கவனமும் தலையீடும் பெறுகிறது.
![]() |
பிரான்சிஸ் பாய்ல் |
1972-லும் அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.
“இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவிட்டு, அதனைக் கையாளுவதே இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது. எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் பிரச்சனைகளை தனது நலனுக்கு உகந்த அளவில் ஓரளவு தீர்த்து வைப்பதும், தனது தலைமையை இலங்கை அரசை ஏற்க வைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.
ஆனால் விடுதலை பெற்றதும்,பிடல் காஸ்ட்ரோ வின் தொடக்க கால கியூபா, போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்கு பொருளாதார ஆயுத,மருத்துவ உதவிகள் செய்து துணை நின்றது.
அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009-ல் ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைக்கு ஆதவராய் தீர்மானத்தை முன்மொழிந்த கியூபாவுக்கும் இடையிலான வெளி 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இனக் கொலைக்குத் துணை போன தலைகீழ் மாற்றமும்தான்.
’’இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவமுள்ள பிரச்சினைகள் பற்றி ஐ.நா.அவையில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி 1983 படுகொலை பற்றிப் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என்று கருதினார் போல.
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பது போல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்ததும், அதிலிருந்து இலங்கையை நீக்கம் செய்வதற்காக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் உள்நாட்டு நெருக்கடி களைத் தோற்றுவிப்பதற்காக போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதங் களும் அளித்தது இந்தியா.
இலங்கை அரசு இனவாதத்தை சாக்காகக் கொண்டு 1970-களில் மேலைத் தேசங்களுடன் கை கோர்த்து இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக்கியே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசு ஆக உருவாகிக் கொண்டிருந்த இந்தியா தனது நோக்குநிலையிலிருந்து தீர்வுக்கு வர வேண்டியிருந்தது.
முரண்பாடுகள் இராணுவப் பரிமாணத்தினாலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக முறுகல்நிலை கொண்டன. பலாத்காரத்தைத் தவிர வேறு வழியில் தீர்க்க முடியாதெனக் கருதி, முன்னர் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987-ல் இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்கா முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாரில்லை.
’’இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற வார்த்தைதளில் வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கைப் பிரச்சினையில் குறைந்தபட்ச உடன்பாட்டுக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடி.கைக்குப் பின் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே இடம் பெற்ற ஒப்பந்தமானது, கைவிலங்கு உடைக்கப் புறப்பட்டவர்களுக்குக் கால் விலங்கும் மாட்டிய கதையாக ஆனதாக தமிழர்களால் சொல்லப்பட்டது.
பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம் வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டது. தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே என இதனை பிரபாகரன் வலியுறுத்தினார்.
அப்போது பிரபாகரகன் பக்கமாக நெருங்கி வந்து ராஜிவ் காந்தி காதோடு காது வைத்ததுபோல்“ இலங்கையின் சிங்கள தீவிர வாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்துவதற்குத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக் கிறது. ஆனால் நிரந்தர இணைப்புத்தான்’’ என்று கூறினார்.
ராஜிவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதி களுக்கும், போராளிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தார்கள். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜிவ் பின்னாளில் இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை.
“மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயர்தான் கொடுக்க முடியும் என்று பிரபாககரன் மறுப்புத் தெரிவித்தார்.“ மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவு செய்வோம்’’ என தீட்சித் உறுதியளிக்க புலிகள் அவ்வாறே செய்தார்கள்
முதலாவது பெயராக கிழக்கு மாகாண மட்டக்களப்பைச் சேர்ந்த, அரசின் உயர்நிலை அதிகாரியாக இருந்த பத்மநாதன், மூன்றாவதாக யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர்கள் குறித்துத் தரப்பட்டன. மூன்றாவதாக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானத்தையே ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல்வராக இராஜதந்திரமாகத் தேர்வு செய்தார். கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்படுத்த ஜே.ஆர்.செய்த திருவினையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இப்படியான நிகழ்வுகள் இந்தியா மீதான நம்பிக்கையின்மையை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தியது. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்று உணர்ந்தே இருந்தனர்.
பிரச்னை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துக்களில் கூறப்பட்டதற்கு மாறாக ஜே.ஆர்.செய்துகொண்டு வந்த எல்லாவற்றையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தூதர் தீட்சித்., “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தெரிவித்தார்’’
Sunday Leader:Sep 4 1994
Tamil hopes not met.
Dixit blames the singalese for breaking of India Lanka accord.
இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தானவும், இராஜ பக்ஷேக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிடவேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இதுபோன்ற நம்பிக்கைத் துரோகங்களின் வரிசையான அடுக்கின் முடிவில் தான் “இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணம் செய்த குரங்கின் கதியாகி விடும்’’ என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இது இந்தியா பற்றிய அவருடைய, போராளிகளினுடைய கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ராஜிவைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் கால்வாசியை நண்பர்களாய் கருதப்பட்ட தமிழர்கள் மீது இந்தியா காட்டத் தயாராயில்லை.
இறுதியாய் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழிப்பதன் மூலம், சிங்களரின் நேசத்துக்குரியோராய் மாறிவிடலாம் என்று நினைத்தார்கள் போல. இப்போதும் தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியயெமன்பதும், ஈழத்தமிழர் வாழும் புவிப் பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து இந்தியத் தலைமைகள் நடப்பதாக இல்லை.
இலங்கைக்குச் சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரி நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்காது, தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று மறுத்த ஒரு கன்னடர். அப்போதைய கன்னட முதலவர். அதனால் இராசபக்ஷே அமைத்த இலங்கை அரசுக்குச் சாதகமான `கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்க விசாரணைக் குழுவின்`அறிக்கையை எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்கிறார்.
யதீந்திரா குறிப்பிடுவது போல் இந்திய சரணாகதி அரசியல் அல்ல தீர்வு.இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் வேறு வழியில்லை. ஆனால் இந்தியாவை எதிர்கொள்ள ஈழப்பிரதேசத்துக்குள்ளேயே ஒரு ஐக்கிய முன்னனி அமைத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதை புலிகள் உணரவில்லை.
இலங்கை இனவெறி அரசை எதிர்கொள்ள முதலில் இந்த முக்கிய முன்னனி தந்திரத்தை புலிகள் கையிலெடுத்திருக்க வேண்டும். புலிகள் இதில் அக்கறை செலுத்தவில்லை. தாமே ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயற்பட்டதால் எதிரிக்கு பிரித்தாளும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.
தேசப்பற்று என்று ஏற்றப்பட்டிருக்கிற மக்களின் உளவியலை இந்தியா தனக்கு நிரந்தரப் பிரிகோடாய் மாற்றிவிட்டது. ஆனால் ராஜிவ் கொலை தொடர்பான விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மு.புஷ்பராஜன்
“உண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அழுத்தம் கொடுத்தது. ராஜிவ் காந்தி கொலை,விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தானாக மடியில் விழுந்த கனி. அக்கொலை நடைபெற்றிருக்காவிடினும் இந்தியா அவர்களை அழித்தே இருக்கும்; வேறு காரணங்களைத்தேடியிருக்கும் (மு.புஷ்பராசன் வாழ்புலம் இழந்த துயர்) இந்த பின்புலத்தை ஏற்றுக்கொள்வதில் யதீந்திரா இடறுகிறார். மாறாக வேறொரு எதிர் இடத்துக்கு.
இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விடுதலைப் புலிகள் புரிந்து வைத்திருந்தார்கள். போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது, பின்னர் திம்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் போனது, அரட்டி,மிரட்டி விடுதலைப் புலிகளையும் ஒப்புக் கொள்ள வைத்து, 1987-ல் ஈழத்தின் மீது இந்தியப் படையெடுப்பு வரை இந்தியா எந்த இடத்தை தகவமைப்பதற்கான முயற்சியிலிருக்கிறது போன்ற தெளிவுகளை அரசியல் ஆய்வாளர்களும் எடுத்துத் தந்திருந்தார்கள்.
யுத்தநிறுத்த உடன்பாடானது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கே நன்மையளித்தது என நார்வே அறிக்கை விவரிப்பது உண்மைக்குப் புறம்பானது. ஆனால் `அறிக்கை விபரித்திருக்கும் மேற்படி விசயங்கள் அனைத்தும் பொதுவாக ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மைகள் நார்வே இயலாமை, கையாலாகத்தனம் என்பவைகளை மறைத்துச் சொல்லப்பட்டதாக இருக்கிறது என்பது தான் உண்மை. “
இலங்கை தனது இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க விடுதலைப் புலிகள் இயல்பான வாழ் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மிகக் குறைந்த போராளிகளே இருந்தனர். அங்கங்கே நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டிருந்த போராளிகள் தவிர களத்தில் நிற்பவர்கள் குறைவானவர்களே. விடுதலைப்புலிகள் மக்களுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தாலும் அது போதுமானவையாக இல்லை.
வெகுமக்கள் திரள் நடவடிக்கைகளாக உருக்கொள்ளவில்லை. தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கும் தமது எல்லைகளுக்கு அப்பாலுமுள்ள மக்களுக்குமான ஜனநாயக வெளியாக மாற்றித் தரப்படவில்லை.
