
ராஜபுத்திரர்கள் என்றால் அரச மைந்தர்கள்,ஆட்சி புரிய தக்கவர்கள் என்ற அர்த்தங்கள் உண்டு. அன்றைய வர்ணங்களாக நிலவிய பிராமணர், சத்திரியர், வைசியர்,சூத்தரர் என்ற நான்கு வர்ணங்களில் தங்களை சத்திரியர்கள் என்று ராஜபுத்திரர்கள் கருதினர். சத்திரியர்களுக்கு நாட்டை ஆள்வதும், போரை வழிநடத்துவதும்தான் முக்கிய வேலை. அதனால்தான் ராஜபுத்திரர்கள் போரில் மிகச்சிறந்தவர்களாக விளங்கினார்கள்.
கன்னோஜி மன்னன் பிரதிஹாரர் மற்றும் கஹடபாலர், புந்தேல்கண்ட் மன்னன் சந்தேலா, மால்வா மன்னன் பரமாரர், தில்லி அஜ்மீர் மன்னன் சவுஹான்கள், வங்காளத்தில் பாலர் மற்றும் சேனர் என்ற இவர்கள் அனைவருமே ராஜபுத்திர வம்சத்தினர்தான். இவர்களுக்கு இடையே அதிகாரப்போட்டி இருந்தது. இந்த ஒற்றுமையின்மை காரணமாக முஸ்லிம்கள் படையெடுப்பின்போது அவர்களால் எதிர்த்து நின்று போராட முடியவில்லை.
ராஜபுத்திர பெண்கள் தங்களது கணவனை சுயம்வரம் மூலமாக தேர்ந்தெடுத்தார்கள்.கணவனை கண்கண்ட தெய்வமாக நினைத்தார்கள். கணவன் இறந்தால் மனைவி, ‘சதி’ எனும் உடன்கட்டை ஏற வேண்டும். போரில் தோல்வியடைந்தால் ராஜபுத்திர பெண்கள் எதிரிகளின் கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக பெரிய அளவில் நெருப்பு வேள்வியை ஏற்படுத்தி அதில் அக்னிபிரவேசம் செய்து உயிரை விட்டுவிடுவார்கள். இதற்கு’ஜவுகர்’ என்றும் பெயர். இதனை பெருமையான ஒரு அம்சமாக ராஜபுத்திர பெண்கள் நினைத்தனர்.
உடன்கட்டை ஏறுதல் என்பது ராஜபுத்திரர்கள் போன்ற சில இனங்களிலேயே இருந்தன. ஆங்கிலேயர் சொல்வதுபோல் இந்தியப் பெண்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்கள் என்பது தவறு. தமிழர்களிடம் அந்த பழக்கம் இல்லை. எதிரிகளிடம் சிக்கி சீரழிவதை விட போரில் இறந்த கணவனுடன் சேர்ந்து மாய்ந்து போவது சிறந்ததாக அன்றைய பெண்களுக்கு பட்டிருக்கிறது. அதனால் அதை செய்திருக்கிறார்கள்.
ராஜபுத்திரர்கள் காலத்தில்தான் மத்திய பிரதேசத்தில் கஜூராஹோ கோவிலும், ராஜஸ்தானில் உள்ள மலையடிவார கோவில்களும், ஒரிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயமும், கோனார்க்கில் உள்ள சூரியனார் கோவிலும் உருவாயின. மால்வா, ராஜஸ்தான், மத்திய இந்தியா போன்ற இடங்களில் இன்னமும் ராஜபுத்திரர்கள் கட்டிய பிரமாண்டமான கோட்டைகளின் சிதிலங்களை பார்த்து நாம் பரவசப்படலாம்.