Header Banner Advertisement

‘ஓசோன்’ வாசம் எனக்கு பிடிக்கலை


3

print
மதுரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்சம்.

“என்னப்பா, இப்படி ஒரு வாடை அடிக்கிறதே?!” என்று என் மகன் கேட்டான்.

“இதுதான் ஓசோன் வாசம்..!” என்றேன்.

அவனால் நம்பமுடியவில்லை.

“போங்கப்பா, ஓசோன் நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது. அது போய் இப்படி நாத்தம் அடிக்குமா..?”

நல்லவற்றில் நல்ல மணம்தான் வரும் என்பது அவன் நம்பிக்கை.

“ஓசோன் வெறும் நன்மையை மட்டுமே செய்யவில்லை. அது தீமையையும் செய்கிறது..!” என்றேன்.

நான் சொல்ல சொல்ல அவன் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தன. ஏனென்றால், ஓசோன் ஒரு நல்ல வாயு என்று மட்டுமே அவனுக்கு போதிக்கப் பட்டிருந்தது.

சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக்கூடிய, தீங்கு செய்யும் ‘அல்ட்ரா வைலட் ரேஸ்’-யை கட்டுப்படுத்தி, நல்ல கதிர்களை மட்டும் நமக்கு வழங்கும் வேலையைத்தான் ஓசோன் செய்கிறது. மனிதனுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் இயற்கை ‘பில்டர்’தான் ஓசோன்.

‘ஓசோன்’ ஒரு வாயு. இளநீல வண்ணம் கொண்டது. இதன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கின்றன. கிரேக்க மொழியில் ‘ஓசோன்’ என்றால் வாசம் என்று பொருள்.

லேசான மீன் வாடை கொண்டது. ஓசோன் இடி மின்னலுடன் கூடிய காற்று வீசும் போது மீன் வாடையை நுகரமுடியும். அதுதான் ஓசோனின் மணம். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போதும் இதை உணர முடியும்.

ஓசோன் நன்மையையும் செய்யும். தீமையையும் செய்யும். ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும். மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். சில தாவரங்கள் கருகிப் போகும்.

இதே ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுத்து. பூமிக்குள் ஊடுருவாமல் தடுத்து விடும். கடல் மட்டத்திலிருந்து 13 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் ஓசோன் படலம் படர்ந்திருக்கிறது.

சூரியனில் இருந்து வெளியேறும் அதிக அளவு அலைவரிசை உள்ள ‘அல்ட்ரா வயலட்’ கதிர்களில் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்வதால், அந்த கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.

பூமியில் ஓசோன் வாயுவின் அளவு குளிர்கலங்களில் சற்றே அதிகமாக இருக்கும். அதிலும் மார்கழி மாதத்தில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அதிகாலையில் கோலம் போடும் பெண்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் இதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் நுரையிரலின் கொள்ளவை குறைப்பது, நெஞ்சுவலி, தொண்டைக்கரகரப்பு, இருமல் போன்றவை இதன் பாதிப்பால் வரும்.

சி.எப்.சி.எனப்படும் ‘ப்ளோரோ கார்பன்’ மற்றும் பி.எம்.சி. எனப்படும் ‘ப்ரோமொப்ளுரோ கார்பன்’ ஆகிய வேதிப் பொருட்களுடன் புற ஊதா கதிர்கள் வினைபுரியும் போது குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் தனியே வெளியிடப்படகின்றன.

இந்த வாயுக்களின் ஒரு மூலக்கூறு ஓசோன் வாயுவின் ஒரு லட்சம் மூலக்கூறுகளை சிதைக்கின்றன. அப்போது ஏற்படும் இடைவெளிகள் மூலம் உறிஞ்சப்படாத புறஊதா பூமியில் நுழைகின்றன. இதைதான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு 4 % ஓசோன் படலம் குறைகிறது. இதற்கு 76 % மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம். இததான் பெரும் கொடுமை. ஒரு சதவீதம் ஓசோன் குறைந்தால் 1 முதல் 1.5 லட்சம் கண்பார்வை இழப்பு ஏற்படும். தாவரங்களின் டி.என்.எ. பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறையும், ஒளிசேர்க்கை பாதிக்கப்படும். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், நோயெதிர்ப்பு சக்தி குறையும், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

அதனால் குலோரோப்ளுரோ கார்பன் கலந்துள்ள பூச்சிகொல்லிகள் மற்றும் ஸ்பிரெக்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். ப்ரோமோ மீத்தேன் கலந்த ரசாயன இடு பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

மோட்டார் வாகனங்களை குறைத்து கொள்ள வேண்டும். சைக்கிளில் செல்வது, நடந்து போவது உடலுக்கு நல்லது. ஒசோனுக்கும் நல்லது. ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தால் ஓசோன் ஓட்டை விழுவதை தடுக்கலாம்.

இப்படி நீண்ட விளக்கத்தோடு ‘தினத்தந்தி’க்கு நான் எழுதிய ஓசோன் கட்டுரையை வாசித்துக் காட்டினேன். பிரமிப்போடு கேட்டவன், “ஆனாலும் ஓசோன் வாசம் எனக்கு பிடிக்கவேயில்லை” என்று கூறி ஓடிவிட்டான்.

அந்த மழையின் குளிர்காற்றில் ஓசோனின் மணம் இன்னும் கலந்தே இருந்தது.