
காலையில் மொட்டை மாடியில் நின்று பல் துலக்கும்போது அவ்வளவு அருமையாக இருந்தது அந்த காலை நேரக் காட்சி.
”காலையிலே சூரியன் உதிக்கறச்சே பறவைகள் சத்தமும், குயிலோட பாட்டும் பின்னணியிலே சேர்ந்து கேட்கும்போது அந்தக் காட்சி எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியாம்மா…”, என்றேன் என் மகள் ஜெய்ஸ்ரீயிடம்.
”குயிலோட பாட்டு எனக்கு பிடிக்கும். அதோட கூடு எனக்கு பிடிக்காது”, என்றாள் என் குழந்தை ஜெய்ஸ்ரீ.
”ஏம்மா…”
”அது காக்காவோட கூடு… அதோட கூட்டிலதான் குயில் போய் வசிக்குமாம். அடுத்தவங்க உழைப்போட பலனை நாம தட்டிப் பறிக்கக் கூடாது. எங்க வள்ளிக்கண்ணு டீச்சர் சொல்லியிருக்காங்க” என்றது என் குழந்தை.
அட!. என்னவொரு அற்புதமான வார்த்தை. உதிர்ந்த இலைகள் மண்ணுக்கு தழைச் சத்தாவது போல, உழைப்பால் சிந்தும் வியர்வை கனவுகளுக்கு பலம் தருகிறது. நமது கனவு நமது உழைப்பால் ஜெயித்தால்தானே அழகு.