
லஞ்சம் வாங்குபவர்கள் குறைவான எண்ணிக்கையிலும், லஞ்சம் தருபவர்கள் அதிகமான எண்ணிக்கையிலும் இருப்பதால்தான், லஞ்சம் வளர்ந்து கொண்டே போகிறது என்கிறார் ‘லஞ்சம் வாங்காதீர்கள், கொடுங்கள்’ என்ற நூலின் ஆசிரயர் ஆர்.நடராஜன். இதற்கு ஓர் உதாரணம்:
இந்தியாவின் இடைக்கால பிரதமராக இரண்டு முறை இருந்தவர் குல்சாரிலால் நந்தா. லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்த ‘சதாச்சார் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘லஞ்சம் வாங்கக்கூடாது, லஞ்சம் தரக்கூடாது’ – இவை இரண்டும்தான் இந்த சமிதியின் கொள்கைகள். ‘என்னுடைய அமைப்பில் நீங்களும் சேர வேண்டும்’ என்று ஸ்ரீபிரகாசாவைக் கேட்டுக்கொண்டார் நந்தா. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழக கவர்னராக இருந்தவர் இவர்.
‘நீங்கள் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறீர்கள். ஒரு நிபந்தனையைத்தான் என்னால் ஏற்க முடியும்’ என்றார் ஸ்ரீபிரகாசா. விளக்கம் கேட்டார் நந்தா. ‘லஞ்சம் வாங்கக்கூடாது என்ற நிபந்தனை சரியானது. நான் வாங்க மாட்டேன். ஆனால் கொடுக்காதே என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு காரியம் ஆக வேண்டாமா?’ என்றார் ஸ்ரீபிரகாசா. இது ஒரு கவர்னரின் மனநிலை மட்டுமல்ல. அப்பாவி மக்கள் முதல் அனைவரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். என்ன செய்ய?