Header Banner Advertisement

ஐம்பதில் வந்த கல்யாண ஆசை !


sp - 02 - low

print
எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்தப் பின்னே துறவறம் என்கின்றன வேதங்கள். ஆனால், சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்த சிவவாக்கியர்,   பிறக்கும் போதே”’  சிவ சிவ’ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே பிறந்தவர்.   அவருக்கும் இது பொருந்துமா ?
ஆண், பெண் என்ற இரண்டு உடல்கள் ஒருமனதோடு ஒன்றிணைந்து போகமாகிய இன்பம் பெறுவது உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இது இல்லாமல் யாரும் பிறப்பதில்லை. சிவ வாக்கியரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
வாலிப வயதிலே காலத்தின் தத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் உணர்ந்தவர் அவர். என்னதான் உணர்ந்திருந்தாலும் அவரது அடி மனதில் ஒரு மனக்குறை இருந்து வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. இந்த மன குழப்பத்துடனே அவர் காசிக்குச்  சென்றார்.
காசி நகரின் தெருவோரத்தில் ஒருவர் செருப்பு தைத்து தொழில் செய்து வந்தார். அவர் காற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பிரணாயாமம் தெரிந்தவர். அவர் ஒரு சித்தர். தனக்கு ஒரு நல்ல சீடன் வேண்டு மென்று நித்தம், நித்தம் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.
அவரிடம் சிவ வாக்கியர் வந்து சேர்ந்தார். “ அய்யனே ! என் மனக்குறையை சொல்லவே இங்கு வந்தேன் ” என்றார். வந்திருப்பவர்தான் தனக்கு ஏற்ற சீடர் என்பதை உணர்ந்த அந்த சித்தர், “ அப்பனே ! செருப்பு தைத்த காசு என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துப்போய் என் தங்கை கங்கா தேவியிடம் கொடு. இதோ இந்த பேய் சுரைக்காய் ஒரே கசப்பாக இருக்கிறது. இதன் கசப்பை கழுவி வா ! ”  என்றார்.
சிவ வாக்கியருக்கு ஒன்றும் புரியவில்லை. மனக்குறையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்தால், இவரோ காசையும், சுரைக்காயையும் கொடுக்கிறாரே என்று யோசித்தப்படி நதிக்கரைக்கு வந்தார்.
சித்தரின் காசை நதியின் மீது வைக்க போனார், அப்போது வளையல் அணிந்த ஒரு பெண்ணின் கை அந்த காசை பெற்றுக் கொண்டு உடனே மறைந்தது. இதெல்லாம் சிவ வாக்கியரை ஆச்சர்யப்பட வைக்க வில்லை. அவர் தன்னிடமிருந்த பேய் சுரைக்காயை கழுவிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.
“ வந்து விட்டாயா  அப்பனே ! நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். கங்கா தேவியிடம் கொடுத்த காசு எனக்கு மறுபடியும் வேண்டும்… இதோ இந்த தோல் பைக்குள்  நீர் இருக்கிறது. இதையே காங்கா தேவியாக நினைத்து காசைக்கேள்..”  என்றார்.
சிவ வாக்கியரும் சித்தர் சொன்னபடியே கேட்டார். மறு வினாடியே தோல் பைக்குள் இருந்து வளையல் அணிந்த பெண்ணின் கை வெளியில் வந்தது. அதன் கையில் அதே காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்த காசை எடுத்து  சித்தரிடம் நீட்டினார்.
ஏனோ, அந்த வளைக்கரம் சிவ வாக்கியரின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை கவனித்த சித்தர், “எனக்கேற்ற மாணவனாக நீபக்குவம் பெற்றுள்ளாய். முக்தி நிலை வரும் வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். உன்னிடம் இந்த பேய் சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் தருகிறேன். இந்த இரண்டையும் கலந்து உனக்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணே உனக்கு ஏற்றவள். அவளை மணந்து இல்லறம் நடத்து ”என்று கட்டளையிட்டார்.
சிவ வாக்கியரின் மனக்குறையே இதுதான். இத்தனைக் காலமும் இல்லாமல் காலம் போன காலத்தில் இப்படியொரு ஆசை ஏற்பட்டதே என்று யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே மருகினார். அப்போது சிவ வாக்கியருக்கு வயது 51. இந்த வயதில் தான் அவருக்கு இல்லற நாட்டம் ஏற்பட்டது.
