
இது முழுவதும் உடலியல் கோளாறுகளால் ஏற்படுவதாகும். காதை சுற்றியிருக்கும் ரத்தக்குழாய்கள் சுருங்கிப்போவதாலோ, அந்த ரத்தக்குழாய்களில் சிறுசிறு கட்டிகள் உருவாவதாலோ காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. கூடவே இதய துடிப்புக்கு ஏற்ப ரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும்போது இயக்கம் சிரமத்துக்குள்ளாவதால் ஒருவித சத்தம் உண்டாகி அது இரைச்சலாகவும் வெளிப்படுகிறது. நடுக்காது மற்றும் வாயின் மேற்பகுதியில் உள்ள தசைகள் கூட சிலருக்கு துடித்து அது இரைச்சலாக கேட்கிறது.
வாழ்க்கை முழுவதும் எப்போதும் காதில் பெரும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருப்பதால் நரக வேதனையை அனுபவிப்பார்கள். இந்த இரைச்சலில் காது செவிடாகிவிடும் என்று பயப்படுவார்கள். உண்மையில் இதனால் காது செவிடாகாது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தைராய்டு பிரச்சனைகள், அதிக அளவில் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிப்பது, செவிப்பறையில் ஓட்டை, காதில் சீழ்வருவது இவையெல்லாம் கூட காது இரைச்சலை கொண்டு வரலாம். இவற்றை குணப்படுத்திவிட்டால் இரைச்சல் நின்று விடும். என்றாலும், இப்படி காது இரைச்சலுக்கு காரணம் தெரிவது 20 சதவீத நோயாளிகளிடம் மட்டும்தான்.
ஒரு புள்ளிவிவரம் பிறவியில் காதுகேளாதவராக இல்லாமல் பின்னாளில் கேட்கும் திறன் இழந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு காது இரைச்சல் இருப்பதாக சொல்கிறது. காது இரைச்சல் உள்ளவர்களுக்கு அதைவிட சத்தமான கூச்சல் நிறைந்த இடமே சற்று அவஸ்தையை குறைக்கும். அமைதியான சூழ்நிலையில்தான் காது இரைச்சல் அதிகப்படியான அவஸ்தைகளைத் தரும்.