
தேவையான பொருள்கள்:
கத்திரிக்காய் – 1/2 கிலோ
புளி – நெல்லிக்காய் அளவு
கறி மசாலாப் பொடி(1) – தேவையான அளவு
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
தாளிக்க – 2 டேபிள்ஸ்பூன் எண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, லேசான புளித் தண்ணீரில் உப்புப் போட்டு குழையாமல் வேக வைத்து நீரை வடிய வைக்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணை, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வடிய வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, மஞ்சள் தூள், அத்துடன் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு, சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறவும்.
கறி மசாலாப் பொடி(1)யைத் தூவிக் கலந்து மேலும் சிறிது நேரம் நன்றாக வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
புளித் தண்ணீரில் தனியாக வேகவைத்துக் கொட்டாமல், வாணலியில் தாளித்து வதக்கும்போதே புளித் தண்ணீர் சேர்த்தும் வதக்கலாம். காய்கறியின் சத்து இதனால் வீணாகாமல் தடுக்கலாம்.
இதே மாதிரி வாழைக்காய், கொத்தவரங்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற நாட்டுக் காய்களிலும் செய்யலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சாம்பார் சாதம், பிசிபேளா, தயிர் சாதம், எலுமிச்சை, தேங்காய் போன்ற கலந்த சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இரண்டு தக்காளி, வெங்காயம் இரண்டு பச்சை மிளகாயை கூட நறுக்கிப் போட்டு வதக்கினால் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய் கூட நறுக்கிப் போட்டு வதக்கி, உதிர வடித்த சாதத்துடன் கலந்தால் ‘வாங்கிபாத்’ மாதிரி சுவையாக இருக்கும்.