Header Banner Advertisement

உலகின் குப்பைத் தொட்டி இந்தியா


www.villangaseithi.com

print
லகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த உலக வர்த்தக மையம் அழிவுக்கு பின் அந்தக் கட்டக்குப்பைகள் நச்சுக் கழிவுகள் எல்லாம் பிரொஸ்னா, ஷென் குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு வந்தன.

இந்தக் குப்பையில் அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின், பாலி குளோரினேடட் பைபினல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன. இவைகள் எல்லாம் கடும் நச்சுத்தன்மை கொண்டவை. இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்ற நிலையில் கட்டடக் கழிவு இரும்புடன் சேர்த்து மற்ற கழிவுகளும் இந்தியாவிற்குள் வந்துவிட்டன. இப்படி இன்னும் பல குப்பைகளை இந்தியா வாங்கிக்கொண்டே இருக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதுதான். தங்கள் நாடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்தக் கழிவுகளை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றன. அதுவும், ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகள் கணினி கற்றுக்கொள்வதற்கு கொடையாக தருகிறோம் என்ற பெயரில் அனுப்பி வைக்கின்றன.

மின்னணுக் கழிவை அப்படியே குப்பையில் போட்டுவிட முடியாது. அதிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கியப் பின்தான் குப்பையில் போட முடியும். இந்த நச்சை நீக்குவதற்கு நிறைய செலவாகும். அதற்குப் பதில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்தப் பொருட்களை அனுப்பிவைக்க வெறும் பத்து சதவீத செலவு மட்டுமே ஆகும். மீதி 90 சதவீதம் அவர்களுக்கு லாபம். அதனால், எல்லா குப்பைகளையும் நமக்கு தள்ளி விட்டுவிடுகிறார்கள்.

இந்திய தொழிலதிபர்களும் இந்த மின்னணுக் கழிவை ஒரு டன் 20 ஆயிரம் என்ற விலைக் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த ஒரு டன் குப்பையில் 10 கிராம் தங்கம், 30 முதல் 40 கிலோ செம்பு, அலுமினியம், கொஞ்சம் வெள்ளி, சில நேரங்களில் பிளாட்டினம் ஆகியவையும் கிடைக்கிறது. இதனால் ஒரு டன் குப்பையில் 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது. இதனால் பெருமளவில் வெளிநாட்டுக் குப்பைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தக் குப்பைகள் சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உடனடி பாதிப்பாக இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்களுக்கு நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காச நோய் போன்றவை அவர்களை தாக்குகின்றன. வருடத்திற்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் இந்தியாவிற்கு மற்ற நாடுகள் குப்பையாக அனுப்பி வைக்கின்றன. இந்தியா அந்தக் குப்பைகளை பெரும் விலைக் கொடுத்து வாங்குகின்றன என்பதே உண்மை.!