Header Banner Advertisement

கல்லறையில் கேட்ட கட்டபொம்மன் குரல்..!


002

print
யணம்’ தொடருக்காக எப்போதும் வெளியிடங்களுக்கு செல்லும் நான், இந்தமுறை எனது பயணத்தை மதுரையிலேயே முடித்துக்கொன்டேன். அதற்கு காரணம் மார்கஸ் க்ளேயர்..!
தூய இருதய ஆலயம்
தனுஷ் நடித்து வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்தில் டாப்ஸிக்கு அப்பாவாக நடித்தவர்தான் இந்த மார்கஸ். படத்தின் பாதி காட்சிகளை ஆக்ரமித்து இருக்கும் மதுரை ரயில்வே காலனி படபிடிப்பிற்காக டெல்லி வரை பேசி அனுமதி வாங்கித் தந்ததில் இவரது பங்கு பெரியது. அப்படி பாடுபட்ட தங்களுக்கு ஒரு நன்றி கூட வெற்றிமாறன் படத்தில் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் இவருக்கு இப்போதும் இருக்கிறது.
மார்கஸ் க்ளேயர் ஒரு ஆங்கிலோ இந்தியர். அவர்களுக்கென்று தனி கலாசாரம் உள்ளது. தனிக் கல்லறை இருக்கிறது. அவற்றைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் ஜாக்ஸனின் கல்லறை மதுரையில் இருப்பதாக கூறினார். அப்போதிருந்தே அந்தக் கல்லறையை பார்த்துவிட வேண்டும் என்று மனம் பரபரத்தது.

“ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நம்ம சர்ச்சுக்கு வந்துவிடுங்கள். கல்லறையின் பொறுப்பாளர் ஆராதனைக்கு வருவார். அவரிடம் நீங்கள் அனுமதி பெற்று கல்லறையைப் பார்க்கலாம்.” என்றார் மார்க்ஸ். நானும் ஞாயிறு காலை 8.30 மணிக்கு தேவாலயம் சென்றுவிட்டேன். அன்று பார்த்து கல்லறை பொறுப்பாளர் வரவில்லை. தேவாலயத்தை பார்வையிட்டேன். மதுரையின் பழமையான தேவாலயங்களில் இதுவும் ஒன்று.

கல்லறைக்கு போவதற்கு முன் விஷேசமான இந்த ரயில்வே காலனி தேவாலயத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆங்கிலோ இந்தியர்கள் வழிபடுவதற்காக ‘ரயில்வே கம்பெனி’ 1927-ல் இந்த தேவாலயத்தைக் கட்டியது. அன்றைக்கு ரயில்வேக்கு ‘இந்தியன் ரயில்வே’ என்ற பெயரெல்லாம் கிடையாது. ரயில்வே கம்பெனி என்பதுதான் பெயராக இருந்தது. ரயில்வே கட்டிக் கொடுத்த தேவாலயம் இது.

பொதுவாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மதுரை வரும் கிறிஸ்துவர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை மொழிதான். மதுரையில் இருக்கும் அனைத்து தேவாலயங்களிலும் தமிழிலேயே வழிபாடு நடப்பதால் அவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. ஆங்கில மொழியில் சேவை நடக்கும் தேவாலயம் ஒன்றிருந்தால் மிக நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள். மதுரையில் இருக்கும் பல கிறிஸ்த்துவர்களுக்கே தெரியாத சங்கதி இந்த தேவாலயத்தில் ஆங்கிலத்தில் ஆராதனை நடைபெறுகிறது என்பது.

1978-ல் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இன்றைய தோற்றத்தைப் பெற்றது. இந்த தேவாலயத்தில் உள்ள இயேசு நாதர் சிலை பெரியார் பஸ் நிலையம் அருகில் இருந்த மற்றொரு தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. 1944-ல் பெரியார் பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட அந்த தேவாலயம் 2004-ல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல கோயில்களை மதுரை மாநகராட்சி இடித்தபோது அந்த தேவாலயமும் இடிபட்டது. அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த இயேசு நாதர் சிலையை இங்கு கொண்டு வந்து வைத்து வழிபட தொடங்கினார்கள்.

பாரம்பரிய கட்டடக்கலையை ரசிப்பவர்களுக்கு ரயில்வே காலனியில் உள்ள தூய இருதய ஆலயத்தின் கலையம்சம் கொண்ட தேவாலயமும் கட்டாயம் பிடித்துப்போகும். ஆங்கிலோ இந்தியர்கள் ஒன்றுகூடும் இடமாக இன்றைக்கும் இந்த தேவாலயம் இருக்கிறது.