2011 செப்டம்பர் 11, உலக வரலாற்று அரங்கில் ஒரு மோசமான நாள்.அது எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க புஷ் தனது அரசியல் இருப்புக்காக நடத்திய நிகழ்வுதான் செப்டம்பர் 11 என்றாலும் அது வெற்றிகரமான அரசியல் நாடகமாகவே நடந்தது. பயங்கரவாதம் என்ற அளவுகோலைக் கையிலெடுத்து ஊடகங்களையும் இராணுவ வல்லமையையும் தன் கையில் கொண்டுள்ள அமெரிக்கா வழியில் உலக நாடுகள் நடந்தன.
பயங்கரவாத ஒழிப்பு என்ற முழக்கத்தினடியாக உலகை வேறொரு திசையில் வல்லரசுகள் நகர்த்திக் கொண்டிருந்த , மாறிய சூழலை விடுதலைப் புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. கணக்கில் கொண்டிருப்பார்களோயனால் இராணுவ வல்லமையைக் பெருக்குவதற்காக கடைசிவரை காத்திருந்து மோசம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
நார்வேயின் சமாதான முன்னெடுப்பு பற்றி (1997-2009 வரை) அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் சமாதான முன்னெடுப்பு என்பது முதலில் நார்வேயின் முயற்சி அல்ல. அதை முன்தள்ளுவதில் அமெரிக்கா போன்ற மேற்குலகம், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற ஆசிய உலகம் அவரவர் விருப்ப அடிப்படையில் பங்காற்றியுள்ளனர். ஈழத்தில் சர்வதேச சுற்றிவளைப்பு என இதைக்குறிப்பிடலாம்.
அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துக்களில் முக்கியமான ஒன்று தமிழர் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இலங்கையின் ராணுவ அகற்றல்களும், தமிழர் மீள்குடியேற்றங்களையும் பற்றியது. இவைபற்றி பலமுறை ஆதாரங்களுடன் அளித்தும் நார்வேயின் நடவடிக்கை எதுவும் இல்லை. நார்வே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதற்கு எதிர்மாறாகவே நிகழ்வுகள் இருந்தன.
2002 சனவரியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. 2002 அக்டோர் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். முடிந்து திரும்புகையில் கிளிநொச்சியில் பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடகியிருந்தது. அச்சந்திப்பின்போது அவரிடம் கேட்டோம்.
“நாங்கள் நார்வேயை நம்பவில்லை. அமெரிக்காவின் குரூர முகம் இஸ்ரேல் , அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே .இதை நாங்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம்.’’
அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நார்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தி யதீந்திராவுக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய செய்திதான். ஆனால் நார்வே அறிக்கையை நடுநிலையான எந்தச் சார்புமற்ற ஒன்று என யதீந்திரா கருதினார், நாம் செய்ய ஒன்றுமில்லை. ஒவ்வொரு அறிக்கையின் நோக்கமும், சாராம்சத்தில் வெளிப்படும் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே அமைகிறது
ஐ.நா.விசாரணைக் குழுவின் அறிக்கை போன்றது அல்ல நார்வே அறிக்கை. ஐ.நா அறிக்கை இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தாலும் இன்னும் அழிந்தொழிந்து போகாமல் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிற இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறும் கடமை உண்டென அந்த அறிக்கை சுட்டுகிறது.
நார்வே அறிக்கையால் வழி நடத்தப்படுகிற யதீந்திரா போன்றவர்கள் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நார்வே அறிக்கையை அவதானி க்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இந்தியா புலிகளை அழித்ததா என்பதல்ல உண்மை. அது ஈழத்தின் மக்களை அழித்தது என்பது உண்மை.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாமற் செய்ய வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையினையும் பொது மக்களையும் வெளியேற்றுவதற்கு வழி செய்து விடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளி வாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை’’
அவ்வாற சுமத்த முயன்ற டில்லியின் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபய கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவினைக் கையிலெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார். இது டில்லியின் வாயை அடைத்தது (3.1. 2010 – Ground report: V.S.Subramaniam)
இந்தியா இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்கா அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக்காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு. ஒன்றே போல்வனஅல்ல என்பதை மட்டும் குறித்துக் கொள்ளுதல் நல்லது. அதேபோல் மற்றொன்றையும் குறித்துக் கொள்வோம். மூன்று தமிழரின் கடமையும் இந்திய சரணாகதி அரசியல் அல்ல.