Header Banner Advertisement

இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே மனிதர்


Untitled

print
சுடோமு யாமகுச்சி
ந்த உலகம் தோன்றிய காலங்களில் இருந்து இன்று வரை இரண்டே இரண்டு அணுகுண்டுகள்தான் உலகில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அந்த இரண்டு அணுகுண்டும் வீசப்பட்ட இடம் ஜப்பான். அந்த இரண்டையும் தாங்கிக்கொண்ட நாடும் ஜப்பான் தான். அந்த நாட்டைப் போலவே இந்த இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரு நபர் இருக்கிறார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி.

1916-ல் பிறந்த இவர். நாகசாகி நகரில் உள்ள ‘மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப்பார்த்து வந்தார். 1945-ம் ஆண்டு அந்த நிறுவனம் ஹிரோஷிமாவில் இருக்கும் தனது துணை நிறுவன வேலை விஷயமாக யாமகுச்சியை அங்கு அனுப்பிவைத்தது.

அணுகுண்டு வீச்சுக்கு முன்பு யாமகுச்சி
ஹிரோஷிமோ சென்ற யாமகுச்சி அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தனது சொந்த ஊரான நாகசாகிக்கு திரும்ப தயாரானார். தன்னுடன் பணியாற்றும் அகிரா இவனாகா, குனியோஷி சடோ ஆகிய இருவருடன் புறப்பட்டார்.

வெகுதூரம் நடந்து வந்தபின் தான் தனது பயணச்சீட்டை அந்த நிறுவனத்திலேயே வைத்துவிட்டது நினைவுக்கு வந்தது. உடனே நினைவுக்கு வர யாமகுச்சி மட்டும் தனது பணியிடம் வந்து, பயணசீட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

அப்போது காலை 8.15 மணி.

ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க போர் விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற உலகின் முதல் அணுகுண்டை வீசியது. அந்த இடத்திற்கும் யாமகுச்சி இருந்த இடத்திற்கும் 3 கி.மீ. தொலைவு இருந்தது. இருந்தபோதும் அணுகுண்டு ஏற்படுத்திய இடிபோன்ற சத்தம் அவரின் இடது காது ஜவ்வை கிழித்து விட்டது. ரத்தமாக கொட்டியது. தற்காலிக பார்வை இழப்பும் ஏற்பட்டது. அதோடு உடலின் இடது பக்கம் தீப்பிடித்து எரிந்தது. உடனே உணர்விழந்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது நடந்தது 1945 ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி.

இரண்டு நாள் சிகிச்சை எடுத்துக்கொண்ட யாமகுச்சி உடல் கொஞ்சம் தேறியது. மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் இருந்ததாலும், யாமகுச்சியை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தாலும், அவரை அவரது சொந்த ஊரான நாகசாகிக்கு மருத்துவர்கள் மாற்றினார்கள்.

மறுநாள் காலை 11 மணி.

அவர் தனது மேலதிகாரியிடம் ஹிரோஷிமா குண்டுவீச்சில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க போர் விமானம் ‘பேட் மேன்’ என்ற இரண்டாவது அணுகுண்டை வீசியது. இதுவும் யாமகுச்சி இருந்த இடத்தில் இருந்து சரியாய் 3 கி.மீ. தொலைவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை எந்தவித காயமும் இல்லாமல் யாமகுச்சி தப்பிவிட்டார். ஆனால் அந்த கொடுமையான சத்தம் அவர் காதை மீண்டும் பதம் பார்த்து, அவரை ஒரு வாரத்திற்கு காய்ச்சலில் படுக்க வைத்துவிட்டது.

நெருப்பு வடுக்கள்
இப்படி உலகிலே இரண்டு அணுகுண்டு வெடிப்பிலும் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரே துரதிர்ஷ்டசாலி மனிதர் இவர் ஒருவர்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானிய அரசு‘இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர்’ என்று இவரை கவுரவித்தது. அதன்பின் நாடு முழுவதும் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தன.

2010, ஜனவரி 4-ல் தனது 93-வது வயதில் கிட்னி மற்றும் வயிற்றுப் புற்றுநோயால் யாமகுச்சி மரணமடைந்தார். உண்மையில் இரண்டு அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்த ஆச்சரியமான மனிதர்தான் சுடோமு யாமகுச்சி.