கல்லறையின் நுழைவுவாயில்
தேவாலயத்தை ரசித்த பின்னர் மார்க்ஸ் கல்லறை பொறுப்பாளரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அவரிடம் தொடர்பு கொண்டேன். வீட்டுக்கு அழைத்தார். சென்றேன்.கல்லறையின் பொறுப்பாளரான அவர் பெயர் ப்ளாசிட் ஃபெர்னாண்டஸ். அவர் மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது ‘மதுரை ஐரோப்பியன் கல்லறைகள் குழு’வின் கெளரவ செயலாளராக இருக்கிறார்.
கல்லறைகள் பற்றி நிறைய பேசினார். இன்று நிதிநிலை மோசமாகி, கிடைக்கும் சொற்ப நன்கொடைகளை வைத்துதான் கல்லறையை பராமரிக்கிறோம் என்ற வேதனையையும் தெரிவித்தார். அவரிடம் இருந்து விடைப்பெற்று கல்லறை நோக்கி பயணித்தேன்.
மதுரை மாநகரின் பிஸியான காக்காதோப்பு பகுதிக்கு அருகில் அமைதியாக இந்தக் கல்லறை தோட்டம் இருக்கிறது. மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கிலீஷ் சிமிட்ரி, ஈரோப்பியன் சிமிட்ரி, காக்காதோப்பு கல்லறை, ஆங்கிலேயர்கள் கல்லறை என்று பல பெயர்கள் கொண்டு இந்தக் கல்லறையை மக்கள் அழைத்தாலும், இதன் உண்மையானப் பெயர் ‘செயின்ட் ஜார்ஜ் இங்கிலீஷ் கல்லறை’ என்பதுதான். இதன் அருகிலே இன்னொரு சிறிய கல்லறையும் இருக்கிறது. அதன் பெயர் ‘அமெரிக்கன் மிஷன் கல்லறை’.
இரண்டுமே ஆங்கிலேயர்களுக்கானது. முன்னது இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்களுக்கானது. இரண்டாவது கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்த அமெரிக்கர்களுக்கானது. இரண்டிலுமே சுவராசியமான சங்கதிகள் நிறைய புதைந்திருக்கின்றன.

கல்லறைக்குள் நுழையும்போதே “இவர்கள் ஒரு போதும் இறப்பதில்லை. விலைமதிப்பில்லா வாழ்க்கையை உருவாக்குவதற்காகவே வாழ்ந்தவர்கள்” என்ற வாசகம்தான் என்னை வரவேற்றது. 246 வருடங்கள் சரித்திரத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இந்தக் கல்லறையில் நுழைவதே இனம் புரியா உணர்வை தந்தது.

