
சம்பந்தமே இல்லாமல் குற்றவாளி கூண்டில் ஏறி, தண்டனை பெறும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தனது அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார் ஜோசப். சராசரி வருமானம் கொண்ட குடும்பம். தனது குடும்பத்தில் ஏற்படும் திடீர் பணநெருக்கடியை சமாளிக்க அவ்வப்போது கந்துவட்டிக்கர்களிடம் கடன் வாங்குவது அவரது வழக்கம்.
அடியாட்கள் வீட்டுவாசலில் நின்று கொண்டு திமிராக பேசினார்கள். ஜோசப்பை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் மனைவியையும் தவறாக பேசினார்கள். மனைவியின் நடத்தையை விமர்சித்தார்கள். ஜோசப்பும் பொறுத்து பொறுத்துப் பார்த்தார். வாய்ச்சண்டை கைகலப்பாக .மாறியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜோசப் ஒரு உருட்டுக்கட்டையை எடுத்த அடியாட்களை அடிக்கத் தொடங்கினார். உக்கிரமான அந்த அடியை தாங்கமுடியாமல் அடியாட்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடத்தொடங்கினார்கள். ஜோசப்பும் விடாமல் வீதியில் ஓட ஓட அடியாட்களை அடித்து விரட்டினர்.
இந்த விஷயம் விபரீதமானது. ஏனென்றால் அடியாட்களை கந்துவட்டிக்காரனுக்காக அனுப்பி வைத்தவன் பார்போஸா என்ற ரவுடி. இவன் கொலை செய்வதில் கில்லாடி. 30-க்கும் மேற்பட்ட கொலைகளை அசால்டாக செய்தவன். தனது அடியாட்களை ஜோசப் அடித்து அனுப்பியது அந்த ரவுடி மனதில் வஞ்சகமாக வளர்ந்தது. உடனே ஜோசப்புக்கு பார்போஸா ஒரு கடிதம் எழுதினான். அதில் ‘சரியான நேரத்தில் உனக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது’ என்று மட்டும் எழுதி அனுப்பியிருந்தான். அப்போது அந்தக் கடிதத்தின் அர்த்தம் ஜோசப்புக்கு புரியவில்லை.
சில வருடங்கள் கழித்து, அதாவது 1965-ல் எட்வார்ட் டீக்கன் என்பவரை ஒரு மாபியா கும்பல் சுட்டுத் தள்ளியது. இந்த வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்துக்குப் போனான் பார்போஸா. நீதிமன்றத்தில் இந்தக் கொலையை செய்தது ஜோசப்தான் என்று கூறினான்.
30 வருடங்கள் சிறையிலேயே கடந்தது. ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை. கடைசியில் திடீரென்று விடுதலை செய்தனர். அதற்கு காரணம் ஜோசப் சிறைக்குள் இருந்தபடியே தனது வழக்கறிஞர் மூலம் திரட்டிய ஆதாரம்தான். ஜோசப்பின் வக்கீல் முதல் தகவல் அறிக்கையை யதேச்சையாக புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு ஆதாரம் கிடைத்தது. முதலில் தயாரிக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் ஜோசப் பெயர் இல்லை. இரண்டாவதாக உருவாக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் வலுக்கட்டாயமாக அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதுதான் ஜோசப் விடுதலையாக காரணமாக இருந்தது.