இதை சித்தர் புரிந்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட அனுமதி அளித்தார். பின்பு பல உபதேசம் செய்தார். சித்தர் பாதம் தொட்டு வணங்கி அங்கிருந்து புறப்பட்டார் சிவ வாக்கியர். வழியில் தவ ஞானமும் பெற்றார். உடலால் பெறுகின்ற இன்பம் சரீர சந்துஷ்டி என்கிற சிற்றின்பம். ஆன்மாவின் நிம்மதியே ஆத்ம சந்துஷ்டி என்கிற பேரின்பம். இதற்கான கல்வி நெறிதான் யோக சாஸ்த்திரம். இவற்றை எல்லாம் பாடல் மூலம் சொல்லிக் கொண்டே சென்றார் சிவ வாக்கியர். சிலர் அவரை சித்தர் என்றனர், சிலரோ அவரை பித்தர் என்றனர்.
சிவ வாக்கியர் எதிர்பட்ட பெண்களிடம் எல்லாம்அழாத குறையாக  “இந்த பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து உணவு படைக்கும் பெண் உங்களில் யாரும் உள்ளனரோ ? ” என்று கேட்டுக் கொண்டே சென்றார்.
சிவ வாக்கியர் இளமையான தோற்றமும், அழகும் கொண்டவர். அதனால், பெண்கள் அவர் மீது காதல் வயப்பட்டனர். ஆனாலும், இந்த கேள்வியை கேட்டதும் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டனர். இவரை பைத்தியம் என்றனர்.
இப்படி பெண்ணை தேடி, தேடி சலித்து போன சிவ வாக்கியர் கடைசியாக குறவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு குடிசையின் வாசலில் ஒரு கன்னிப் பெண் அமர்ந்திருந்தாள். வாசலில் பிளக்கப்பட்ட மூங்கில்கள் கட்டுக் கட்டாக கிடந்தன.
“வீட்டில் யாரும் இல்லையாம்மா? ” என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.
“தாங்கள் யார் ? எனது பெற்றோர்கள் கூடை முடைய மூங்கிலை வெட்டி வர காட்டுக்கு சென்றிருக்கிறார்கள்”  என்றாள்.
“ஒரே தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா? பெண்ணே ! ”  கேட்ட மாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் அந்த பெண்.
“பெண்ணே ! நான் பசியில் இருக்கிறேன் !  சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு பசி தாங்கமுடியவில்லை என்னிடம் ஒரு பேய் சுரைக்காயும், கொஞ்சம் மணலும் இருக்கிறது. இதை வைத்து சமைத்து எனக்கு உணவளிக்க முடியுமா? ”
மற்ற பெண்களை போல் இந்த பெண் ஓடி ஒளியவில்லை, ஏளனமாக சிரிக்க வில்லை, இடக்கு மடக்காக கேள்விகள் கேட்கவில்லை. செருப்பு தைக்கும் சித்தரிடம் சீடனாக சிவ வாக்கியர் சென்ற போது எப்படி சித்தர் சொன்ன எந்த ஒரு வேலைக்கும் எதிர் கேள்வி கேட்காமல் சிவ வாக்கியர் செய்து முடித்தாரோ… அதே போல் இவரின் கட்டளைக்கு அந்த பெண்ணும் எந்த கேள்வியும் கேட்க வில்லை. பக்குவப்பட்ட அந்த கன்னிப்பெண் பேய் சுரைக்காயையும், மணலையும் பிசைந்து, குறையேதும் மில்லாத உணவு சமைத்து சாப்பிட அழைத்தாள்.
சிவ வாக்கியருக்கு ஆச்சர்யம் !   உணவின் சுவை பிரமாதமாக இருந்தது. குருநாதர் அடையாளம் காட்டியப் பெண் இவள்தான் என்ற முடிவுக்கு வந்தார்.
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வந்தனர். வீட்டில் சிவ வாக்கியர் இருப்பதைக் கண்டு திகைத்தனர். அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினாள். பேய் சுரைக்காயையும், மணலையும் உணவாக சமைக்கப்பட்டதை கேள்விப்பட்டு அவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவரின் பெற்றோர்கள் வந்தனர்.
“ அய்யா, நீங்கள் இல்லாதபோது உங்கள் வீட்டுக்கு வந்தேன். உங்கள் பெண் எனக்கு அற்புதமான உணவு சமைத்து பரிமாறினாள். எதிர்த்துப் பேசாத  ஒரு பொருமையான பெண்ணை தவம் செய்வதற்கு துணையாக இதுநாள் வரை தேடி வந்தேன் . கிடைக்க வில்லை. மிக நல்ல குணநலன்களும் பண்புகளும் கொண்ட உங்கள் பெண்ணை நானே மணந்து கொள்ள விரும்புகிறேன்.” சிவ வாக்கியர் கூறியதும், பெற்றோர்கள் திகைத்துப் போயினர்.
