
ஒவ்வொரு ஆண்டும் ஆக்ரா அரண்மனைக்குள் அரச குலப்பெண்கள் ஒரு பொருட்காட்சியை நடத்துவார்கள். ஒரு முறை பொழுது போகாத இளவரசர் ஷாஜகான், அந்த பொருட்காட்சிக்கு விஜயம் செய்தார். ஒரு கண்ணாடிப் பொருட்கள் விற்கும் கடையில் பேரழகி அர்ஜூமான் பானு பேகம் (இதுதான் மும்தாஜின் நிஜப் பெயர்) பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் நிலை தடுமாறிப் போன ஷாஜகான், கையில் கிடைத்த ஒரு கண்ணாடி பொருளை எடுத்து, ‘என்னவிலை’ என்றார். ‘இது கண்ணாடி அல்ல வைரம் உங்களால் விலை கொடுக்க முடியுமா?!’ என்று குறும்பாகக் கேட்டாள்.
1612 ஆம் ஆண்டு ஷாஜகான்-அர்ஜூன்மான் பானுபேகம் திருமணம் நடந்தது. பேரரசர் ஜஹாங்கீரின் காலில் விழுந்து வணங்கியவுடன், ‘இன்றி லிருந்து நீ மும்தாஜ் என்று அழைக்கப்படுவாய்! என்று அறிவித்தார். மும்தாஜ் என்றால் அரண்மனையில் முதன்மையானவள் என்று பொருள். திருமணத்துக்குப்பின் ஷாஜகானும் மும்தாஜும் வாழ்ந்த 18 வருட இல்லற வாழ்க்கை ஒரு பிரம்மிப்பூட்டும் காதல் காவியத்தின் மறுபகுதி. வயதில் கூட இருவருக்கும் வித்தியாசமில்லை. ஒரே வயதுதான். ஆனாலும் இளவரசர், இளவரசியிடம் உடலிலும், உள்ளத்தாலும் காதல் வயப்பட்டுக் கிடந்தார். தம்பதிகளுக்கு பிறந்தது மொத்தம் 14 குழந்தைகள்.
![]() |
Mumtaz |
மும்தாஜ் அழகில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. அவள் ஒரு ராஜதந்திரி. மதி நுட்பம் நிறைந்தவள்.. கணவருக்கு நல்ல மனைவியாய், நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியனாய் என்று எல்லாமே அவளாக ஷாஜகானுக்கு இருந்தாள். அரசின் சட்டம், அறிவிப்பு கடிதங்கள் என்று எதுவாக இருந்தாலும் மும்தாஜின் அனுமதி பெறாமல் ஷாஜகான் நிறைவேற்றியதில்லை. எவ்வளவு தான் மனைவி மேல் பிரியம் என்றாலும் வெளியூர் போகும் போது கணவன், மனைவியை வீட்டில் விட்டுத்தான் செல் வார்கள். ஆனால் ஷாஜகான் எந்தவொரு சூழ் நிலை யிலும் மனைவியை விட்டு பிரிந்ததுஇல்லை. வெளியூர் மட்டுமல்ல போர் களத்திற்கு கூட மனைவியுடனே போனார்.
1631 ஜூன் 7 ந் தேதி… பீஜப்பூர் சுல்தானுடன் ஷாஜகான் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது போர்களத்தில் இருந்த மும்தாஜூக்கு 14வது குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்கு ஜன்னி கண்டது. தகவல் தெரிந்து ஓடோடிவந்தான் ஷாஜகான். அன்பு மனைவியை மடியில் போட்டு குலுங்கி குலுங்கி அழுதான். பொதுவாகவே அரசர்கள் உணர்ச்சி களை சோகத்தை அவ்வளவு எளிதாக மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த மாட்டார்கள். ஷாஜகான் மும்தாஜ் விசயத்தில் இந்த மரபு களையெல்லாம் உடைந்தெறிந்தான். மன்னரின் மடியில் கிடந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. கதறித் துடிததான் ஷாஜகான், பிரம்மைப் பிடித்தவன் போல் மாறினான்.
ஒருநாள் தனது நெருங்கிய நண்பர்களுடன் மனைவியைப் பற்றிப் பேசி கண் கலங்கினார். அப்போது காதலும் துக்கமும் ஏக்கமும் பொங்க ‘அவளு க்காக ஒரு நினைவுச் சின்னம் கட்ட வேண்டும்’ என்றார். அதுதான் தாஜ்மஹாலாக உருவெடுத்தது.