Header Banner Advertisement

 கடலை கட்டுப்படுத்திய சித்தர் பெருமான்


God3

print
அது சித்ரா பவுர்ணமி நாள்.

அன்றைய இரவில்தான் இந்திரன் சொக்கலிங்கப் பெருமானுக்கு பூஜை செய்து வருவது வழக்கம். மன்னன் அபிஷேகப் பாண்டியன் பூஜையை முடிக்கும் வரை இந்திரன் காத்திருந்தான். ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்தது.

ஆனால், அன்று இந்திரனைப் பார்ப்பதற்காக வருணன் வந்திருந்தான். “என்ன தேவேந்திரா! இன்று நீ வருத்தமாக இருக்கிறாய்?” என்று கேட்டான்.

“என்ன செய்வது வருணா! மதுரை சொக்கநாதரைப் பூஜிக்க வந்தேன். அபிஷேகப் பாண்டியன் செய்யும் பூஜையால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கவலையோடு இருக்கிறேன்” என்றான் இந்திரன்.

“இந்த சொக்கலிங்கம்தான் மற்ற எல்லா லிங்கங்களைக் காட்டிலும் சிறந்ததோ?

“ஆமாம், வருணா! அன்று ஒரு முறை எனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தையும், வெள்ளை யானையின் சாபத்தையும் நீக்கி அருள் புரிந்தது இந்த சொக்கலிங்கம்தான்”.

“அப்படியானால் என்னை வருத்தப்படுத்துகிற வயிற்றுநீர் நோயை இந்த சொக்கலிங்கம் தீர்த்துவைப்பாரா?”

“பிறவி நோயைத் தீர்க்கும் சிவபெருமானுக்கு உனது வயிற்று நோயை தீப்பதா பெரிய காரியம்! அப்படி உனக்கு சந்தேகம் இருந்தால் அவரின் சக்தியை சோதித்துப்பார்! உனக்கு திறமை இருந்தால்…!” என்றான் இந்திரன்

இந்திரனிடம் விடைபெற்ற வருணனின் பார்வை மதுரை நகர் மீது பட்டது. முதன்மைச் சித்தரான சிவனை சோதித்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தான் வருணன். உடனே கடலைக் கூப்பிட்டான்.

“ஏய்! கடலரசனே, நீ உலகத்திலே வலிமையானவன் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறாயே! நீ வலிமை ஆனவன் என்பது உண்மையானால் இப்போதே சொக்கநாதர் குடியிருக்கும் மதுரை நகரத்தை அழித்துவிட்டு வா!” என்று ஏவினான்.

வருணனின் ஆணையைக் கேட்ட மாத்திரத்தில் கடல் குமுறிக்கொண்டு பொங்கி எழுந்தது. பெரிய ஆரவாரத்துடன் மரங்களை எல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்தபடி மதுரையை நோக்கி முன்னேறியது.

ஏதோ பிரளயம் ஏற்பட்டதோ என்று மக்கள் நடுங்கினர். தேவர்கள் பிரம்ம கல்பத்திலும் கூட அழியாத மதுரையம்பதி அழிந்துவிடுமோ என்று பயந்தனர். அபிஷேகப்பாண்டியனும் என்ன செய்வதென்று புரியாமல் சொக்கநாதன் பாதத்தை சரணடைந்தான்.

சோமசுந்தரர் முன் தோன்றினார், “பயப்படாதே பாண்டியா! மதுரைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது!” என்று புன்னகை பொழிந்தார். பிறகு தன்னுடைய ஜடா மகுடத்திலிருந்து நான்கு மேகங்களையும் பார்த்த சிவபெருமான் “நீங்கள் வேகமாக சென்று மதுரை நகரத்தை அடிக்க வந்து கொண்டிருக்கும் கடலை அது வற்றிப் போகும்படி நன்றாக உறிஞ்சி எடுத்து விடுங்கள்” என்று கட்டளையிட்டார்.

மேகங்கள் நான்கும் உடனே எழுச்சியோடு புறப்பட்டன. கடலின் ஆர்ப்பரிப்பை அடக்கும் விதமாக கடல்நீர் முழுவதும் வற்றிப்போகும்படி குடித்துவிட்டன. மதுரை நகரம் பேராபத்தில் இருந்து தப்பி பிழைத்தது.

மக்களும் மன்னனும் நிம்மதி அடைந்தனர். இந்த நிம்மதி அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை. கடலரசன் தோல்வியடைந்து திருப்பியது வருணனை வதைத்தது. தனது வலிமை குறைந்து போனதாக உணர்ந்தான். கண்கள் சிவந்தன. வருணன் இன்னும் இறைவனின் அருமை பெருமைகளை சக்தியை புரிந்து கொள்ளவில்லை.

தனக்கு கீழே இருக்கும் ஏழு மேகங்களையும் அழைத்தான். “என்ன செய்வீர்களோ! தெரியாது மதுரையை நீரால் அழித்துவிட்டுதான் திரும்ப வேண்டும்” என்று ஆணையிட்டான்.