அவர்களின் திகைப்பைப் பார்த்து “ஏன் ? உங்கள் பெண்ணை மணந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையா? ” என்று கேட்டார்.
“சுவாமி, தாங்கள் எங்கள் இடத்திற்கு வந்ததே நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். எங்கள் குலவழக்கப் படி திருமணத்திற்கு பிறகு தாங்கள் எங்கள் இல்லத்தில் தான் தங்க வேண்டும். அனைத்தும் அறிந்த தாங்களை எங்களுடன் வைத்துக் கொள்ள சிறிது தயக்கம்! அதுதான்…!”  என்றனர்.
சிவ வாக்கியர் மறுப்பெதுவும் கூறவில்லை.  குறவர்களின் வழக்கத்தை ஏற்றுக் கொண்டார். அவர்கள் முறைப்படி ஒரு வெண்கலத்தை தட்டி ஓசை எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தினார்கள்.
காசி சித்தரின் கட்டளைப் படி சிவ வாக்கியர் பெண்ணின் வீட்டிலேயே தங்கினார். அந்தக் குறப்பெண்ணுடன் இல்லறம் மேற்கொண்டார். என்னதான் மனக்குறை இருந்தது என்று இல்லறத்தை அவர் மேற் கொண்டாலும் ஆசைகளற்ற நிலையிலேயே இருந்தார்.
அவர்களின் இல்லறக் கடமைகளில் ஒன்றான மூங்கில் வெட்டி முறம் செய்வததற்காக தினமும் காட்டுக்கு போய்  மூங்கில்களை வெட்டி வந்தார்.
சித்தர்கள் ஞான நிரை எய்தும் போது இந்த பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் திரை அகன்று விலகி விடுகிறது. மனதின் அகக்கண் திறக்கும் போது புறக்கண்ணுக்கு புலணாகாதெதல்லாம் புலப்படுகிறது. பிற்காலத்தில் பொய்யான ஆச்சாரங்களை எதிர்த்து தன் கருத்துக்களை பார பட்­சம்மின்றி கூறினார். உனக்குள் கடவுள் இருக்கிறார். வெளியே தேடி அலையாதே என்று பட்டவர்த்தனமாக பாடினார் சிவ வாக்கியர்.
இப்படியாக ஒரு பக்கம் இல்லறம், மறு பக்கம் ஞானம் என்று இரட்டை குதிரையில் பயணித்தார் சிவ வாக்கியார்.
மறுநாள் காலை காட்டிற்குள் சென்ற சிவவாக்கியர் அங்கு பருத்து உயரமாக வளர்ந்திருந்த மூங்கிலை வெட்டினார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது.
மூங்கில் வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாக சின்ன சின்னதாக தங்கத்துகள் கொட்டிக் கொண்டே இருந்தது. அதனைக் கண்டு சிவ வாக்கியர் திகைத்து போனார்.
இறைவா இது என்ன சோதனை? பற்றற்ற எனக்கு தங்கத்தை காட்டி சோதிக்கிறாயா ? இறைவனே ? நான் உன்னிடம்முக்தி மட்டும் தானே கேட்டேன். புத்தியை பேதலிக்க வைக்கும் இந்த யுக்தி எனக்கு தேவைதானா? சித்தி தரும் சிவனே உன்னால் முடியா விட்டால் பேசாமல் இருக்க வேண்டியதானே என்னை ஏன் பயம் கொள்ள வைக்கிறாய்? என்றபடி அங்கிருந்து வேகமாக ஓடினார்.
அப்போது அந்த வழியாக மூங்கில் காட்டுக்குள் வந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் தலை தெறிக்க ஓடி வந்த சிவ வாக்கியரை நிறுத்தி “சுவாமி எதற்காகஇப்படி பயந்து ஓடுகிறீர்கள்?” என்று கேட்டனர்.
“நான் ஒரு மூங்கிலை வெட்டினேன். அதற்குள் இருந்து ஆட்கொல்லி பூதம் வெளிவந்தது. அதைப் பார்த்து தான் பயந்து ஓடி வந்தேன்” என்று சிவவாக்கியர் தங்கமாக குவிந்த கிடந்த மூங்கிலை காட்டினார்.
