
ஒரு புகழ் பெற்ற குருவின் குருகுலத்தில் குருவுக்கு பிரியமான சீடன் ஒருவன் இருந்தான் . அவன் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக குருவுக்கு மனப்பூர்வமாக அடிபணிந்து தொண்டுகள் பல செய்து ஆச்சாரங்களிலும் கல்வி கேள்விகளிலும் அப்பியாசங்களிலும் பிரமச்சாரியத்திலும் தேர்ந்து தலைமைச்சீடன் என்பதான தகுதிகள் அடைந்திருந்தான் .குருவும் தனக்கடுத்த பல பொறுப்புகளை மெல்ல அவன் வசம் ஒப்படைத்திருந்ததே அவன்தான் தலைமைச்சீடன் என்பதான கருத்தை பலருக்கும் உண்டாக்கியிருந்தது
இந்த நிலையில் சீடன் குருவிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒரு விண்ணப்பம் வைத்தான் ,
குருவே . தாங்கள் அனுமதித்தால் இவ்விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன் . தங்களை குருவாக அடைந்ததும் தங்களுக்கு சேவை செய்வதும் தங்களை அடுத்து ஞானத்தை பெறுவதும் எனது முற்பிறவி புண்ணியமாகும் ..
ஆசையை அறவே அறுத்து விட்டு சேவை செய்வது ஒன்றே முழுமையடையும் வழி என்பதை பொறுமையோடும் சிரத்தையோடும் தங்களிடம் கற்றிருக்கிறேன்
இப்போது ஒரு சின்ன ஆசை . நமது குருகுலம் சீடர்களால் நிரம்பி வழிக்கிறது . ஆனாலும் தொலைதூரத்தில் உள்ளவர்களால் இங்கு வர இயலவில்லை . அடியேனை தொலைதூரத்தில் தனியாக குருகுலம் தொடங்க அனுமத்தித்தால் நானும் குரு என்ற ஸ்தானத்தில் அப்பகுதியில் பலரை மேன்மையடைய செய்யமுடியும் .
நல்லது பல ஆண்டுகளாக எனக்கு பிரியமான சீடனாக இருக்கிறாய் . குருவாகும் தகுதியும் உனக்கு இருக்கிறது . ஆனாலும் பிரம்மாச்சாரியும் சந்நியாசியுமான என்னிடம் கிடைக்காத ஒரு கல்வி நான் கொடுக்கும் முகவரியில் உள்ளவரிடம் ஒரு இரண்டு ஆண்டுகள் நீ கற்றுக்கொண்டால் தனியாக குருகுலம் தாரளமாக தொடங்கலாம் .
அவரிடம் சென்று நான் அனுப்பியதாக கூறி அவர் இட்ட வேலையை செய்து பயிற்சி பெற்று வருவாயாக என ஒரு முகவரிக்கு கடுதாசி ஒன்றையும் வழிசெலவும் கொடுத்து அனுப்பி வைத்தார்
சீடன் பயணம் செய்து அம்முகவரியை அடைந்தபோது அவனுக்கு பகீரென்றது . அங்கு ஒரு கசாப்புக்கடை இருந்தது . அதில் கசாப்பை ஒருவர் கூறு போட்டு விற்றுகொண்டிருந்தார்
சந்தேகம் அடைந்தவனாக முகவரியை இரண்டு மூன்று பேரிடம் விசாரித்தபோது அது அந்த நபரே என்றும் சொல்லிவிட்டனர்
பல ஆண்டுகள் பிரமச்சாரியத்திலும் சந்நியாசத்திலும் அப்பியாசம் உள்ள நான் இந்த கசாப்புகடைக்காரனிடமா பயிற்சி பெறுவது . ஒருவேளை இவரோடு தொடர்புள்ள மகான் ஒருவர் இருக்ககூடும் . இவர் மூலமாக அவரிடம் சேர குரு முகவரி கொடுத்திருக்கலாமோ ? சரி எதற்கும் அவரிடமே இந்த கடுதாசியை கொடுத்து விசாரிப்போம்
கடுதாசியை வாங்கி பார்த்த கசாப்புகடைக்காரர் உள்ளே வரச்சொல்லி அமரச்சொன்னார் . குருவின் பெயரை ஒரு நண்பர் போல சொல்லி அனுப்பிவிட்டாரா எனக்கேட்டார் . சரி இங்கிருந்து கூட மாட வேலை செய்யுங்கள் என்றார் .
சீடன் ரெம்ப நொந்துபோனான் . ஆனாலும் குரு இட்ட கட்டளையை சிரத்தையோடு செய்வதை கற்றிருந்த அவன் அதை தள்ளுவதற்கு இயலாது என்பதால் அரைமனதோடு தலையாட்டினான் .
வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரிடம் உள்ளார்ந்த அன்போடு பேசுவதும் ; தங்கள் பிரச்சினைகளை அவரிடம் பகிர்ந்துகொள்வதும் அவர் பொறுமையாக கேட்டுக்கொள்வதும் கொஞ்சம் வித்தியாசமாக சீடனுக்கு தெரிந்தது
விற்பனை முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு சென்றபோது தனது மனைவியிடம் இன்னார் நம்மிடம் இவரை வேலைக்கு அனுப்பியதாக சொல்லி தங்க ஏற்பாடுகள் செய்தார் . அங்கு அவர் தாய்தகப்பனுக்கு சேவை செய்வதும் பிள்ளைகளுக்கு போஷிப்பதும் உற்றார் உறவினர் களோடு உறவுகளை பேணுவதும் மாலை கோவிலுக்கு தவறாது சென்று பிரார்த்திப்பதும் ஆன அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்த சீடனுக்கு இல்லறவாசியின் அன்றாட வாழ்விலும் கர்மயோகம் வெளிப்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தான் .அவனுக்கு காலபோக்கில் தனது குருவிடம் மரியாதை உண்டாகிவிட்டது .
அவர் அதிகமாக பேசுவதில்லையானாலும் தெளிவுகள் கேட்டால் ஆழ்ந்த வார்த்தைகள் கடவுள் நம்பிக்கை கடவுளிடம் சரணாகதி இருப்பதை கண்டான் .
பிறகு ஏன் இந்த தொழில் செய்கிறீர்கள் என்றால் தனது முன்னோர்களின் மூலமாக இந்த தொழில் வாய்த்தது . இறைவனால் வாய்த்த தொழிலை தொழிலுக்காக செய்கிறேன் . அதை அவராகத்தான் மாற்றித்தரவேண்டுமே ஒழிய அதை நாமாக மாற்றுவது சரியாகாது . இந்த தொழிலை இங்கிருந்து சென்றவுடன் என் மனதிலிருந்தும் விடுவித்துக்கொள்கிறேன் என்றார்.
கீதை 18: 45 தன்னியல்பாகவே தன்னை வந்து பற்றும் கர்மங்களை – தொழிலை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் லயித்து செய்யும் மனிதன் பூர்ணத்தை நோக்கி ஈடேற்றம் பெறுவான் . தொழிலுக்காக தொழிலை செய்து அதை நான் செய்தேன் என்ற பற்றை விடுவித்துக்கொள்கிரவன் சகல சித்திகளையும் அடைவான் என சொல்லப்பட்டுள்ளதை கேட்டுணர்வாயாக