Header Banner Advertisement

‘என்னை பின்பற்றாதீர்கள்..!’ – ஜேம்ஸ் காமரூன்


Untitled

print
ஜேம்ஸ் காமரூன்

“கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் இவர் படத்தில் இனி நான் நடிக்கவே மாட்டேன்.” இப்படி சொன்னவர் ‘டைட்டானிக்’ நாயகி கேத் வின்ஸ்லெட். “அவர் படத்தில் நடிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனால், வாழ்நாள் முழுவதுக்குமான மொத்த புகழும் அவரின் ஒரே படத்தில் தொட்டு விட முடியும்.” இப்படி சொன்னவர் ஆர்னால்ட் ஸ்வாஷ்னெகர். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இப்படி பயந்து நடுங்குவது ஜேம்ஸ் காமரூன் என்ற ஒற்றை மனிதருக்குத்தான்.

‘டெர்மினேட்டர்’ தொடங்கி ‘அவதார்’ வரை இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். வசூலிலும் சிகரம் தொட்டவை. இவரது படங்களின் வசூல் சாதனையை இவரின் அடுத்தப் படம்தான் முறியடிக்கும். அப்படியொரு சாதனையாளர்.

‘டெர்மினேட்டர்’

விஞ்ஞானத்தையும் கலையையும் ஒன்றிணைக்கும் நுட்பமான படைப்பாற்றல் இவரிடம் இருக்கிறது. திகைக்க வைக்கும் அறிவியலும் நெகிழவைக்கும் மனித உறவும் காமரூனின் படம் நெடுக பயணம் செய்யும்.

கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற நகரில் காமரூன் பிறந்தார். இவரின் தந்தை ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியர். தாய் ஒரு நர்ஸ். அமைதியான பிரச்சனை இல்லாத குடும்பம். புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதேபோல் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது. அந்த நேரத்தில்தான் ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற பிரமாண்டமான படம் வெளிவந்தது. அந்தப் படம் அவரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போதுதான் அவர் இனி சினிமாதான் தனது இலக்கு என்று முடிவு செய்தார். கூடவே சினிமாவுக்கு தேவையான ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவற்றில் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து நிபுணத்துவம் பெற்றார்.

‘ட்ரூ லைஸ்’

சில படங்களுக்கு ஆர்ட் டைரக்டர், சில படங்களுக்கு ஸ்பெஷல் சவுண்ட் அமைப்பாளராக சினிமாவில் குறுகிய காலத்திலேயே தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு ஓரமாக உட்கார்ந்து ‘டெர்மினேட்டர்’ கதையை எழுதினார். 6.5 மில்லியன் டாலரில் படத்தை முடிக்கலாம் என்று தயாரிப்பாளர்களை அணுகினார்.

யாரும் இவரை நம்பி முதல் போட தயாராக இல்லை. கடைசியாக ஹெம்டெல் பிக்சர்ஸ்என்ற பெயர் தெரியாத நிறுவனம் படத்தை தயாரிக்க முன்வந்தது. ஆனால், காமரூனின் ஸ்க்ரிப்டுக்கு ஒரு டாலர் மட்டும்தான் தர முடியும் என்றது. காமரூன் வருமானத்தை பற்றி நினைக்கவில்லை. வாய்ப்பை நினைத்தார்.

‘டைட்டானிக்’

ஆனால், ‘டெர்மினேட்டர்’ திரையில் நிகழ்த்தியது, ஹாலிவுட் சரித்திரத்தின் மற்றொரு மைல்கல். ஜேம்ஸ் காமரூன் என்பவர் சினிமாவின் விஸ்வரூபம், இவரால் எதையும் செய்ய முடியும் என்று ஹாலிவுட் கண்டுகொண்டது.

‘டெர்மினேட்டர்’ வசூல் சாதனையை ‘ராம்போ’ முறியடித்தது. ‘ஏலியன்ஸ்’, ‘ட்ரூ லைஸ்’ என்று காமரூனின் முந்தைய வசூல் சாதனையை அவரேதான் தனது அடுத்த படத்தில் முறியடித்தார்.

இவரது எல்லா படங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் வந்ததுதான் ‘டைட்டானிக்’ அதன்பின் 12 வருடம் கழித்து ‘அவதார்’ வந்தது. இரண்டுமே வசூலின் உச்ச உயரம் தொட்டது.

‘அவதார்’
சினிமாப் பற்றி காமரூன் சொல்லும்போது, “நான் எதிர்பார்க்கும் ஒழுங்கு எல்லா தரப்பிலிருந்தும் வர வேண்டும். நான் சினிமாவில் யாரையும் பின்பற்றவில்லை. அதனால், என்னை நீங்கள் யாரும் பின்பற்றாதீர்கள்..!” இதுதான் ஜேம்ஸ் காமரூன் இளைய இயக்குனர்களுக்கு சொல்லும் அறிவுரை.