தங்கத்தை பார்த்து பரவசப்பட்டுப் போன அந்த இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். தங்கத்தின் அருமை தெரியாத பைத்தியக்காரன். இந்த தங்கத்தை வைத்து ராஜ வாழ்க்கை வாழலாமே என்று கூறிய அந்த இளைஞர்கள் கொட்டிக் கிடந்த தங்கத்தை மூட்டையாகக் கட்டினார்கள்.
பொழுதும் போனது…
இரவும் வந்தது…
பசி அனைவரின் காதை அடைத்தது. இனி சாப்பிடாமல் தங்க மூட்டைகளை சுமந்து போக முடியாது என்ற நிலை. இளைஞர்கள் பக்கத்து ஊரில் உணவு வாங்கி வருவதென நினைத்தனர். இருவர் உணவு வாங்கச் சென்றனர். இருவர் தங்கத்துக்கு பாதுகாப்பாக காவல் இருந்தனர்.
உணவு வாங்கி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த இருவருக்கும் ஒரு கொடூர எண்ணம் தோன்றியது. அதன்படி அவர்கள் இருவருமே மற்ற இருவர்களை உணவில் விஷம் வைத்து கொன்று விட்டு, முழு தங்கத்தையும் தாங்களே பங்கிட்டு கொள்வதாகத் தீர்மானித்தனர். அதற்காக வாங்கிச் செல்லும் உணவில் விஷத்தைக் கலந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த உணவை காத்துக் கொண்டிருந்த இருவரிடமும் கொடுத்தனர். சாப்பிடுவதற்கு முன் “எங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. நீங்கள் அந்த கிணற்றில் நீர் இருக்கிறதா?”  என்று பாருங்கள் என்றனர்.
உணவு கொண்டு வந்தவர்கள் கிணற்றின் மேல் நின்று பார்த்தனர். தங்கத்துக்கு காவல் இருந்த இரண்டு பேரும் அவர்களை பின்னால் இருந்து கிணற்றுக்குள் தள்ளி விட்டனர். சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.
அதன் பிறகு தள்ளிவிட்ட இருவரும் விஷம் கலந்த உணவை உண்டனர். சிறிது நேரத்தில் அவர்களும் இறந்தனர்.
காலையில் மூங்கில் வெட்ட வந்தார் சிவவாக்கியர். நான்கு இளைஞர்களும் இறந்து கிடப்பதை பார்த்த அவர் ‘அட!அந்த ஆட்கொல்லி அதற்குள் நான்கு பேரையும் அநியாயமாகக் கொன்று போட்டு விட்டதே!’ என்று மனம் வருந்தி, அங்கிருந்து சென்றுவிட்டார். சிவவாக்கியர் முற்றிலும் ஆசையை துறந்து ஞானியாகவே இறுதிவரை இறந்தார்.
சித்தர்களுக்கு மற்றொரு சித்தரின் தவ வலிமை நன்றாக தெரியும். இப்படித்தான் கொங்கணவச் சித்தர் ஒருமுறை வான் வழியே போய்க் கொண்டிருந்தார். கீழே நந்தவனத்தில் சிவவாக்கியர் உணவுக்காக கீரையைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிவவாக்கியரின் தவ ஒளி வான்வெளி எங்கும் நிறைந்திருந்தது. அந்த நந்தவனத்துக்குள் இறங்கினார். இரண்டு சித்தர்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
சிவவாக்கியரின் தவவலிமையை நன்கறிந்தவர் கொங்கணவச் சித்தர். அதன்பின் அடிக்கடி வந்து சிவவாக்கியரை பார்த்துசென்றார். இப்படி அவர் வரும் போதெல்லாம் சிவவாக்கியர் சாதாரண குறவர் இனத்தை சேர்ந்தவரைப் போல் எப்போது பார்த்தாலும் மூங்கிலைப் பிளப்பதும், முறம், கூடைகள் செய்வதமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். சதா சர்வ காலமும் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
ஒரு முறை சிவவாக்கியரைத் தேடி கொங்கணவச் சித்தர் அவரது வீட்டுக்கே வந்து விட்டார். அந்த நேரம் பார்த்து வீட்டில் சிவ வாக்கியர் இல்லை. அவரது இளம் மனைவி மட்டுமே இருந்தார். வீட்டினுள் வந்த கொங்கணவர், சிவவாக்கியர் மனைவியிடம் வீட்டில் உபயோகப்படுத்தப் படாமல் வீணாய் கிடக்கும் இரும்புத் துண்டுகளைக் கொண்டு வா என்றார்.