ஏழு மேகங்களும் காற்றில் மிதந்தபடி வேகமாக கிளம்பின. கருமை வண்ணத்தில் மதுரையை சூழ்ந்து நின்றன. மின்னலை வீசி எறிந்தன. இடி முழக்கங்களால் பூமியை அதிர வைத்தன. புயல் ஒன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது

அவ்வளவுதான் இன்றோடு மதுரை நீரில் மூழ்கி அழியப்போகிறது என்று மக்கள் மனம் கலங்கினர். அபிஷேகப்பாண்டியனும் கோவிலுக்கு ஓடிச் சென்று சித்தர் பெருமானான சிவனிடம் மதுரையை காப்பாற்றும்படி திருவடியில் விழுந்து வணங்கினான்.

உடனே சோமசுந்தரக் கடவுள் தனது சடையிலுள்ள நான்கு மேகங்களையும் பார்த்து “நீங்கள் மதுரையின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து நின்று கொள்ளுங்கள் நான்கு மாடங்களைப் போல் இருந்து ஏழு மேகங்களையும் விலக்கிவிட்டு விடுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

மேகங்கள் நான்கும் இறைவனின் ஆணையை ஏற்று உடனே புறப்பட்டன. மதுரையின் நான்கு திசைகளிலும் சூழ்ந்து கொண்டு நின்றன. எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் மூடிக்கொண்டன. பெரிய கோபுரங்களை தூண்களாகக் கொண்டு, மதுரை மாநகரையே ஒரு பெரிய கூடாரத்தைப் போல் மூடிக் கொண்டன.

அவற்றை மீறி மழைநீர் மதுரைக்குள் வரவில்லை. தொடர்ந்து மழை பொழிந்த மேகங்கள் வறண்டுவிட்டன. மதுரையை விட்டு தோல்வி பயத்தோடு விலகின. வருணனிடம் நடந்ததைக் கூறின. வருணன் தோல்வியால் வெட்கமடைந்தான். பயத்தால் நடு நடுங்கினான். அவனின் வீரம் ஒடுங்கிவிட்டது.

ஆனாலும் அவனது மனதுக்குள் பெரும் மகிழ்ச்சி தோன்றியது. சிவபெருமான் சக்தி மிக்கவர் என்ற உண்மைபுரிந்தது. அவரின் மகிமை தெரியாமல் அவரை சோதித்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்த வருணன், பொற்றாமரைக் குளத்தை அடைந்தான். அதை அடைவதற்கு முன்பே அவனுடைய வயிற்று நீர் வியாதி குணமாகிவிட்டது.

பொற்றாமரைக் குளத்தில் மனதின் அழுக்கு நீங்க நீராடிய வருணன், சோமசுந்தரக் கடவுளை பூஜை செய்ய நினைத்தான். பயபக்தியோடு விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டான். ருத்திராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான். கங்கை முதலிய பெண்கள் தங்கக் குடங்களில் வாசனை கலந்த திருமஞ்சனநீரைக் கொண்டு வந்து கொடுத்தனர். கற்பகத்தரு வசனையுள்ள மலர்கள், சந்தனம், வாசனைத் திரவியங்கள், ரத்தினங்கள் பதித்த தங்க பாத்திரங்கள் பொன்னாடை எல்லாம் அணியக் கொடுத்தது. காமதேனுவோ ஐந்து வகையான பழங்களையும், பஞ்சாமிர்தம், பஞ்சகாவ்யம், தூபம், தீபம் எல்லாம் கொடுத்தது

இத்தனையும் பெற்ற வருணன் சோமசுந்தரப்பெருமானை நெறிதவறாது பூஜித்தான். இறைவனின் ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி முத்துக்களால் திருவடிகளை அர்ச்சனை செய்தான்!

வருணனின் வழிபாட்டில் உள்ளம் மகிழ்ந்த இறைவன் “வருணா! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்! தருகிறேன்” என்றார்.

“இறைவா! எத்தனையோ தவங்களில் போகாத, எத்தனையோ மந்திரங்களில் போகாத எனது வியாதி தாங்கள் குடியிருக்கும் இத்திருக்கோவிலின் திவ்ய தீர்த்த்திலே நீராட நினைத்தவுடனே குணமாகிவிட்டது. தங்களின் அருமை பெருமைகளை தெரியாமல் தங்களையே சோதனை செய்யத் துணிந்த என்னிடமே இத்தனை கருணையோடு நடந்து கொள்கிறீர்களே, தங்கள் செயல் எனது ஆணவத்தை நீக்கியது. தங்களின் அருளாலே எனக்கு மோட்சமும் கிடைத்துவிடும். எனக்கு இனி எதுவும் வேண்டாம். அடியேன் அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும்” எனக்கூறி பலவாறு வணங்கிவிடை பெற்றுச் சென்றான் வருணன்.

நான்கு பக்கமும் மதுரையை சூழ்ந்த மேகங்கள் உயர்ந்து நான்கு மாடங்களாகக் கூடியதால் அன்றுமுதல் மதுரை “நான்மாடக் கூடல்” என்ற சிறப்பு பெயர்பெற்றது.