Header Banner Advertisement

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்


www.villangaseithi.com

print
ஹாலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அங்கெல்லாம் புகழின் உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரும் நடிகர்கள் ஒரே சினிமாவில் சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயம். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இந்த கொடுப்பினை இல்லை போலும். இங்கிருக்கும் பெரிய நடிகர்கள் எப்போதும் துருவங்களாக விலகியே நிற்கிறார்கள். அவர்கள் இணைந்து நடிப்பதில்லை.
அப்படி தமிழ் சினிமா உலகில் இருபெரும் ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’. இது 1954-ம் ஆண்டு வெளிவந்தது. மில் தொழிலாளர்களான இரண்டு இளைஞர்களை பற்றிய கதை இது. இருவரும் இணைபிரியாத நண்பர்கள். ஒரு இளைஞனின் காதலி சந்தர்ப்ப வசத்தால் நண்பனின் மனைவியாகிறாள். நண்பனின் மனைவி ஆன பின்னரும் தனது காதலியை அவன் மறக்கவில்லை. அவளை தொடர்ந்து காதலிப்பது மட்டுமின்றி அடையவும் துடிக்கிறான். அதெல்லாம் தெரியாத நண்பன் அவனை தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சனைதான் படத்தின் கதை.

படத்தில் அன்றைய தொழிலாளர்களின் நிலைமைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. புரட்சியான கருத்துக்கள் படம் நெடுக இருந்தது. ஒருகாட்சியில் குழந்தை அழும் பக்கத்து வீட்டுப் பெண் ‘செல்வி, குழந்தை அழுகிறது. கொஞ்சம் பால் கொடேன்..!’ என்று வரும். அதற்கு ‘மாடுகூட தீனி போட்டால்தான் பால் கொடுக்குது..!’ என்று பட்டினியால் வாடும் தனது நிலையை எடுத்துச் சொல்லியிருப்பாள் அந்த பெண்.

பொதுவாக தொழிலாளர்கள் பிரச்சனை, புரட்சிக் கருத்துக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்ட படங்கள் தோல்வி பட்டியலில்தான் இடம் பெறுகின்றன. அதற்கு ‘கூண்டுக்கிளி’யும் விதிவிலக்கல்ல. அதுவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அதன் விநியோகஸ்தர் சோர்ந்துவிடவில்லை. காத்திருந்தார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணைந்தார். சிவாஜி கணேசன் காங்கிரசில் இணைந்தார். இருவரும் சினிமாவிலும் அவரவர்கள் இணைந்த கட்சியிலும் பிரபலமாகிக்கொண்டே போனார்கள். ‘கூண்டுக்கிளி’யை வாங்கி டப்பாவில் வைத்திருந்த விநியோகஸ்தருக்கு அது சிறந்த காலக்கட்டமாகப் பட்டது. மக்கள் திலகமும், நடிகர் திலகமும் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் என்று விளம்பரம் செய்தார், படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை படம் வசூலை அள்ளியது. விண்ணைத் தொட்டது. காரணம் அப்போது இருவரும் இரு துருவங்களாக வெகு தொலைவில் விலகியிருந்தார்கள்.

விநியோகஸ்தரின் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. பிரச்சனைகள் எழுந்தன. இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேலம் அருகே இருந்த வாழப்பாடி என்ற ஊரில் இருந்த ராஜா தியேட்டரில் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே முதல் முறையாக மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களில் எல்லாம் மோதல் வெடிக்க தொடங்கியது.

தியேட்டர் சிலைடிலும், பேப்பர்களிலும் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பெருமளவு விளம்பரம் செய்யப்பட்டன. ஆனால், எந்தப் பலனும் இன்றி மோதல் மிகவும் முற்றியது. மீண்டும் படம் பெட்டிக்குள் முடங்கியது. அதன்பின் திரையிடப்படவில்லை. கூண்டுக்கிளி நிரந்தரமாக கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் விரும்பினால் கூண்டுக்குள் அடைந்த கூண்டுக்கிளியை இங்கே பார்க்கலாம்.

கூண்டுக்கிளி திரைப்படம்
[youtube https://www.youtube.com/watch?v=5WLUvGfd4pw?feature=player_embedded]