
print
முகத்திற்கான அழகை கூட்டுவதில் உதடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உதடுகளை பெரியதாகவும் சிறியதாகவும் காட்ட பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. நமது உதட்டுப்பகுதிகளில் வியர்வை நாளங்கள் மிக மிகக் குறைவு. மேலும் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் சில நாளங்களே உள்ளன. அதனால் அவை எளிதில் உலர்ந்து விடுகின்றன. சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு, வலியும் கடுமையானதாக இருக்கும்.
உதடுகளில் வெடிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. காற்று அதிகம் படுவதாலோ, உதடு அதிகம் உலர்ந்து போகும் நிலையில் வெடிப்பு உண்டாகிறது. அப்படி ஏற்படும் போது அது மிகவும் உலர்ந்தும், சிவப்பு நிறமாகவும், மிகவும் கடினமாகவும் இருக்கும். சில நேரங்களில் ரத்தக் கசிவும் இருக்கும். வாய் ஓரங்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு’ரிப்போபுளோவின்’ என்ற குறைபாடே காரணம்.
உதடுகள் வெடிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உலரும் தன்மை அதிகம் கொண்ட பகுதியில் இருப்பது, வைட்டமின் ‘பி’ குறைபாடு, புகைபிடித்தல் போன்றவையும் காரணம். புகைப்பிடிப்பதால் உதடுகளில் சுரக்கும் எண்ணெய்ப் பசை உண்டாகாது. அதனாலும் உதடுகளில் வெடிப்பு ஏற்படும்.
உதட்டு வெடிப்பை சரி செய்வதற்கு ‘லிப் பாம்’ அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். ரிப்போபுளோவின் குறைபாட்டை தவிர்க்க வைட்டமின் ‘பி-2’ உணவுகள், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளலாம். பகல் நேரங்களில் வெளியே செல்லும்போது ‘சன் ஸ்கிரீன்’பயன்படுத்தலாம்.
உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க உதட்டுச்சாயம் பூசுவதற்கு முன் பெட்ரோலியம் ஜெல்லியை பூசவேண்டும். குளிர்ந்த உப்புநீரை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் இடவேண்டும். இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம். பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து உதட்டில் மசாஜ் செய்யலாம். ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடித்தால் உதட்டு வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். லிப்ஸ்டிக் பூசுவது அலர்ஜியைத் தந்தால் வேறு தரமான லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம். அதுவும் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் லிப்ஸ்டிக்கை தவிர்ப்பதே உதட்டைக் காக்கும்.