வீடு முழுவதும் தேடி, மூலை முடுக்கில் இருந்த இரும்புத் துண்டுகளையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தாள். அவற்றை எல்லாம் கொங்கணவர் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்து  போனார்.
மாலையில் காட்டுக்குள் மூங்கில் வெட்டப்போன சிவவாக்கியர் வீடு திரும்பினார். கணவரிடம்  மனைவி கொங்கணவச் சித்தர் வந்து போனதையும், இரும்புத் துண்டுகளை எல்லாம் தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனதையும் சொல்லி விட்டு தங்கமாக மாறிய இரும்புத் துண்டுகளை கணவர் முன் வந்து கொட்டினார்.
சிவவாக்கியர் தங்கத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார். ‘இது என்ன சோதனை? எல்லாம் அறிந்த கொங்கணவர் தன்னைச் சோதிக்கிறாரா? அல்லது அதீத பாசத்தால் இப்படிச் செய்தாரா?’ என்று குழம்பிப் போனார்.
உடனே மனைவியை அழைத்தார் சிவவாக்கியார். “இந்த ஆட்கொல்லி அசுரனை ஒரு விநாடி கூட வீட்டுக்குள் வைத்திருக்கக் சுடாது. உடனே கொண்டு போய் பாழும் கிணற்றில் போட்டு விட்டு வா!” என்றார்.
அவர் மனைவியும் எந்தப் பேச்சும் மறுத்துப் பேசாமல் தங்கத்தைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டார். பின்னொரு நாளில் நன்பகல் சூரியன் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பாறையின் மீது சிவவாக்கியர் சிறுநீர் கழித்து விட்டு தன் மனைவியை அழைத்தார். இந்த பாறையின் மீது தண்ணீரை ஊற்று என்றார்.
சொன்ன படியே அவர் மனைவியும் பாறையின் மீது தண்ணீரை ஊற்றினார். ஊற்றிய உடனே குபீர் என்று புகை வந்தது. புகை மறைந்த பின் பாறை முழுவதும் தங்கமாக மாறி தகதக வென ஜொலித்தது. சிவவாக்கியரின் சிறுநீரில் ரசவாத தன்மை இருப்பதால் இந்த அற்புதம் நிகழ்ந்தது.
சிவவாக்கியர் தனது மனைவியை அழைத்தார். தங்கமாக மாறியிருந்த பாறையை காண்பித்து “கொங்கணவச் சித்தர் சில துண்டுகளை தானே தங்கமாக் கொடுத்தார். இப்போது பார் இந்த பாறை முழுவதும் தங்கமாக இருக்கிறது. உனக்கு வேண்டியதை வெட்டி எடுத்துக் கொள்!” என்றார்.
“சுவாமி! தங்களுக்கு மனைவியான பாக்கியத்தை பெற்ற பின் உங்களை விட எனக்கு தங்கம் ஒன்றும் உயர்ந்தது இல்லை. எனக்கும் இந்த தங்கம் ஆட்கொல்லி பூதம் தான்!” என்று கூறி அவரும் பற்றற்ற நிலைக்கு வந்து விட்டார்.
ஆனால், சிவவாக்கியரின் சீடர்களுக்கு மட்டும் எப்பொழுதும் ரசவாத வித்தை மீதே கவனம் இருந்தது.  அந்த வித்தையைக் எப்போது குரு கற்றுத் தருவார் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர். சிறந்த தவ வலிமையும், யோக நெறியும் உடைய சித்தர்களுக்குத்தான் ரசவாதம் சாத்தியமாகிறது.
தங்கத்தின் மீது பற்று இல்லாதவருக்கே தங்கத்தை உருவாக்கும் வித்தை கைக்கூடும். சித்தர்கள் பலரும் ரசவாத வித்தையில் கை தேர்ந்தவர்கள். அவற்றைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு காணிக்கையாக்குகிறார்கள்.
“சித்தர்கள்  சாதாரணமாக தென்பட மாட்டார்கள். பற்றற்ற பார்வையிலே சித்தர்கள் தெரிவார்கள். குறத்தி மகளாக இருந்தாலும் தங்கத்தை ஆட்கொல்லி என்று வெறுத்த ஞானி என்பதால்தான்  எனது மனைவியின் கண்களுக்கு கொங்கணவர் தெரிவது சாத்தியமானது!” என்று சீடர்களுக்கு விளக்கம் கொடுத்தார் சிவவாக்கியர்.
பற்றற்று போவதுதான் ஆன்மிகத்திற்கான முதற்படி என்பதை சீடர்களும் உணர்ந்தனர்.