ஆவிகள் உலாவும் இடங்கள் என்று வெளிநாடுகளில் ஏராளமாய் இருக்கின்றன. அந்த ஆவிகளின் கதைகளால் அந்த இடங்கள் சுற்றுலா அந்தஸ்தையும் பெற்றுவிடுகிறன்றன. இந்தியாவிலும் சில இடங்கள் அப்படி இருக்கின்றன.
அவைகளில் ஒன்றுதான் குல்தாரா. இது ஒரு கிராமம். ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற இடமாக விளங்கும் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது. 190 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக அவ்வளவு மக்களும் ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல. இதன் கட்டுப்பாட்டில் இருந்த 84 கிராமங்களும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு ஓடினார்கள். குல்தாரா மக்கள் போகும்போது இந்த கிராமத்தில் யார் தங்கினாலும் அவர்களுக்கு மரணம் நேரிடும் என்று சாபமிட்டுச் சென்றார்கள். அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த கிராமத்தில் வேறு யாரும் வந்து குடியேறவில்லை.
1291-ம் ஆண்டு பலிவால் என்ற பிராமண மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தை நிர்மாணிக்க நினைத்தார்கள். அகலமான தெருக்கள், கோயில்கள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கிய கிராமம் இது.
தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். குறைந்த மழையும், அதிக வறட்சியும் கொண்ட இந்த இடத்தில் விவசாயத்தை பிரமாண்டமாக செய்து வந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் இடியென வந்தவன்தான் சலீம் சிங் என்ற தலைமை மந்திரி.
ஒருநாள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த சலீம் சிங் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான். அப்போது கிராமத்து தலைவனின் மகளைப் பார்த்துவிட்டான். அந்தப் பெண்ணின் அழகில் மனதைப் பறிகொடுத்த சலீம் அந்த பெண்ணை தனக்கு மணம் முடித்து தரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு அதிகமான வரி விதித்துவிடுவேன் என்று மிரட்டினான்.

கிராமத்து மக்களுக்கு தங்களின் தலைவர் மகளை சலீமுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. தலைவனோ தனது மக்கள் தனக்காக அதிக வரி கொடுப்பதை விரும்பவில்லை. அதனால் 1825 ஆம் ஆண்டு இரவோடு இரவாக குல்தாரா கிராமத்தினரும் அவர்களுக்கு கீழ் இருந்த 83 கிராம மக்களும் காலி செய்துவிட்டு போனார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்றுவரை அது மர்மமாகவே இருக்கிறது.
குல்தாரா கிராமத்தினர் இட்ட சாபத்திற்கு பயந்து யாரும் குடியேறவில்லை. தற்போது இந்த இடம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. பாரம்பரியமிக்க இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் சிதலமடைந்த வீடுகளும், இடிபாடுகளும்தான் இருக்கின்றன. வழக்கமான சுற்றுலா இடங்களை விடுத்து புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு குல்தாரா ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
எப்படி போவது?
ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ. தொலைவில் ஜெய்சால்மர் நகரம் உள்ளது. ஜெய்சால்மருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. ஜெய்பூர் சென்று செல்லலாம்.