முகலாய சுல்தான்களின் ஆட்சியின் கீழ் மதுரை இருக்கும்போதே இந்தக் கல்லறைக்கான இடத்தை விட்டுக்கொடுத்திருந்தார் கர்நாடகா நவாப். 1770-ல் கல்லறை உருவாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஆங்கிலேயர்களை பாடாய்படுத்தியது இந்தியாவின் வெப்பம்தான். இந்த வெப்பம் தாங்காமல் மிகக் குறைந்த வயதிலேயே அவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். ஆங்கிலேய ஆண்கள் 30 வயதுக்குள்ளும், பெண்கள் 20 வயதுக்குள்ளும், ஏராளமான குழந்தைகளும் தொடர்ந்து இறந்து கொண்டே இருந்திருக்கிறார்கள். தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்களைவிட மரண சடங்குக்கான கூட்டங்கள் அதிகமாக நடந்தன.
காலரா நோயால் மாண்ட குழந்தைகள் மண்ணோடு மண்ணாக
அந்தக் காலக்கட்டத்தில் தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக போரிட்டு இறந்துபோன ராணுவ அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை அடக்கம் செய்வதற்காக ஒரு கல்லறையை மதுரையில் உருவாக்கினார்கள். 1773, மே மாதம் 18-ம் தேதி கிழக்கிந்தியக் கம்பெனியின் படைத் தளபதியான கிறிஸ்டோபர் தியோபிலிஸ் உடல் இங்கு முதல் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது செயின்ட் ஜார்ஜ் இங்கிலீஷ் கல்லறையில் 522 ஆங்கிலேயர்களும், அமெரிக்கன் மிஷன் கல்லறையில் 150 ஆங்கிலேயர்களும், 115 ஆங்கிலேயக் குழந்தைகளும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். ஒரே வருடத்தில் இத்தனைக் குழந்தைகள் இறந்ததற்கு 1837-ல் மதுரையைத் தாக்கிய காலரா நோய்தான் காரணம். அவர்களுக்கான சிறிய கல்லறைகள் இன்று மண்ணோடு மண்ணாக மறைந்து இருக்கின்றன. ஒவ்வொரு சிறிய சிலுவையும் அந்த துயரத்தை இன்றும் பறைசாற்றியபடி காட்சித் தருகின்றன.
ஜாக்ஸன் கல்லறை
அங்கிருந்த ஒரேயொரு கல்லறை மட்டும் மற்றதைவிட வித்தியாசமாக இருந்தது. அதை விநோதமாகப் பார்த்தேன். “இதுதான் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி கேட்ட கலெக்டர் ஜாக்ஸன் துரையோட கல்லறை.” என்று கல்லறைக் காவலாளி விளக்கம் சொல்ல, அந்தக் கல்லறையை இன்னும் ஆர்வத்தோடு பார்த்தேன்.
மனதுக்குள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஓடியது. ஜாக்ஸனும் கட்டபொம்மனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் உணர்ச்சி மிகுந்த காட்சி. படம் மனத்திரையில் ஓட கல்லறைக்குள் இருந்து கட்டபொம்மனின் குரல் கேட்டது.
“வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணி புரிந்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”.
மீண்டும் மீண்டும் கட்டபொம்மன் குரல் கேட்டபடியே இருந்தது. நான் கல்லறையில் ஜாக்ஸன் பெயர் எங்கிருக்கிறது என்று தேடினேன். பெயரைக் காணவில்லை. இது கொஞ்சம் காஸ்ட்லியான கல்லறை. அதனால், ஜாக்ஸன் பெயர் தங்கத்தாலும் இதர விவரங்கள் வெள்ளி எழுத்துக்களாலும் இருந்ததாம். 50 வருடங்களுக்கு முன்பு இங்கு காவலுக்கு இருந்த கல்லறைக் காவலாளி அந்த தங்க மற்றும் வெள்ளி எழுத்துக்களை பெயர்த்தெடுத்து விற்றுவிட்டானாம். அதனால், இப்போது எந்த விவரமும் இல்லாமல், அந்த பிரமாண்ட கல்லறை வெறுமனே காட்சியளிக்கிறது.
இந்தக் கல்லறையில் காணப்படும் சிலுவைகளில் உள்ள கலைப்படைப்புகள் வியப்பூட்டும் அற்புதங்களாக உள்ளன. இங்கு அடக்கமானவர்களில் சாமுவேல் சாயரும் அவரது மனைவியான ஐவி எட்னா சாயரும் வித்தியாசமானவர்கள். இந்தியா மீது அதிலும் மதுரை மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர்கள். இவர்களின் மதுரைப் பாசம் மனதை உருக்குவதாக உள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் சாமுவேல் சாயர் மதுரை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். பின்னாளில் இந்தியா விடுதலை அடைந்ததும், அவர் தனது குடும்பத்துடன் அவரது சொந்த நாடான இங்கிலாந்துக்கே சென்று விட்டார். தாய் நாட்டில் இருந்தபோதும் அவர் வேலை செய்த இந்தியா பற்றிய நினைவு அவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்தது. அவரது எண்ணம் முழுவதும் மதுரையை சுற்றி சுற்றியே வந்தது.
சாமுவேல் சாயர் தம்பதிகளின் கல்லறை
தான் மரணம் அடைந்தால் தனது உடலை மதுரையில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று தனது குடும்பத்தினரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். 1974-ல் லண்டனில் அவர் மரணம் அடைந்தார். அவரது விருப்பப்படியே அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது மனைவி ஐவி எட்னாவும் தனது கணவரைப் போலவே தானும் இறந்தப் பின் தன்னையும் மதுரையில் கணவருக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1993-ல் எட்னாவும் லண்டனில் மரணமடைய அவரையும் விமானம் மூலம் மதுரை கொண்டு வந்து இந்தக் கல்லறையில் கணவனுடன் சேர்த்து அடக்கம் செய்தனர். இந்த தம்பதி மீது எனக்கு அளவற்ற மரியாதை கூடியது. காதலையும் மண் மீது கொண்ட பாசத்தையும் ஒருசேர இவர்களிடம் காணமுடிந்தது.
இதுபோக சாமுவேல் ஈவாஸ் கல்லறையும், அமெரிக்கன் மிஷன் கல்லறையில் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக இருந்த வில்லியம் மைக்கேல் ஜம்புரோ கல்லறையும் அதே கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்த எட்கர் மார்டின் ஃபிளின்ட் கல்லறையும் இருக்கிறது. இப்படி பல பெரியோர்களின் கல்லறையை இங்கு காண முடிகிறது.
இந்தக் கல்லறை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதால் முன் அனுமதி பெற்றுதான் உள்ளே செல்ல முடியும். நூற்றாண்டுகளைக் கடந்த மிகப் பழமையான கல்லறைத் தோட்டத்தில் இப்போதும் ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மதுரையின் பெருமை மிகு அடையாளங்களுள் இந்தக் கல்லறைத் தோட்டமும் ஒன்றாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கல்லறைகள் காலத்தைக் காட்டும் வரலாற்று சாட்சிகள் என்பதில் சந்தேகம் இல்லை.