
print
![]() |
உலகின் மிகப் பெரிய ஆலமரம் |
ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் ‘பானியன்’ என்று பெயர். முன்னொரு காலத்தில் ‘பனியர்’ என்ற இந்து வியாபாரிகள் சிலர் பாரசீக வளைகுடாவில் ‘பர்தர் அப்பாஸ்’ என்ற துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஆலமரத்தின் அடியில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்கள். இதனால் ஆலமரத்திற்கு அந்த பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
கொல்கத்தா ஹவுராவில் உள்ள ஆச்சார்ய ஜெகதீஷ் சந்திரா போஸ் தாவரவியல் தோட்டத்தில் இருக்கும் ஆலமரம் தான் உலகத்திலேயே மிகப் பெரியது. 1782-ல் ஓர் ஈச்ச மரத்தின் மேல் விழுந்த விதையில் இருந்து இந்த மரம் முளைத்துள்ளது. பிறகு அது வளர்ந்து பிரமாண்டமான மரமாக வடிவம் எடுத்தது.
இதன் குறுக்களவு கிழக்கு மேற்காக 91 மீட்டர், அதாவது சுமார் 300 அடி நீளம் கொண்டது. வடக்கு தெற்காக 87 மீட்டர். அதாவது 285 அடி அகலம் கொண்டது. மேலே உள்ள தலைப் பகுதியின் சுற்றளவு 285 மீட்டர் ஆகும். அதாவது 935 அடி. வேரூன்றிய விழுதுகள் மட்டும் 2,880, மரம் அமைந்திருக்கும் மொத்த நிலப்பரப்பு 4 ஏக்கர். அதாவது 18,918 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. மரத்தின் உயரம் 25 மீட்டர். இந்த மரம் 1864 மற்றும் 1867 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வீசிய கொடூர புயல்களையும் தங்கி நின்றது. இந்த மரத்தின் கீழ் 7 ஆயிரம் பேர் தாராளமாக அமர்ந்து இளைப்பாறலாம்.
இந்த மரத்திற்கு முன்பு மகரஷ்டிரவிலுள்ள சதாரா மாவட்டத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அது கிழக்கு மேற்கில் 134 மீட்டராகவும், வடக்கு தெற்கில் 180 மீட்டராகவும் இருந்தது. இதன் மேல் பகுதி சுற்றளவு 481 மீட்டர் இருந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய மரமாக இருக்கும் கொல்கத்தா மரத்தைவிட அளவில் பெரியது. ஆனால், ஒரு புயல் தாக்கியதில் மரம் பெரும் சேதம் அடைந்தது. தற்போது அந்த மரம் உயிர்ப்போடு இல்லாததால் இரண்டாம் இடத்தில் இருந்த இந்த மரம் முதலிடத்தை பிடித்துக் கொண்டது.
பொதுவாக ஆலமரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். கிளையில் இருந்து விழுதுகள் எனும் ஒட்டு வேர்கள் உண்டாகும். இவை மேலிருந்து கீழாக நீண்டு வளரும். அவை நிலத்தை தொட்டதும், நிலத்துள் ஊடுருவிச் சென்று சாதாரண வேர்களைப் போலவே நீர் முதலிய உணவுப் பொருள்களை உறிஞ்சி வளர்ந்து கொண்டே செல்லும். ஒரு ஆலமரத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுகள் இருப்பதுண்டு.
ஆலமரம் அத்தி, மல்பெர்ரி ஆகிய மரங்களின் இனத்தைச் சேர்ந்தது. இது பனை போன்று வேறு இன மரங்களின் மீதோ அல்லது கட்டடங்கள் மீதோ விதை விழுந்து முளைக்கும். இதனால் கட்டிடமே இடிந்து விழும் நிலையும் ஏற்படும். இப்படி முளைக்கும் ஆலங்கன்றின் வேர்கள் அவை வளர்ந்த மரத்தைப் பற்றிக் கொண்டு பூமியை நோக்கி வேர்விடும். வேர் நிலத்தில் ஊன்றியவுடன் நன்கு வளர ஆரம்பிக்கும். அது வளர வளர ஆதாரச் செடி பட்டுப் போய் விழுதுகள் வலுப்படும். மரமும் பிரமாண்டமாய் வளரும்.
இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் உள்ளது. சென்னை அடையாறில் 450 வருடங்களை கடந்த மிகப் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இது உலகின் மிகப் பெரிய ஆலமரம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
பொதுவாகவே ஆலமரம் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலைகள் சளித் தொந்தரவை நீக்கக்கூடியது. பட்டைகள் உடலுக்குள் உருவாகும் புண் போன்ற காயங்களை சரியாக்கக்கூடியது. ஆலமரத்தில் இருந்து வழியும் பால் வாய்ப்புண்ணை குணமாக்கக் கூடியது. ஆலமரத்தின் பட்டைகள் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். விந்துவை கெட்டிப்படுத்தும்.
இத்தகைய மருத்துவ குணங்கள் இருப்பதால் பல கோயில்களில் ஸ்தல விருட்சமாகவும் ஆலமரங்கள் உள்ளன. .