
பெண்ணின் பிரசவம் என்றாலும் சரி, அவளின் அந்தரங்கப் பிரச்சனை என்றாலும் சரி, அதை ஆண் டாக்டர்கள்தான் பார்த்தாக வேண்டும். இதனால் கூச்ச சுபாவம் உள்ள பெண்கள் நோய்களுக்காக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வந்தார்கள்.
அப்போது அமெரிக்காவில் எலிசபெத் பிளாக்வெல் என்ற சிறுமி பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். அவள் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு உதவுவாள். அப்போது ஒரு பெண் ‘உன்னைப் போல் ஒரு பெண் டாக்டராக இருந்தால் என்னைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும்’ என்று கூறினார். அந்தப் பெண்ணின் கூற்றுதான் எலிசபெத்துக்கு டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
1821 பிப்ரவரி 3-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்த எலிசபெத், தனது 11-வது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். டாக்டர் படிப்புக்காக ஒவ்வொரு மெடிக்கல் காலேஜாக ஏறி இறங்கினார். எந்த காலேஜும் இவருக்கு இடம் தரவில்லை. கடைசியாக ஜெனிவாவில் உள்ள ஒரு சாதாரண மெடிக்கல் காலேஜ் போனால் போகட்டும் என்று இடம் தந்தது.
கல்லூரியில் சேர்ந்தபின் மாணவர்களின் கேலி பேச்சு தாங்க முடியவில்லை. விடுதியில் தங்கி படிக்க யாரும் உதவவில்லை. பல தொந்தரவுகளைத் தாங்கிக் கொண்டு ஆண்கள் மத்தியில் ஒற்றை மாணவியாக படித்து 1849 ஜனவரி 23-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
![]() |
கல்லூரி மாணவியாக எலிசபெத் |
ஃப்ரான்ஸில் மட்டுமே அதற்கான கல்லூரிகள் இருந்தன. எலிசபெத் ஃப்ரான்ஸ் புறப்பட்டார். பாரிஸ் நகரில் அவரை மருத்துவ கருத்தரங்கில் கூட நுழையவிடவில்லை. ‘நீ மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்றால், நர்ஸாக வேலை செய். அதற்கு எதற்கு டாக்டர் பட்டம் உனக்கு..?’ என்று மனம் நோக பேசினார்கள்.
எதற்கும் எலிசபெத் மனம் கலங்கவில்லை. டாக்டருக்கு படித்த அவர் ‘செயிண்ட் பார்தோலோமங்ஸ்’ மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்தார். அப்போது நோய்களைப் பற்றி மக்களிடம் இருந்த அறியாமையைப் போக்குவதற்கு சொற்பொழிவு நடத்தினார். இது அமெரிக்கா முழுவதும் புகழ் பெற்றது.
எட்டு வருட நர்ஸ் வேலைக்குப் பின் 1857-ல் டாக்டராக வேலை கிடைத்தது. சில ஆண்டுகள் கழித்து பெண்களுக்காக தனி மருத்துவமனையைத் தொடங்கினார்.
அதற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் நன்கொடைகளும் குவிந்தன. எலிசபெத் பிறந்த நாடான இங்கிலாந்தில் மருத்துவமனை அமைக்க அந்த அரசு அனுமதி தந்தது. 1865-ல் இங்கிலாந்து அரசால் முதன் முதலாக ‘பெண் டாக்டர்’ என்ற அங்கீகாரம் தரப்பட்டது.
![]() |
டாக்டராக எலிசபெத் |
உலகின் முதல் பெண் டாக்டரான எலிசபெத் பிளாக்வெல் பல போராட்டங்களுக்குப் பின் டாக்டரானதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கென்று தனி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ஆரம்பித்தது மிகப் பெரிய சாதனைதான்!